இப்படிக்கு.....உன் அன்பு மனைவி

தாயின் மடி விட்டு
வெளியே வந்ததும் நீ
தனியான ஒரு மனிதன் 

தாரமென்று பெண்ணொருத்தி
உனை நம்பி வந்த பின்னே 
பொறுப்பான ஒரு கணவன்

காதல் காமம் இரண்டு மட்டும்
கேட்கவில்லை அவள் உன்னை
தன் கவலைகளும் கேட்க வேண்டும் என தவிக்கிறாள் உன் பின்னே

கறந்த பாலும் என் தாயும்
பரிசுத்தம் என்னும் நீ
தள்ளாத காலத்தில்
தாரமே தாயாவாள் அறிந்திடு நீ 

பெண் என்ற பிறவிக்கு
பதுக்கி வைக்கத் தெரியாது

பாசமென்ற போதும்
கோபமென்ற போதும்

மடை திறந்த வெள்ளம்  தான் 
மறைத்து வைப்பதில்லை தான்

பெற்ற பிள்ளை வாழ்வினிலே
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
பொறுப்பு பாதி உனக்கு தான்

மனைவி என்ற மாது அவள்
சிரித்தாலும் அழுதாலும்
பொறுப்பு எல்லாம் உனக்கே தான்

தெரியாமல் தவறிழைக்கும் பிள்ளையை
அன்பால் திருத்தும் நீயேதான்

தாரமாகி தன் வாழ்வை உனக்காக
தாரை வார்க்கும் பெண்ணவளை
அரவணைத்தும் சென்றிடனும்

உனக்கொரு துயரமென்றால்
துடிதுடித்துப் போகிறவள்

அவள் துயரம் துச்சமென்றால்
துவண்டு தான் போகிறாள் அதை
நீ சொல்லி கேட்கையிலே....

பெண்ணாகப் பிறந்தவள்  கணவனிடம்
கேட்பதெல்லாம் ஒன்றே தான்

அன்பாய் அவள் கரம் பற்றி
ஆதரவாய் தோள் சேர்த்து

"அருகே நான் அறிவேன் உன்னை" என்று உந்தன்
கண்கள் கூறும் கருணையான
வார்த்தை என்ற வரம் அது

பெண்ணான அனைவருக்கும் படித்தவுடன் புரிந்து விடும்

புரிகிறதா ஆண்மகனே
புதிதான என் கவிதை

பத்தி பத்தியாய் படித்த பின்னும்
பதியவில்லை கருத்தென்றால்

விதி விட்ட வழி என்று
வாழ்வதை விட
வழி தான் வேறில்லை
பெண்களுக்கு

எழுதியவர் : (8-Dec-12, 1:23 am)
பார்வை : 332

மேலே