தேர்தல் முதலீடு

பாராளுமன்ற தேர்தலென்றால்
தாராளமாய் பணம் கிடைக்கும்...
இடைத்தேர்தல் வந்தாலும்
இது போலவே கிடைத்திருக்கும்...
பணம் மட்டும் தந்தால் போதும்
எமனுக்கும் வாக்களிப்போம்
இறைவனையே தோற்கடிப்போம்...!


எங்களின் பலம்கொண்ட
பசிமறந்த உழைப்புக்கு
பலனேதும் கிடைத்ததில்லை...
பல போராட்ட குழுவிருந்தும்
பசிபோக்க யாருமில்லை...
பணம்தந்தால் ஓட்டுண்டு
தேர்தலென்று வந்துவிட்டால்
கடவுளுக்கே வேட்டுண்டு....!


சோறள்ளி உண்பதற்கும்
சேறள்ளி உழைப்பதற்கும்
உண்டான கையென்றாலும்
தேர்தலுக்கு தேடி வந்து
ஒற்றை விரலில் மைபூசி
வாக்களிக்க பலநூறு பணமளிக்கும்
கூட்டமிங்கே கூடிடுச்சு...!


எவன் வென்றால் நமக்கென்ன
எதிர்கொள்ள தேவையென்ன...?
பணம் வந்தால் போதுமென்று
பழகிக்கொள்ள கற்றுக்கொண்டோம்
வாக்கு மட்டுமே எங்கள் முதலீடு
தேர்தல்தான் எங்களுக்கு பலியாடு...!

எழுதியவர் : ச.இமலாதித்தன் (27-Oct-10, 12:23 pm)
சேர்த்தது : emalathithan
பார்வை : 327

மேலே