எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காற்று காற்றே நீராக உருமாறுவது. காற்றே வெந்தனலை உருவாக்குவது....

காற்று
காற்றே நீராக உருமாறுவது.
காற்றே வெந்தனலை உருவாக்குவது.
காற்றே பிராணநாடி.
கண்ணால் காணா
காற்றால், காற்றில் வாழும்
சுவாச வாழ்க்கை காற்றாக,
காற்றோடு போய் விடுகிறதே!
உலகைச் சுற்றி, உன்னுள்ளும்,
என்னுள்ளும், உயிரினங்கள்
அனைத்துள்ளும், எங்கெங்கும்
வியாபித்து, வெற்றிடம் களைந்து
அழுத்தங்களை சீராக்கும் காற்று,
என், உன் எண்ணங்களை, உணர்வுகளை,
ஆசைகளை, அனுபவங்களை, அச்சங்களை
அவ்வப்போது கவர்ந்து செல்வது ஆங்காங்கே
தூவி விடத்தானோ!
என்னுள், உன்னுள் காற்று தெளித்துவிடும்
கீதங்களை, கிலியை, வெறுப்பை, வேதனையை,
சிரிப்பை, சலசலப்பை, சிந்தனையை,
எங்கெங்கிருந்து, யாராரிடமிருந்து
கொணர்ந்ததோ!
ஒரு புலியின் உறுமல், ஓநாயின் ஊளை,
ஞானியின் அமைதி, வேசியின் கொஞ்சல்,
திமிங்கலத்தின் மெத்தனம்,
துளசி, வேம்பின் தெய்வீகம் இப்படி பல பல!
இதில் காற்றோடு கலந்தவர்களின்
ஞாபக கசிவு, நினைவு தளும்பல் வேறு.
ஆகாச அதிர்வுகளின் பரிமாணங்கள் வேறு.
காற்றே மனித, விலங்கு, தாவர, ஜடங்களின்
சூட்சமங்களை சேகரித்து, பிரித்து, பின்னர்
மீண்டும் அவற்றிற்கே மாறி மாறி பகிர்ந்து விடுகிறது.
இந்த பரிமாற்றங்கள் மண்ணுக்கு உரமாகின்றன.
மனித, உயிர் மேன்மைக்கு வித்தாகின்றன.
காற்றை போற்றுவோம்!

பதிவு : சோமா
நாள் : 16-Feb-15, 5:48 pm

மேலே