நினைவில் வைத்துக் கொள் .....!
மனமொன்றி
மாதவம் புரிந்த நொடிகள்
மருகுகின்ற தோரணைகள்
மாயவனே உன்னைச் சேருமோ
இனியும்
இந்த காலமாற்றங்கள்
இளைப்பாறும் தருணங்கள்
இசைவோடு எனக்கு தருமோ
காதல்
கனிந்து தரும் சுவை
கவனமாய்க் கையாண்டு
கடைக்கண்ணில் மறைப்பேன்
தாமதம்
தருவதுகூட பொறுப்பேன்
தாங்கமுடியாத தவிப்புகள்
தடைகள் தந்தாலோ வெறுப்பேன்
ஆசைகள்
அனைத்தும் கவிதைகளாய்
அட்சதைகள் கைக்கொண்டு
ஆர்வமுடன் காத்திருக்கும்
உன்வருகை
உணர்ந்த வான் அலைகள்
உடனடித் தகவல் தந்துவிட
உயிரோட்டமாய் உணர்வாகும்
ஒரு முறை
ஒரு அடையாள நாளில்
ஒரு அழகான காட்சியில்
ஒரு அற்புதமான சந்திப்பில்
கண்டுகொள்ள
காத்திருப்போம் என்று
கண்ணியமாய் இருக்கும்படி
கட்டுப்பாடுகள் எனை மிரட்டும்
நிச்சயமாய்
நிழல் கூட தொடாத
நியதியாய் வாழ்வேன்
நியமனமான என் நாயகனே
அகவையின்
அளவு கூடினாலும்
அகமது இளமையோடு
அன்பனே உன்னை நோக்கும்
தேடலில்
தேய்கின்ற என் மனம்
தேவன் உன் முகம் காண
தேம்பியே புன்னகைக்கும்
வலிமை
வாங்கி வளர்த்த காதல்
வாள்பிடிக்கும் காவலுக்கு
வன்முறைகள் செய்யாது
நீதான்
நீடூழி வாழும் மங்களம்
நிரந்தரமாய்த் தரவேண்டும்
நினைவில் வைத்துக் கொள்..!!!
****************************************************************
இதை தேடலின் உச்சமான நண்பர் அஹமது அவர்களின் ''எனக்கானவள் எங்கோ வாழ்பவள் ''
என்ற கவிதைக்கான பதில் அல்லது பரிசுக் கவிதையாக சமர்பிக்கிறேன்.....