முருங்கை மரங்களை வெட்டிவிடுவது நல்லது.

சர்வதேச அடுப்புகளில்
இப்போதுதான் புகைகிறது
நேற்றுகளில் நெஞ்சில் ஈரமின்றி
நீங்கள் எரித்த ஈர விறகுகள்

ஐ .நா.வின்
வெள்ளவிக்குப் போயிருக்கும்
உங்கள் கருப்பு ஆடைகள்
வெளுக்குமோ என்பது பற்றி
ஊர்ஜிதங்கள் இல்லை ..

பூகம்ப ஜப்பானின்
அணு ஆலையாய்
கசிய தொடங்கிவிட்ட
உங்கள் அந்தரங்கங்கள்
அம்பலமாகிய பின்னும்
எரிமலையில் குந்திக்கொண்டு
கடற்கரைக் காற்று
வாங்குவதாக நீங்கள்
சொல்வதை செவிடர்கள் கேட்டு
ஆனந்தப்படுகின்றார்கள்.

இலட்ச்சங்களின் வாழ்வை
இருட்டாக்கிய இலட்சியம் வென்று ,
விழித்துக்கொண்டு
கனவு காணும்
வசதியை கொடுத்த உங்களால்
குடர்கள் உலகம் பற்றி
உணர்ந்துகொண்ட நாங்கள்
எங்களுக்கான மொழியிருந்தும்
ஊமையாக்கப்பட்டதில்
ஊமைகளின் அவஸ்தை பற்றியும்
உணர்ந்து கொண்டோம்

என்றாலும் எங்கள்
உரிமைக்குரல் கேட்டும்
கேளாது நடிக்குமுங்கள்
செவிட்டுத்தன்மையை உணரத்தான்
எங்களால் முடியவில்லை.

ஒரு வேளை நமது
அண்டைய தேசங்களின்
ஆலோசனை அழுக்கு உங்கள்
செவிகளை சேதப்படுத்தி விட்டதோ
தெரியவில்லை.

இல்லை நீங்கள்
நவீன வேதாளம்
என்பதாலோ என்னவோ
நாங்கள் கூறும் எங்கள்
தீர்வுக்கதைகளைக் கேட்டு
உங்கள் பழைய இனவாத
முருங்கையில் ஏறிக்கொள்கிறீர்களோ
என்பது புரியவில்லை.

இனிமேல் உங்களிடம்
எங்கள் கதை கூறுமுன்
அந்த முருங்கை மரங்களை
வெட்டிவிட்டு வருவதுதான்
நல்லதுபோலும்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-Nov-12, 3:04 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 97

மேலே