ஆன்மீகத்துக்கு செக்ஸ் தடையான காராணியா ?.

முதலில் ஆன்மிகம் என்பது எல்லாத் தடைகளையும் தாண்டிய நிலைதான். தடைகள், விதிமுறைகள், கோட்பாடுகள் என்பவறுக்குள் ஒருவர் கட்டுப்படுபவராக இருப்பின் அவருக்கு உண்மையான ஆன்மீகத் தேடல் எழமுடியாது. வாய்ப்பே இல்லை. காரணம் என்னவென்றால் நாம் ஒன்றைச் சார்ந்திருக்கும் வரை அதன் கட்டுப்பாடுகளுக்குள் இருக்கவேண்டியுள்ளது. இது ஒரு அடிமைத் தனம்.
அடுத்து வாழ்க்கை என்பது இருப்பு மட்டும் தான். அதற்கு எல்லைகள் இல்லை. அதே போன்றுதான் ஆன்மீகமும். அதற்கும் ஒரு எல்லையோ அல்லது வரையறையோ கிடையாது. இது தான் ஆன்மிகம், இப்படிச் சென்றால் தான் ஆன்மிகம் என்று எந்த ஒரு மார்க்கமும் இல்லை. இறைத் தன்மையைச் தேடிச் செல்பவருக்கு தானாக அமையும் பாதை தான் ஆன்மீகப் பாதை. இதனால் தான் ஒவ்வொருவரது ஆன்மீகப் பாதையும் தனித்துவமானது. தேடல் உறுதியானதும் தடைகளும் எல்லைகளும் தகர்ந்துவிடும்.
அடுத்து உங்களுடைய கேள்விக்கு வருவோம். செக்ஸ் ஆன்மீகத்துக்குத் தடையா அதன் எல்லை என்ன? என்று கேட்டுள்ளீர்கள். செக்ஸ் தடையில்லை அது தான் ஆன்மீகத்தின் தளம். அதனால் எல்லை இருக்க முடியாது. ஏன் தடையில்லை தளம் என்பதைப் பார்ப்போம். அதற்கு முதலில் செக்ஸ் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வோம். செக்ஸ் என்ற சொல்லின் விளக்கம் கிழக்குக்கு காமம், மேற்குக்கு பாலியல். கிழக்கிற்கு ஆன்மீக ஒத்திகைப் பயிற்சி. மேற்கிற்கு புலன் இன்பத்திற்கான ஆசை.
காமம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். காமம் எனும் தமிழ்ச் சொல் நிறைவு என்ற பொருளுடைய 'கமம்' எனும் அடிச் சொல்லில் இருந்து பிறந்ததது. எனவே ஆணும் பெண்ணும் கொள்ளும் அன்பினால் வரும் இன்ப நிறைவாகிய காதலே காமம். இங்கு அன்பு அதன் அடித்தளம். இன்பம் நிறைந்த காதல் அதன் வெளிப்பாடு. இங்கு தான் ஆன்மீகத்துக்கான தளம் உருவாகின்றது. இந்த அன்பும், இன்பம் நிறைந்த காதலும் ஒருவன் ஒருத்தி என்ற நிலையில் ஆரம்பித்து படிப்படியாக பிரபஞ்சத்தின் படைப்புக்கள் அத்தனை மீதும் பரவுவது தான் ஆன்மீகம். எனவே காமம் ஆன்மீகத்தின் அடிப்படை.
எனவே செக்ஸ் ஆன்மீகத்துக்குத் தடையா என்று கேட்பவரிடம் நாம் கேட்க வேண்டிய கேள்வி 'செக்ஸ் அன்பு சார்ந்ததா அல்லது ஆசை சார்ந்ததா' என்பது தான். ஆசையாய் இருந்தால் மோசம் போவதை யாரால் தடுக்க முடியும்!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (4-Jan-13, 6:01 am)
பார்வை : 439

சிறந்த கட்டுரைகள்

மேலே