எங்கள் வீட்டு விழா
சின்ன வயதிலிருந்து
முகம் சுருங்கப் போகும்
இந்த வயது வரை
பார்த்து விட்டேன்
பல நூறு திருவிழா!
புத்தாடை உடுத்தி
முற்றம் தெளித்து
மாக்கோலம் போடுவார்கள்
தோழியர்கள்.......
கேட்டால்
அம்மனுக்கு திருவிழா என்பார்கள்!
ஏதாவது பண்ட பலகாரங்களை
முதலாளி வீட்டிலிருந்து
கொண்டு வருவாள்
ஆச்சி......
கேட்டால்
தீபாவளிப் பலகாரம் என்பாள்!
அடிமாட்டு கூலிக்கு
வேலை செய்யும் அம்மா
சில நூறு தாளோடு
சிரித்துக் கொண்டு வந்தால்
அன்றைக்கு பொங்கல்......
என் தோழியர்கள்
வயதுக்கு வந்தபோது
பூப்புனித நீராட்டு விழாவாய்
கொண்டாடினார்கள்......
நானும்
வயதுக்கு வந்தேன்
நீ
பெரிய மனுசி ஆகிட்ட
வீட்டுக்கு வெளியே
நிற்கக் கூடாது என்றார்கள் ....!
வேலைக்குப்
போனோமா வந்தோமான்னு
ஒதுங்க சொன்னார்கள் !
திருமண வீடுகளில்
மேள தாளத்தோடு நடக்கும்
மாப்பிள்ளை ஊர்வலம்
தெள்ளத் தெளிவாய் தெரியும்
தென்னை கீற்று துவாரம் வழியாய்...!
இப்படியாய் ஊர்தோறும்
நானும் பார்த்து விட்டேன்
எத்தனையோ விழாக்கள்?
கல்யாணமான தோழியர்க்கு
சில மாதங்களில்
வளைகாப்பு விழா!
அப்புறமாய் பிள்ளைக்கு
பெயர் சூட்டும் விழா!
காதணி விழா!
என்னென்னமோ விழாக்கள்?
இதில் ஒரு விழா கூட
நம் வீட்டில் நடக்கவில்லையே
என்ற ஆதங்கம்
இன்று உடைந்தது !
அந்திவேளை
வேலை முடிந்து
வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்....
வாசலில்
பெரியவர்கள் கூட்டம்.....
கண் கலங்கியவாறு
வேகமாய் போனேன்!
எல்லா விழாக்களைப் பற்றியும்
எனக்கு விளக்கம்
கொடுக்கும் ஆச்சி
கிடத்தி வைக்கப்பட்டிருந்தாள்......
எங்கள் வீட்டிலும்
தொடங்கியது "விழா"