மலர்கள் திருவாய் மலர்ந்தால்.......
நீங்கள்
இடைஞ்சல் பட கூடாது என்று
நிசப்தமாய்தானே மலர்கின்றோம்
உங்கள்
எண்ணங்கள் மகிழ்ந்திடத்தானே
வண்ணங்களாக சமைகின்றோம்.
நாங்கள்
மொட்டவிழ்கின்றோம் வாழ்ந்திடத்தானே
அளவாய் பறித்திடுங்கள் அன்பாய் கேட்கின்றோம்.
கூந்தலில் சூடி மகிழும்போதே எங்கள்
இன கூந்தல் கிளைகளிலே கொஞ்சம்
இருக்க வைத்து இன்புறுங்களேன்
இன்முகமாய் கேட்கின்றோம்.
எங்களை பறிக்கும் போது ..........
உங்களுக்கு
பூ வாசம் - அது
எங்கள் இன பாஷையின்
பிரிவால் வரும்
கண்ணீர் வாசம் !
தங்கள் கரங்கள் தீண்டியதால்.....
வண்டுகள் கூட .......
எங்களை தீண்டுவதில்லை நாங்கள்
கற்பிழந்து விட்டோம் என்று.
தென்றலும்
எங்களை தழுவுவதில்லை நாங்கள்
தரமிழந்து விட்டோம் என்று
மானிடர் தரம் பார்த்து மாறவில்லை
எங்கள் மணம்.
ஆனபோதும் தரம் பிரிக்கிறீர்கள்
சூட கூடியதென்றும் ..
சூட கூடாததென்றும்...
இனியும் நாங்கள் இப்படி
மலர கூடாது என்று வேண்டி
கொள்கின்றோம் இறைவனை.