என்னைப்பற்றி நான் ...
காந்தியும் அல்ல கோட்சேயும் அல்ல
கற்பனை கலந்த காவியமும் அல்ல !
சரித்திரம் பேச சாதனையாளனும் அல்ல
என்னைப் பற்றி நானே சொல்லிட !
சாமானிய மக்களில் சாதாரண மனிதன்
சாதி மதம் பாராத பாமர மனிதன்
சமூகம் பற்றியே சிந்திக்கும் மனிதன்
சமுதாயம் திருந்திட ஏங்கிடும் மனிதன் !
தனிமையில் இன்பம் காண்பவன் நான்
இனிமைமிகு இசையை ரசிப்பவன் நான்
உதறிய உள்ளங்களை மறந்தவன் நான்
உதவிகள் செய்திட முனைபவன் நான் !
உதவிகள் பெற்ற பலர் நன்றி மறந்தனர்
உறவாய் நட்பாய் இருந்தவர் துறந்தனர் !
முகத்திற்கு முன்னால் பூசை செய்பவரே
முதுகிற்குப் பின்னால் ஏசுபவரும் அவரே !
சிந்தையின் சிதறல்களை சிந்தாமல் என்றும்
சிற்பமாய் வடித்து கவிதையாய் காட்டுபவன் !
எளிதில் பழகிடும் வழக்கம் இருப்பினும்
விலகிட நினைத்தால் விரைந்து செய்பவன் !
ஆத்திகம் பேசிடும் அன்பர்களும் நண்பர்கள்
நாத்திகமே நான் வழிநடக்கும் கொள்கை !
முன்னோர் என்றும் நினைவில் உண்டு
என்னை மறந்த நெஞ்சங்களும் உண்டு !
தன்மானம் எனது உடன்பிறந்த உறுப்பு
அபிமானம் என்னை ஆளுகின்ற அரசன் !
விளங்கிடும் என்னை ஓரளவு உமக்கு
விளக்கிக் கூறிட எட்டவில்லை எனக்கு !
இன்னும் உள்ளது எனைப்பற்றி சொல்லிட
அதிகம் எழுதினால் அயர்ந்து விடுவீர் !
சுயசரிதம் இல்லை நெடுந்தொடர் எழுதிட
குறைகளும் உண்டு குறுந்தொகைப் போல
படியுங்கள் இதனை முகவுரையாய் முதலில்
முடிக்கிறேன் இத்துடன் முடியா முடிவுரை !
சுயநலம் இல்லை என்னை நீங்கள் அறிந்திட
சுகமுடனே எழுதினேன் என்னைப் புரிந்திட !
பழனி குமார்