புதைக்க ஓர் இடம் தேடி........

இதோ..............
இறுதி மரியாதை செய்யப்பட்ட
என் காதல்.....
கண்ணீரால் அபிஷேகம் செய்து
கைகளில் ஏந்தி வீதிகளில்
விழி இழந்து நடந்து செல்கிறேன்...
புதைக்க ஓர் இடம் தேடி...

எங்கே புதைப்பது?

மக்கி போன மண்டை ஓடுகளும்
எலும்பு துண்டுகளும்
புதையுண்டு கிடக்கும் இந்த
இடுகாட்டில் புதைப்பதா???

வேண்டாம்..
வேண்டாம்
என் காதல்,
உருவமில்லாதது
உன்னதமானது
யார் கண்ணிற்கும் தெரியாத
உணர்வெனும் குழந்தை...

வேறு எங்கே புதைப்பது ?

பாதாளத்திலா?
என் காதலின்
பாரம் தாங்க முடியாமல்
வெடித்து சிதறி விட்டால் என்ன செய்வது ??
அங்கும் வேண்டாம்

வானுலகத்திலா ?
தேவர்கள், தேவதைகள்
என் காதலின் சமாதி கண்டு
வேதனையில், வணங்க வரும்
பக்தருக்கு வரம் தர மறந்துவிட்டால்
என்ன செய்வது?

அங்கும் வேண்டாம்....

சூரியனில் புதைத்து விடவா?
என் காதலை பார்த்து
கண்ணீர் சிந்தியே
வெப்பம் குறைந்து குளிர்ந்து விட்டால்
இம்மண்ணில் வாழும் உயிர்கள்
அழிந்து விடும்...

அங்கும் வேண்டாம்.....

நிலவில் புதைத்து விடவா?
காதலர்களுக்கு காவியமாய்
காட்சி தரும்,
காதலும் காதலிக்கும்
சந்திரனில்
என் காதலை புதைப்பதா ?

அங்கும் வேண்டாம் ....

நட்சத்திரங்களில் புதைப்பதா
நவ கோள்களில் புதைப்பதா
நடு வானில் புதைப்பதா
நடுவே வீற்றிருக்கும்
நாதன் தலையில் புதைப்பதா

இதோ ஓர் இடம், அது
உன்னிடம்...

உன்னாலே துளிர் விட்டு
வேர் விட்டு,
வளமாக வளர்ந்த காதல்
துடி துடிக்க பிடிங்கி எறியப்பட்ட
உன் கைகளாலே மடிந்த
என் காதலை
உன் காலடியிலேயே
புதைத்து விடு....
உன் பாதம் பட்டு
மோட்சம் பெற்று
முக்தி அடையட்டும்..


-PRIYA

எழுதியவர் : PRIYA (16-Dec-12, 9:22 pm)
பார்வை : 376

மேலே