யாழ் மாணவர்களின் புரட்சி..!

யாழ் மாணவர்களின் புரட்சி..!

யாழ்ப்பாண புரட்சி என்று அனைத்துலக ஊடகங்கள் வர்ணித்த மாணவர் புரட்சி வெடித்து நாளையுடன் ஒரு மாதங்கள் ஆகிறது.

"சரி இதன்மூலம் என்னதான் நடந்தது? நான்கு மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு பல்கலைக்கழகம் மூடப்பட்டு ஏனைய மாணவர்கள் அச்சுறுத்தப்பட்ட்டது தானே நடந்து முடிந்திருக்கிறது" என்பதே பலரின் வாதம். இன அழிப்பு அரசு சொல்ல விரும்புகிற - நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிற செய்தியும் இதுதான். சிங்களம் சொல்வதை கேட்டு நடப்பதற்கா 45000 போராளிகளையும் இலட்சக்கணக்கான மக்களையும் பறிகொடுத்தோம் நாங்கள்!

இதன் மூலம் தமிழர் தரப்பு ஒரு தெளிவான அரசியல் செய்தியை உலகுக்கு சொல்லியிருக்கிறது. பல்கலைக்கழகம் என்பது ஒரு இனத்தின் உளவியலை - உணர்வுகளை நாடிபிடித்துப் பார்க்கும் இடமாக இருக்கிறது. ஒரு ஒற்றைத் தீபத்தினூடாக ஒட்டு மொத்த இனத்தின் அரசியலை - அவாவை உலகிற்கு எடுத்தியம்பியதுதான் மாணவர்கள் செய்த ஒரே பணி.

முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான மக்களை கதற கதற கொலை செய்தும், தடுப்பு முகாம்களில் சித்திரவதை செய்தும் புலிகளை பூண்டோடு அழித்துவிட்டோம் என்ற இறுமாப்புடன் மக்களின் அடிப்படை வாழ்வியலையும் தளம்பச்செய்து நிலங்களை விழுங்கி தொழில்களை முடக்கி பண்பாட்டு சீரழிவுகளை நிகழ்த்தி மக்களை நிலைகுலைய செய்து கொண்டிருக்கும் சூழலிலும் மாணவர்கள் ஏற்றிய ஒற்றைத் தீபம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. சிங்களம் இன்று சீற்றமடைந்திருப்பதற்கு ஒரே காரணம் இதுதான். இந்த உண்மையை சிங்களத்தால் ஏற்கமுடியவில்லை. அதுதான் அந்த செய்தியை சொன்ன மாணவர்களை அது பழிவாங்குகிறது.

பல்கலைகக்கழக நிகழ்வினூடாக ஒரு மக்கள் புரட்சிக்கான - மாணவர் புரட்சிக்கான ஒரு ஒத்திகையை தமிழர் தரப்பு பார்த்திருக்கிறது. அதே போல் சிங்களம் தற்போது செய்யும் கைதுகளும் அச்சுறுத்தல்களும் புலிப்பூச்சாண்டிகளும் ஒரு மக்கள் - மாணவர் புரட்சியை எப்படி அடக்குவது என்பதற்கான ஒத்திகைகளே... ஆனால் இது எத்தனை நாளைக்கு?

தொடரும் அடக்குமுறைகள் ஒரு நாள் நிரந்தரப் புரட்சியாக மாறும். மாணவர்கள், மக்கள், பேராசிரியர்கள், அறிவுஜீவிகள்;, தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமாக வீதிக்கு வரும்போது இன அழிப்பு அரசு முழுமையாகச் செயலிழக்கும்.

உண்மையில் கண்ணுக்கு தெரியாத ஒரு யுத்தத்தை சிங்களத்தின் மீது நாம் திணித்து ஒரு மாதம் பூர்த்தியாகிவிட்டது.

சிங்களம் இன்றில்லை 2009 லேயே பயந்துவிட்டது. நாலரை இலட்சம் வன்னி மக்களை முழுமையாக அழித்தொழிக்க திட்டமிட்டிருந்த சிங்கள அரசு தமிழகம் மற்றும் புலத்தில் நடந்த எழுச்சிகளின் விளைவாகவே 1,46,000 மக்களுடன் தனது பலியை முடித்துக்கொண்டது.. எனவே அழிந்துபோன மக்களை எண்ணி நாம் வருந்தும் வேளையில் தமிழக மற்றும் புலத்து போராட்டங்களினூடாக 3 இலட்சம் மக்களை காத்தோம் என்ற உண்மையையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

யாழ் பல்கலை பிரச்சினையின் போதும் எமது கணிப்பின்படி சிங்களம் துப்பாக்கி பிரயோகம் செய்து பல மாணவர்களை கொன்றிருக்கும் அல்லது காயப்படுத்தி இருக்கும் என்றே எதிர்பார்த்தோம். அத்தோடு நூற்றுக்கணக்கான மாணவர்களை சிறையில் தள்ளி இருக்கும் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால் எமது உடனடி நடவடிக்கையும் பல மட்டங்களில் மாணவர்களுக்காக எழுந்த குரல்களும் சிங்களத்தின் கையை கட்டிப்போட்டுவிட்டது. இது எமக்கு கிடைத்த பாரிய வெற்றி.

முன்புபோல் ஈசல் கணக்காக சுட்டுத்தள்ள முடியாது. அனைத்துலக கவனம் சிறீலங்காவில் குவிந்துள்ளது. செய்த குற்றங்களே வகைதொகையில்லாமல் சிங்களத்தின் கழுத்தில் சுருக்காக மாறியிருக்கிறது. எனவே புலத்தில் தமிழகத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

இன்றோ நாளையோ நான்கு வருடங்கள் கழித்தோ ஒரு நாள் மக்கள் புரட்சி வெடிக்கும். புலத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் அதை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்.

நன்றி
பரணி

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (27-Dec-12, 11:12 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 138

மேலே