‘யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்’ புத்தக கருத்து வெளிப்பாடு (பகுதி 1)

எனக்கு, மதிப்பிற்குரிய நண்பர் அகன் 29.11.2012 மாலையில் வெளியிட்ட ‘யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்’ என்ற புத்தகங்கள் 3 பிரதிகள் அன்பு கூர்ந்து அனுப்பியிருக்கிறார்கள். அதில் ஒன்று தடிமனான அட்டை போட்டு நிரந்தரமாக நம் புத்தக அலமாரியை அலங்கரிக்கும் வண்ணம் தயாரித்திருக்கிறார். இதற்கு எவ்வளவு திட்டமிடல் வேண்டும் என நினைத்து பிரமிப்படைகிறேன்.

எழுத்து தள 35 கவிஞர்களையும், அவர்களின் 57 கவிதைகளையும் அருமையான இத்தொகுப்பின் வழியாக தொகுப்பாசிரியர் அகன் என்ற தி.அமிர்தகணேசன் அவர்கள் ஒரு மாலைப் பொழுதில் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தியுள்ளார். இது மிக மிகப் பாராட்டுக்குரிய அரிய செயலும், முயற்சியுமாகும்.

இப்புத்தகத்தில் வாழ்த்துக்கவியாக நண்பர் திரு.காளியப்பன் எசேக்கியல் ஒரு அருமையான மரபுக்கவிதை அளித்துத் தொடங்கியிருக்கிறார்கள். முனைவர் க.பஞ்சாங்கம் அவர்களின் சிறப்பான அணிந்துரையும், நண்பர் பொள்ளாச்சி அபி அவர்களின் நோக்கவுரையும், திரு.தி.அமிர்தகணேசன் அவர்களின் ஏற்புரையும் இப்புத்தகத்துக்கு அணி சேர்க்கின்றன. வாசகர் நோக்கில் அனுபவம் சொல்கின்ற திரு.மு.ரா என்ற ராமச்சந்திரன அவர்களின் வாசிப்பும், கருத்துரைகளும் ’எழுத்து’ தள நண்பர்களுக்கு மிக ஊக்கமளிப்பவையாகும். இதில் என் எளிய ’வாழ்த்து’ம் அடக்கம்.

அகன் அவர்கள் அனைத்துப் படைப்பாளிகளின் பெரும்பாலான படைப்புகளையும் பாரபட்சமின்றி வாசித்து, முத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்து ஒரு அருமையான மாலையாக ‘யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்’ என்ற தலைப்பில் புத்தக வடிவில் நமக்கு அளித்திருக்கிறார். அனைத்துக் கவிதைகளையும் பலமுறை வாசித்து விட்டேன். எல்லாமே உயர்வான கவிதைகள். எந்த விதத்திலும் ஒன்றுக்கொன்று குறைந்ததல்ல. முதலிலேயே சொல்லியது போல அத்தனையும் முத்துக்கள்.

நான் புதுக்கவிதைகள் எழுத ஆரம்பித்தது சென்ற 2011 ஆம் ஆண்டு நடுவிலிருந்துதான். எழுத எழுத என் முயற்சி கவிதையின் வடிவமும், அதிகபட்ச வரிகள் இவ்வளவுதான் என்ற வரையரையும்தான். மிக நீள்கவிதைகளாக இருந்தால், கருத்துகள் நல்லவைகளாக இருந்தாலும் வாசிப்பதற்கு சற்று சோர்வு தட்டும் என்று என் மனதில் படுகிறது. உதாரணம் மணவாசல் நாகாவின் ’சடலத்தின் சபலம்’, நெல்லை மோசேவின் ’அன்புள்ள மகனுக்கு’ கவிதைகள். ஒரு வேளை எனக்குப் பழக்கமில்லாததால் இந்த உணர்வு இருக்கலாம்.

எழுதும் முறையும் முக்கியமாகும். உதாரணம்:
இரா.அருண்குமாரின் ’குழந்தைகள்’, ரமேஷாலத்தின் ‘எனக்கென்று ஒரு கனவு இருந்தது’ என்ற கவிதைகளின் பாணி நன்று. கே.எஸ்.கலையின் அந்த தெருவோரம் அந்தி நேரம்...! அதே பாணி.

இப்புத்தகத்தின் முதல் பாடலாக கவிஞர் எழுத்து சூறாவளியின் ’முதல் வணக்கம்’ கவிதை ஒரு நல்ல ஆரம்பம். இவருடைய இன்னொரு கவிதை ‘ஆண் மிருகங்கள்!’.

பெண் எப்போது உனக்குத்
தோழியாகிறாளோ – அப்போது
மனிதம் தழைக்கும் மகத்துவம் பிறக்கும்..!

என்று மனிதம் தழைப்பது எப்போது என்ற மகத்துவத்தைச் சொல்லும் ஒரு அருமையான படைப்பு.

ஒவ்வொரு பத்தியும் சமமான வரிகளுடன் இருந்தால் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம். எழுத்து சூறாவளியின் முதல் வணக்கம், இரா.அருண்குமாரின் ’குழந்தைகள்’, பதுளை கலைஞானகுமாரின் கடல் துளிகள், தச்சூர் நிலாசூரியனின் யார் தீவிரவாதி?, உண்மையான வாழ்க்கை, சோழவந்தான் புலமி அம்பிகாவின் கவிஞனின் வாழ்வு, சிங்கப்பூர் அகமது அலியின் மீனவன் பா(ட்)டு, உயிரென்பது துச்சமாக, முத்துநாடனின் எங்கள் விடுதலைதான் வீழ்ந்ததெங்கே?, தென்காசி யாசர் அராபத்தின் வேண்டுவன கொண்டு வா பாரதமே!, இலங்கை ரோஷான் ஏ ஜிப்ரியின் யாதுமாகிய நீயே தாயே!, கோவை ஹரிஹரநாராயணின் மகாகவிக்குச் சமர்ப்பணம், லண்டன் கிரிகாசனின் இழிபிறவி, ஈஸ்வர் தனிக்காட்டுராஜாவின் புதியதோர் நாடு காண்போம், மட்டக்களப்பு ஹே.பிரியாவின் திருமணத்திற்காய் ஒரு பெண் காத்திருக்கிறாள்’ ஆகிய கவிதைகளில் பத்திகளின் வரிகள் சமமாக அமைந்திருக்கின்றன. அனைத்துக் கவிதைகளுமே மிக அருமை. எதையும் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது.

ஈழத்துக் கவிஞர்கள் அகர முதல்வன், ஹே.பிரியா, இலங்கை ஷாஜஹான், அரசபாரதி, மணவாசல் நாகா அனைவரும் அங்குள்ள தமிழர்கள், பெண்கள் நிலை சொல்லும்போது, பதுளை கலைஞானகுமாரின் வரமாகக் கிடைத்த சாபம் கவிதையின்,

இறப்போர்க்குச்
சொர்க்கமுண்டு நரகமுண்டு – இங்கு
இருப்போர்க்கு நரகம் மட்டும்தானுண்டு..!

என்ற செய்தி அறிந்து மிக வேதனையடைந்தேன். ஈழத்தமிழ் மக்கள் எவ்வளவு அவதிப்பட்டிருப்பார்கள் என்பதை பத்திரிக்கைகள் வழியாக நாம் அறிந்துமிருக்கிறோம்.

சிங்கப்பூர் அகமது அலியின் ’மீனவன் பா(ட்)டு’ம், நெல்லை ந.ஜெயபாலனின் ‘நானுந்தான் தேடுகிறேன்’ம் அனுபவித்தாலன்றி தெரியாது, சொல்லமுடியாத மனவருத்தம் ஏற்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Dec-12, 10:31 pm)
பார்வை : 207

மேலே