நான் தான் பயங்கரவாதி

தனது இரையைத்தேடும்
சிறு குருவியின் பார்வையென எங்கெனும்
என் முகம் உன்னைத்தேடி திரும்புகிறது
தேசமிழந்த குடிமகனின்
ஏமாற்றமென.
உனக்குமெனக்குமான சந்திப்பு
நிகழ்காலத்திலேயே
நிகழ்ந்துவிடல் சுகமெனக்கு
உன் மெல்லிய வணக்கம் சொல்லுதலால்
நீண்ட ஆயுளுக்கு
நான் தயார்படுதப்படுவேன்
அன்றில்
பலநூறாண்டு ஜீவித மகிழ்வை
ஒரு மணித்துளியில் நான் உணர்வேன்
காலம் கடந்து போயும்
என் மனத்திடைக் கடக்காமலிருக்கும்
மூன்று வருடத்திற்கு
முன்
நீ வைத்து தந்த
தேநீரின் சூடு
இப்போதும் என்னை குளிர்விக்க,
நீ
வீதியில் கயவரினால்
கற்பழிக்கபட்ட செய்தி
என்னை சாகடித்து அச்சாகிறது
நாளைய தலைப்புக்காய்.
ஆனாலும் கூட
நான் தான் பயங்கரவாதி
இவ் உலகுக்கு
என் இனத்தைப் போல !

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (22-Dec-12, 4:28 pm)
பார்வை : 232

மேலே