கல்வெட்டுகள்

பள்ளி செல்லும் சாலையில் காணும்
துள்ளி ஓடும் நாயின் பின்னால்
செல்லும் சிறுவன் பார்வை கண்டு
''பாதையைப் பார்த்து வாடா!'' என்று
செல்ல அம்மா மெல்ல இழுப்பாள்!

பாடசாலையில் பயிலும் நேரம்
பாடும் குயிலின் சத்தம் கேட்டு
தானாய்த் திரும்பும் தலையில் வந்து
ஆசிரியர் குட்டு இடியென வீழும்!

வீட்டுப்பாடம் செய்யும் வேளை
பச்சைக்கிளிகள் சத்தம் உணர்ந்து
சாளரம் நோக்கி சாயும் வேளை
சகோதரி கைகள் காதைத் திருகும்!

கல்விச்சுற்றுலா செல்லும் காலம்
கண்கள் நிறையக்காணக் கிடைக்கும்
இயற்கை எழிலின் வண்ணக் கோலம்
வண்ணத்துப் பூச்சி சிறகைப் போல
எண்ணச்சிறகு தானாய் விரியும்!
புரியாமொழியில் அறிவியல் பெயர்கள்
காதில் வந்து வீழ வீழ
விரிந்தசிறகு மளுக்கென முறியும்!

தானாய் ஒளிரும் வல்லமையுடனே
மிளிரவிழையும் இரத்தினம் ஒன்றை
பிறர் கருத்துக்கள் பதிக்கும் கல்வெட்டாக
மாற்றும் முனைப்பில் இங்கு எத்தனை பேர்?!
தீட்டுவதாகக் கூறிக் கொண்டே
மழுங்கடிக்கலாமோ போர் வாளின் கூர்?!

எழுதியவர் : usharani (23-Dec-12, 1:15 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 211

மேலே