உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே

விவசாய நிலமெல்லாம்
வீட்டுமன ஆகுதடா!
வெள்ளாம செஞ்ச கூட்டம்
வேற பக்கம் ஓடுதடா!

ஆன கட்டிப் போரடிச்ச
அந்தக் காலம் போனதடா! - இப்ப
ஆறு மூட்ட வெளச்சலுக்கே
ஆண்டியாத்தான் போனமடா!

காவேரி கனவு எல்லாம்
கானல் நீராப் போனதடா!
கடைசிவரைக்கும் மின்சாரமும்
கண்ணாமூச்சி காட்டுதடா!

நம்பி நட்ட நடவெல்லாம்
நாசமாத்தான் போனதடா!
தண்ணி கெடந்த கெணத்துல - இப்ப
தவள செத்துக் கெடக்குதடா!

வயலோடு சேர்ந்து எங்க
வாழ்க்கையுந்தான் காயுதடா!
வறண்டு போன பயிரயெல்லாம் - நாங்க
வளர்த்த மாடு மேயுதடா!

குறுவைக்குன்னு வாங்குன கடன்
குட்டி போட்டு நிக்குதடா! - இப்ப
சம்பாப் பயிரும் சாம்பலாகி
சாகச் சொல்லி நெருக்குதடா!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (5-Jan-13, 9:02 am)
பார்வை : 174

மேலே