‘யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்’ புத்தக கருத்து வெளிப்பாடு (பகுதி 2)
மயிலாடுதுறை ரமேஷாலாம் எழுதிய எட்டுக் கவிதைகளில் ஒன்று ‘அகதி மரம்’. இதில் மரங்களின் அவல நிலையை தெளிவாக எடுத்துரைக்கிறார். எனக்கென்று ஒரு கனவு இருந்தது என்ற கவிதையின் பாணியும், கருத்தும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முகம் கவிதையில் உள்ளபடி ‘ஒவ்வொருவரின் முகமும் வெறுக்கப்பட்டு விடுகிறது யாராலாவது’ என்பது உண்மை.
என் தோட்டத்துச் செடி என்ற கவிதையில் ‘தன் மட்டற்ற காதலை எனக்குச் சொல்கிறது என் தோட்டத்துச் செடி என்பதில் செடிகளுடனும், மரங்களுடனுமான ரமேஷாலத்தின் நேசம் புரிகிறது. செடிகளும் பேசுமா? என்ற என் கவிதை நினைவுக்கு வருகிறது. மரங்கள் அழித்து எரிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும் என்று பொற்செழியன் தன் ’எரிமலை வெடிக்கும் என எச்சரிக்கை விடு’ என்ற கவிதையின் மூலம் எச்சரிக்கிறார்.
ரமேஷாலத்தின் விடை அற்ற ஒரு வரலாறு..!, நீ வரும் நாளுக்காக..., பனிரண்டாம் வகுப்பின் காலம், முத்துநாடனின் ‘நான் பார்த்ததிலே’, மட்டக்களப்பு ஹே.பிரியாவின் ’திருமணத்திற்காய் ஒரு பெண் காத்திருக்கிறாள்’, கிளிநொச்சி அகரமுதல்வனின் ’மீறலின் தர்மம்’ என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
காதல் என்ற பெயரில் பொது இடங்களில் நடக்கும் வெட்கக் கேடுகளைப் பட்டியலிட்டு மனம் வருந்தி, முடிவாக,
’காதல் உங்கள் உரிமை!
ஆக... காதலியுங்கள்....
கொஞ்சம் கண்ணியமாக...
என்று மதுரை தமிழ்தாசன் தன் ’கண்டிக்கத் துப்பில்லாமல் கவிதை எழுதுகிறேன்’ என்ற கவிதையில் நயம்பட சொல்கிறார்.
பொள்ளாச்சி அபியின் ஒரு மாற்றுத் திறனாளியின் ‘ஒரு மனக்குமுறல்’ அரசாங்கத்தால் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இவர்கள் செல்வதற்குத் தகுந்தவாறு இயந்திர வாகனங்களும், பாதைகளும், இயற்கை உபாதைகளுக்குத் தகுந்தபடி வெளியிடங்களில் வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றன. பேருந்து ஓட்டுநர்கள் இடத்தைவிட்டு இறங்கி வந்து, படியைத் தாழ்த்தி பேருந்தில் ஏற்றியபின் கிளப்புகிறார்கள்.
முத்துநாடனின் ’நான் பார்த்ததிலே...’ அற்புதம்.
’பட்டாம்பூச்சிக் கண்ணனின்
ஸ்பரிசம் பட்டுப்
பரவசம் கொண்டனர்
மலர்க் கோபியர்’.
அருமையான ரசனை.
புதுவை காயத்ரியின் ’தமிழில் பேசு’ குழந்தைக்கு அறிவுரை மட்டுமல்ல, படித்த பெரியவர்களுக்கும்தான். பாரதி சரணின் இயற்கை, புலமி அம்பிகாவின் கவிஞனின் வாழ்வு, கே.சரவணனின் சன்னல்கள், ருத்ரா நாகனின் அறிவியலின் அனுதாபம், பரிதி முத்துராசனின் நாசாவின் எந்திரப்பூச்சி, ஈஸ்வர் தனிக்காட்டுராஜாவின் புதியதோர் நாடு காண்போம், வசந்தி மணாளனின் இதயத்தில் சேமியுங்கள், இன்போ அம்பிகாவின் தூய நின் சேவடி போற்றுதும்... எல்லாமே தனித்துவம் வாய்ந்தவை.
தஞ்சை வினோத் கண்ணனின் ’இரட்டை வரி நோட்டு!’ ஒரு குறுங்கவிதை, ஹைக்கூ. யாத்விகா கோமுவின் ’அம்மா நீ = கடவுள்’ கவிதை அம்மாவிற்கும், பிள்ளைக்குமான பாசத்தையும், நெருக்கத்தையும் காட்டும் ஓர் அருமையான உரையாடல். நன்றாகவே இருந்தது.
அமுதா அம்முவின் ’வேண்டாம் சாமி இன்னொரு பிறப்பு’ வாசித்ததும் சென்னைவாசியான அம்மு எப்படி சாதாரண பெண்ணின் நிலைபற்றி இவ்வளவு தத்ரூபமாக சொல்ல முடிந்தது என்று எண்ணி வியந்தேன். ஆனால் இன்று ஆலடி அருணா அவர்களுக்கு அஞ்சலி வாசித்ததும் வியப்பு போயிற்று. திருநெல்வேலி மண்ணில் வளர்ந்தவர் எளிய பெண் பற்றிச் சொல்வதும், தெரிந்திருப்பதும் வியப்பில்லை.
கவிஞர் தென்காசி யாசர் அராபத்தின் வேண்டுதலான ’வேண்டுவன கொண்டு வா பாரதமே!’ என்ற எதிர்பார்ப்பு உண்மையாக வேண்டும். ஆத்திரம் கொள்ளாத, ஆணவம் இல்லாத மனிதனும் மனிதமும் இருந்தால் அனைத்தும் சாத்தியமே.
சிரிப்பும் பிறரை நேசிப்பதும்தான் மானிடத்தின் முதல் சிறப்பு என்று மகனுக்கு அப்பா எழுதும் கடிதத்தில் நெல்லை மோசே கூறுவதும் நல்ல அறிவுரையாகும்.
’ஏன் இந்த மௌனம்?’ என்ற இலங்கை ஷாஜஹான் தன் வேதனைகளை தேவியிடம் முறையிட்டு,
‘நாம் பேசித் தீர்வு காண்போம்
எங்களுக்குள்
தினம் தினம் சாகாமல்!’
என்று வேண்டுகிறார்.
அகன் ’தோழனின் பிரிவு’ கவிதையில் நட்பின் பெருமையை ’அவள் என் இதயம் என்றாலும், நீதானடா என் மூச்சு’ என்கிறார். அருண்குமாரின் ’குழந்தைகள்’ என்பது தலைப்பில் ’காலம்.. காலமாய்’ என்று வந்திருக்கிறது. அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ளலாம்.
35 கவிஞர்களின் 57 கவிதைகள் என்பதால், யுத்தச் சுவடின் தடங்கள் என்ற பகுதியில் கவிஞர்களின் பெயரை, முதலில் கவிதைகளுக்கு அடுத்து பென்சிலால் எழுதிக் கொண்டேன். அடுத்து வரும் பதிப்புகளில் கவிதைகளுக்கு எதிரில் கவிஞர்களின் பெயரையும் குறிப்பிட்டால் இலகுவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இறுதியாக மெய்ப்புத் திருத்தமும், வடிவமைப்பு தந்து, மலாலாவிற்கு ஓர் இரங்கற் கவிதையும் நல்கிய ’விழிகள்’ தி.நடராசன் பாராட்டுக்குரியவர்.
மிக நீள்கட்டுரையாகிவிட்டது. என்னால் இதைச் சுருக்கி, சிறிய கட்டுரையாக்க இயலவில்லை. வாசிப்பிற்கு நன்றி.