பூவின் மணம் பரப்பும் காற்று!

நாகூர் ஈ.எம். ஹனீபாவின் மகனைப் பார்த்தேன். அப்பாவைப் போலவே ‘ஹை’ பிச்சில் பிய்த்து உதறுகிறார் என்று அலுவலகத்தில் கூறினேன். உடனடி யாக ஏற்றுக்கொள்ளத் தயங்கியவர்களாய் ‘அப்படியா!’ என்றார்கள்!

எதனையும் நம்பிக்கையுடன் சொல்லும் சுஐப்புக்கும் நம்ப முடியவில்லைபோலும், கவனம் வேறெங்கோ போக வாய் மட்டும் ‘ஹாங்!’ என்றது. பரபரப்போடு பக்கங்களை விரைவாக முடித்து விடத் துடிக்கும் பரசுராமனின் முகத்திலும் என் எதிர்பார்ப்பைக் காணவில்லை. பல்லைக்காட்டி ஒரு சிறு புன்னகை யுடன் நிறுத்திக்கொண்டார். ஏனையவர்களும் அப்படித்தான். கிருஷாந்தி, ரேணுகா வும் கூட புன்னகையோடு சரி.

நல்லவேளை பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் இந்தியா சென்றிருந்ததால் இருக்கவில்லை. அவர் வேறோருவரை ஹனீபாவின் வாரிசு என என்னிடமே புகழ்ந்திருக்கிறார். எனக்கு பொய்க்காக, முகஸ்துதிக்காக பல்லிளித்து தலையசைக் கத் தெரியாது. பட் பட்டென்று முகத்திற்கு நேரே சொல்லி விடுவேன். அதனால் பலருக்கு என் மீது எரிச்சல். அது வேறு விடயம்.

ஹனீபா மகன் விடயத்தில் விட்டுக்கொடுக்க மனது தயாரில்லை. நாகூர் ஹனீபா என்ற குரல் இஸ்லாமியர்களை மட்டுமன்றி வேற்று மதத்தவர்களையும் ஈர்த்திருக்கிறது. அந்தளவு வசீகரமான சாரீரம் அவருடையது. “இறைவனிடம் கையேந்துங்கள்! என்ற பாடல் பொதுவானது ஆனால் “பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா? அந்தப் பாதையிலே வந்த பெண்ணே நீ சொல்லம்மா...” தக்பீர் முழக்கம்... இப்படி இஸ்லாத்திற்கே குறித்தொதுக்கப்பட்ட பாடல்களும் அனைவரையும் கவர்ந்திருக்கின்றன.

ரீ.எம். செளந்தரராஜனுடன் இணைந்து,

“எல்லோரும் கொண்டாடுவோம்...

அல்லாவின் பெயரைச்சொல்லி

நல்லோர்கள் வாழ்வை எண்ணி

எல்லோரும் கொண்டாடுவோம்” என்ற பாடலை மறக்க முடியுமா?

அப்பேர்பட்ட பாடகரின் ஒரே வாரிசுதான் ஹனீபா! தமிழகத்தில் (சென்னையில்) தந்தையின் வழியிலேயே கொள்கைப் பிடிப்புடன் பாடி வருகிறார்.

ரி.எம். செளந்தரராஜனின் மகன், சீர்காழி கோவிந்தராஜனின் மகன், திருச்சி லோகநாதன் மகன், கே.ஜே. ஜேசுதாசின் மகன், மலேசியா வாசுதேவனின் மகன், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் என்றெல்லாம் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கி றோம். ஆனால் நாகூர் ஹனீபாவின் மகனை நமக்குத் தெரியவில்லை. ஏன்?

விளம்பரமில்லை!

“எனக்கும் எத்தனையோ வாய்ப்புகள் வந்தன. என் தந்தை கொள்கை மாறாதவர். அவரை, ‘குமார்’ என்ற பெயரில் பாடுவதாக இருந்தால் சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறினார்கள். தந்தையார் மறுத்துவிட்டார். நாகூர் பாபுவால் மனோவாக முடிந்தது.

இன்னொருவர் முகேஷாக மாற முடிந்ததால், சினிமா வாய்ப்பு குவிகிறது. அப்படி எனக்கு இயலவில்லை. தந்தை சொல்லே தாரக மந்திரம்!” என்கிறார் ஹனீபாவின் மகன் ஹனீபா நெளஷாத் அலி!

தனிப்பட்ட விடயமாக சென்னை சென்றிருந்தபோது பாண்டி பஜாரில் அவரை சந்திக்க முடிந்தது. மணவை அசோகன் தான் என் அறைக்கு அழைத்து வந்தார். சென்னையில் மணவைக்கு எல்லாம் அத்துப்படி! வீ.கே.டி. பாலனுக்கு அடுத்த படியாக. இலங்கையில் பிறந்த ஓர் இந்தியன் என்ற வகையில் மணவை அசோகன், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சென்னையில் காற்றாய் பறக்கிறார். அதனால், இங்கிருந்து அங்கு செல்லும் பிரபலங்கள், பிரமுகர்கள் எல்லாம் மணவையை ஒரு மோது மோதாமல் வருவதில்லை. ஆனால், அவரிடம் பொதிந்து கிடக்கும் அந்த ரகசியம்தான் என்னவென்று புரியவில்லை. திராவிட கழகத்தின் கொள்கை யில் ஈர்த்தவர்கள் வேண்டுமானால், அவரை மற்றொரு மணவைத் தம்பியாகப் பார்க்கலாம். அல்லாதவர்கள்?!

அசோகனுடன் அறைக்கு வந்த நெளஷாத் அலி... தன்னை பண்பாக அறிமுகப் படுத்திக்கொண்டு... இனிமையாக உரையாடினார்!

அல்லாஹு அக்பர்....

அல்லாஹு அக்பர்!

தக்பீர் முழக்கம்....ம்....ம்....!

‘ஐயையோ! நான் பதறியே போய்விட்டேன்! நிச்சயம் என்னை அறையை விட்டுத் துரத்தி விடுவார்கள்’ அவ்வளவு உரத்து உச்சஸ்தாயியில் பாடுகிறார். ‘சற்று மெதுவாக’ என்றேன். ஊஹும்.... அடுத்தடுத்து இரண்டு மூன்று பாடல்கள்.... இனி என்னால் தாங்க முடியவில்லை. தோளைப் பிடித்து அமர்த்தி, ‘சத்தத்தைக் குறையுங்கள்’ என்றேன். அவருக்கு சிரிப்பு தாங்கவில்லை. மணவை அசோகன் இரண்டு கைகளையும் வயிற்றில் வைத்துக்கொண்டு ஐயோ.... ஐயோ... அம்மா... என்று சிரிக்கிறார்! எனக்கு ஆனந்தமும் அந்தரமுமாக இருக்கிறது. பூனைக்குக் கொண்டாட்டம் சுண்டெலிக்கு ஜீவன் போகிறது என்பார்களே அப்படி. ஹோட்டல்காரன் காதில் விழுந்தால், ‘காலி பண்ணுங்க சார்!’ என்பானே! நான் சுண்டெலியாய் நெளிய நெளஷாத்துக்கு புரிந்துவிட்டது. பாடல்களைக் குறைத்து கதையைமட்டும் சொன்னார்.

‘இப்படி திறமையுள்ள நீங்கள், ஏன் வெளியில் வராமல் இருக்கிaர்கள்?’

‘இங்கே எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் இன்னமும் ஓர் இறுவட்டைக் கூட வெளியிடவில்லையே! விளம்பரம் இருந்தால்தானே எல்லோருக்கும் தெரியும். நான் அதைச் செய்யவில்லை. இனியும் அந்தத் தவறை இழைக்கமாட்டேன். ஓரிரண்டு பாடல்களை யூ. டியுப்பில் பதிவேற்றம் செய்திருக்கிறேன்.’ என்கிறார் இந்த இளைய முரசு..

நாம் எமது புகழைப் பேசக் கூடாது மற்றவர் பேசட்டும். “பூக்களின் மணம் பரப்பும் பொறுப்பை காற்றுதானே ஏற்றிருக்கிறது” என்பார் கவிப்பேரசு. சிலரைப் பாருங்கள் ஒரு கவிதையையே பாடலையோ எழுதிவிட்டு ஒன்பது தடவை பீற்றிக்கொள்வார்கள். ஆனால், பூக்களைப் போல்... படைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டியது வாசகன் அல்லவா!

நான் இப்படி இருப்பதால் ஹனீபாவின் மகன் என்று கூறிக்கொண்டு ஒருவர் இலங்கைக்குப் போய் வந்துவிட்டாரே. முதன்முதலாக இலங்கைக்கே போக வேண்டும் என்ற வேட்கையில் இருந்த என்னை உற்சாகப்படுத்தியவர் அசோகன். அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வதாகக் கூறினார். ஆனால், வேறொருவர்,என் அப்பாவின் மகனென்று கூறிக்கொண்டு இலங்கை சென்றிருந்த விடயம் தெரியாமல், நான்தான் சொல்லாமல்கொள்ளாமல் சென்றதாக என்னிடம் வந்து குறைபட்டுக்கொண்டார். விடயத்தைச் சொன்னதும் விளங்கிக்கொண்டார். ஹனீபாவை மானசீகக் குரு என்று சொல்லலாம்! ஆனால் தந்தை என்று சொல்வது, தாய்க்குச் செய்யும் அவமானம் இல்லையா? என்றவர், தந்தையின் வெறுப்புக்கு மத்தியிலும் தாம் பாடகராக வந்த கதையை விபரிக்கிறார்.

“பொதுவாகவே கவிஞர்கள் வறுமையில் இருப்பார்கள் என்ற ஓர் எண்ணம் இருக்கிறது. ஆனால், ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலை இயற்றியவர் ஒரு ஜவுளிக்கடை உரிமையாளர். அதனால் அவரை ‘நீ பணக்கார கவிஞன்’ என்று என் தந்தை கூறுவார்” என்று கணீரென்ற குரலில் பாடியும் அசத்துகிறார்.

“அவர்தான் இன்று அலுவலகம் வருகிறார். அப்படியா! என்று அழுத்துக் கொண்டவர்களுக்கு நேரடியாகத் திருப்தியடைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திடீரென மிகவும் எளிமையாக உள்ளே நுழைகிறார் நெளஷாத், சென்னையில் நடந்த சம்பவங்களை மீட்டியிருக்க வேண்டும். வந்ததும்; என்னை கண்டதும் கையைக் குலுக்கி, தோளைத் தட்டுகிறார். ஒரு நாள் சிநேகத்தில் அவரை எனக்குப் பிடித்துவிட்டது. என்னையும் அவருக்குப் பிடித்திருக்க வேண்டும். ”

கவியரசு கண்ணதாசன் நெஞ்சைப் பிழியும் ஒரு கதை சொல்வார்.

என்னை நேசித்தவர்களை இறைவன் என்னிடம் சேர்க்கவில்லை!

நான் நேசித்தவர்கள் என்னை நேசிக்கவில்லை! இறைவனிடம் அதனால்தான் இரண்டு மனம் கேட்டேன் என்றெழுதுகிறார். எல்லோரையும் எல்லோருக்கும் பிடிப்பதில்லை.

இப்போது, சுஐப், பரசு, கிருஷாந்தி, ரேணுகா, சுபா, ராஜா அண்ணா மட்டுமல்ல முழு ஆசிரிய பீடத்திற்கும் நெளஷாத்தைப் பிடித்துவிட்டது. சுஐப் அவர் பாடும் விதத்தைப் பார்த்து என்னிடம் “ஆமாம் மச்சான்!” என்று அன்றைய கருத்தை இன்று ஆமோதிக்கிறார். அலுவலகத்தில் செய்தி நேரம் அல்லாத வேளைகளில் வானொலியை முடுக்கிவிட்டிருப்பார்கள். மனதுக்குப் பிடித்த பாடல்கள் ஒலிக்கும். இசையால் வசமாகாத இதயமுண்டோ! சுஐப்? ஒரு பாடலை ரசித்துக்கேட்டு நான் கண்டதில்லை. ரசிப்பதற்கு ஆசனத்தில் இருக்கவேண்டுமே. சக்கரம் பூட்டியவர் மாதிரி அங்குமிங்கும் சஞ்சரிப்பார். இப்படி பாட்டு ரசனை இல்லாத அவரே அசந்தாரென்றால் ஹனீபா மகனுக்கு வெற்றிதானே!

ஹனீபா எந்தளவு பிரபல்யம் மிக்கவர். அவருக்கு மகனாகப் பிறந்த நெளஷாத்தின் தன்னடக்கமே அவரை அடையாளப்படுத்திக்கொள்ளத் தடையாக இருந்ததா? இல்லை. அது அவரை உச்சத்துக்கே இனிக் கொண்டு செல்லும்!.

விசு கருணாநிதி...-

எழுதியவர் : விசு கருணாநிதி (26-Dec-12, 8:56 pm)
சேர்த்தது : Wisu Karrunanidi
பார்வை : 233

சிறந்த கட்டுரைகள்

மேலே