பாவப்பட்டக் கனவு
எனது கனவுத்தீவுகளில்
புஷ்பிக்கப்பட்டிருக்கும்
ஏகாந்த வாசனை
எவர் நாசிகளையும்
ஊடறுக்காது எனும்
நம்பிக்கையின் உறுதி
உடும்பின் பிடியை
வென்று நிற்கிறது
அங்கென் சாலைகளில்
என் நிழலுக்கும்
அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்
நம் தேசத்து
பாதுகாப்பு பிரதேசம் போல்
நான் நடந்தால்
என் பாதச்சுவடுகளின்
தடங்கலோ
நா வாய் திறந்தால்
எதிரொலியோ இல்லாத
அந்த உன்னத தீவில்
கடவுள் வாழ்வதற்கான
உருவமில்லா கூடாரம்
உயர்ந்து நிற்கும் என்றாலும்
எனக்கேக் கூட அது தெரியாது.
நம்பத்தெரியாத
யாரிடம் சொன்னாலும்
என்னை பைத்தியமென்று
க(சொ)ல்லால் அடிக்கப்போகும்
உலகத்தின் யதார்த்த
விதிகளுக்கு
மாற்று சிகிச்சை
அளிக்கத்தெரியாதபோதும்
விஞ்ஞான ரீதியில்
பரீட்ச்சிக்கும் நப்பாசையால்
ஒரு எலியைதேடினேன்
எலியை பிடிக்க
கூட்டை திறந்து
இரையை வைத்து விட்டு
இரவில் படுக்கப் போன
என் காதுகளில்
எலி பிடிபட்ட ஓசை
காதில் தேன்வார்க்க
கனவின் அனுபவம்தனை
எலியிடம் சொல்லப்போகும்
கனவுகளுடன் உறங்கிப்போன நான்
விடியலில் எலிக்கூட்டை
எட்டிப்பார்த்தேன் .
கூட்டினுள்ளே
உண்டக் களைப்பு மாறாமல்
உறங்கிக் கொண்டிருக்கும்
களைப்பது பாவமென்று
அரவம் இல்லாமல் அகன்று விட்டேன்