எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யுகங்கள் தாண்டும் சிறகுகள் 7-புலமி *********************************************************** படத்தில் இருக்கும்...

யுகங்கள் தாண்டும் சிறகுகள் 7-புலமி
***********************************************************
படத்தில் இருக்கும் வரிகள் எனது தமிழ் ஆசான் எனக்கு வழங்கிய முதல் வாழ்த்துரை...அவரது திருப்பெயர் திரு.கணேஷ் .....அவரும் இதே தளத்தில் இருந்தாலும் இருக்கலாம்.....அப்படி இருப்பின் பெருமகிழ்வடைவேன்......
********************************************************************************************************
அப்பொழுதெல்லாம் என் வானத்தில் வீட்டுப்பாடங்களுக்கான விடியல்களே உதயமாகும்.இரவுகள் மௌனங்களில் பொந்திடையாகி தூரத்தில் விண்மீன்களாய் ஒளிரும். பின்வருபவை உணரவியலாத ரகசியங்கள் மாலை விளையாட்டுக்களாகும் .தொலைக்காட்சிப் பெட்டிக்கு அப்போது முதல் தினம் தினம் ஹோலி(வண்ணத் தொலைக்காட்சி வருகை) ...பிறகு உலகம் உள்ளங்கையில் கைக்கோள் வழியே பெரிய பெரிய வலைகளோடு விரிந்தது(கேபிள் கனெக்சன் ).விழுவதெல்லாம் கண்களாகவே இருக்கும்...எதிர்காலம் பற்றிய காட்சிகள் கூட அக்கம் பக்கத்து உறவுகளில் மிகவும் தீவிரமான பிரச்சனைகளாய் உருப்போடவில்லை...அது சராசரிச் செங்கற்களால் அடுக்கப்பட்ட வீடு .மத்திய அறையில் தூக்கங்களாகும் உடல்களின் தேசத்தில் ஒருமித்த மூச்சுக்களுக்கு வீடு சுற்றிய பாம்புகளின் விடமூறும் பயணங்கள் தடையாகவில்லை.....வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே மிகை அழகாகத் தெரிவதாய் முக்கால் நீளக் கண்ணாடி முழங்காலிட்டுக் கைகள் விரிக்கும் சீருடை மறந்து....அவ்வீட்டின் முன் கடந்து செல்லும் சாலைக்கு எனது இரண்டாம் சைக்கிளின் எதிர்ப்பயணங்களே அலாதி...அந்நாட்களில் கடமையும் நட்புமாய் உள்ளத்தில் இருவகைக் கிளர்ச்சி விழுதுகள் ...நுழைவு மரக்கதவில் பட்டை பட்டையாய் நிறுத்தப்பட்டிருக்கும் சட்டங்கள் மண்ணில் பள்ளம் பார்த்திருக்கும் இடைவெளியில் காலைக்கும் மாலைக்குமான வினோதங்கள் .....பள்ளியும் வீடும் மாறி மாறி வந்து போன வாழ்வியலில் ஒரு மாலை நேரம் எனக்குள் உறங்கிக்கிடந்த விதைக்கு கிடைத்தது முதல் மழை ....ஒட்டாத கண்ணாடிக் கூழ் இலகுவாய் நீள் மணிகள் கோர்த்துக் கொண்டு விழுகின்ற பல தூறல்கள் முன் வாசல் படிக்கு முன் உடைந்து கொண்டே இருக்க , தாளுக்கும் தூவலுக்குமாய் ஓடினேன் ....எழுது எழுதென்று துடிக்கின்றது உற்சாகம் ....உள்ளமெல்லாம் மழை ஈரத்தில் வியர்க்கும் பசுங்காடு துளிகளை உதிர்த்துக்கொண்டிருந்தது....அப்படியொரு நிகழ்வில் ,

"மழை"

"மழைக்காலங்களில் நானே போதும்
இப்புவிக்கு வெளிச்சம் தர ;(மின்னல்)
மழைக்காலங்களில் நானே போதும்
இப்புவிக்கு மத்தளம் தர ;(இடி)
மழைக்காலங்களில் நானே போதும்
இப்புவிக்கு வெள்ளிக்கம்பி போல் சாரல் தர ;
மழைக்காலங்களில் நானே போதும்
இப்புவிக்கு முத்து முத்தாய் மழைத்துளிகள் தர ;
மழைக்காலங்களில் நானே போதும்
இப்புவியின் மண்ணுக்கு வாசம் தர ;
மழைக்காலங்களில் நானே போதும்
இப்புவிக்கு மண்ணின் வளப்பெருக்கம் தர
மழைக்காலங்களில் நானே போதும்
இப்புவிக்கு நீர்ப்பஞ்சம் போக்கி தண்ணீர் தர :
நானே இருப்பேன்
இப்புவியின் மக்களுக்கு என்றென்றும் உறவாய் இருப்பேன் ......"(7வது வகுப்பில் )

இவ்வரிகளுக்கு மூலம் மழை மட்டுமே...ஒரு புதிய உலகம் கண்டுவிட்ட உணர்வே இருந்தது எழுதி முடித்தபின்.எனக்கே வியப்பாய் தான் இருந்தது.....எப்படி இப்படியொரு எழுத்தூக்கமென்று. அதைவிட மகிழ்ச்சித் தோகைகள் மழைக்குப் பின் ஒரு மயிலைத் தோற்றுவித்திருந்தது..எழுதிவிட்டேன் என்ற பெருக்கு , நடையெங்கும் பொருந்த , தவழத் தவழ பூரிப்பாகவே ஊர்ந்தது தரை ....அதற்கு முன் வந்த மழை எனக்குள் கவிதையென எதையும் விளைக்கவில்லை....அன்றிலிருந்துதான் மழை எனக்கு உறவானது என்பதுமில்லை...மழைக்கும் எனக்குமான பிணைப்பு வேறு......
அதன்பின் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன்..நினைத்தபோதெல்லாம் எழுதினேன்..எழுவதற்காக நினைக்கவும் செய்தேன்..பல போது சிந்தனைகளாகவே முகிழ்த்திருந்தது கவிதைகளான அன்றைய சூழல்கள் .....ஒரு நோட்டுப் புத்தகத்தில் பதிந்து கொண்டே வந்தேன்...அப்படி பதிந்தவைகள் ஒவ்வொன்றையும் எனது தமிழ் ஆசானிடம் காண்பித்து வருவதுண்டு...ஒவ்வொரு கவிதைகளையும் படித்துவிட்டு அவரது முகத்தில் பெரியதொரு புன்னகை ஆஹா என்ற பாராட்டாய் அகலும் ....அது எனக்குள் உந்திக்கொண்டே இருக்கும் ...அந்தப் புன்னகை ஒவ்வொரு முறையும் எனக்கு வரமாகவே இருந்தது....ஆரம்ப காலங்களில் சின்ன சின்னதாகவே பெரும்பாலும் எழுதிக்கொண்டிருந்தேன்...எதுகையும் மோனையும் பிடித்தமான திண்பண்டங்கள் போல....கவிதை என்றால் அப்படி ருசி காண விரும்புவேன்.....எனது தமிழ் ஆசான் பெயர் திரு.கணேஷ்.அவர் பாரதியின் வரிகளில் மிடுக்காகும் உயரமுள்ளவர்...நெஞ்சுரம் மிக்க ஊக்கங்களை வழங்கியவர்....பிறிதொரு சமயம் புதுக்கவிதைகள் குறித்துக் கூறினார்...ஆனால் முழுவதும் புரியவில்லை...எனக்குத் தெரிந்த மொழியில் கருத்துக்களை எடுத்துக்கொண்ட மட்டும் தலையாட்டிவிட்டுக் கடந்தேன் அவர் கொடுத்த சில தலைப்புகளோடு....அத்தலைப்புகளில் இரண்டு பக்கங்களாவது எழுதும்படியும் கூறியிருந்தார்...அதில் முதல் தலைப்பிலிருந்து ...

"மனிதனே மனிதம் கொள் !"

"மனிதனே மனிதம் கொள் !
பூட்டிக்கிடக்கும் உன் மனம் - பிறரைக்
காட்டிக் கொடுக்க வேண்டாம்
ஒட்டியிருக்கும் உனதுடல் - பிறர்மீது
வெட்டிப்பழி போட வேண்டாம்

மனிதனே மனிதம் கொள் !
வாடாத கண்ணுள்ளவனே - பிறரைப் பாவம் பிடித்து
ஆடச் செய்யாதே
ஓடாய் உழை - ஆனால் என்றும் பாவத்தை
நாடாதிரு !

மனிதனே மனிதம் கொள் !
வானம் போல் உன் உள்ளம் இருக்க வேண்டும்
தானம் கொடுப்பதற்கு அதில் சிறிது இடம் வேண்டும்
மானத்தைத் தொலைத்துவிடாதே
ஞானத்தை விலைபேசாதே !

மனிதனே மனிதம் கொள் !
என்றோ பெற்ற லஞ்ச வெகுமதி
என்றும் உன் மனம் அடையாத நிம்மதி - பிறர் பணத்தைத்
தின்று பிழைக்கும் உன் மதி
இன்றே செய் அதற்கெல்லாம் நிரந்தர சமாதி

மனிதனே மனிதம் கொள் !
காற்று உன்னை வரவேற்கும்
வானம் உன்னை வணங்கும்
பூமி உன்னை வாழ்த்தும்
கடல் உன்மீது பன்னீர் அலைகளைத் தூவும்

மனிதனே மனிதம் கொள் !
வளம் கொழிக்க
நலம் பெருக - புது
உலகம் பிறக்கட்டும் - அதில்
மனித நேயம் என்னும் கொடி பறக்கட்டும் !"(7 வது வகுப்பில் )

ஒருவித ஆவேசமும் எனக்குள் மூண்டிருந்தது கவிதையின் மையத்தில் ....சிந்தனைகளுக்கு சிறகு பூட்டி பறந்த போது ஒரு வித தேடலும் துவங்கியிருந்தது....

சமூகத்தின் மீது கவிஞன் ஒருவன் கல் வீசுகின்றான் காயங்கள் என்னவோ அவனுக்குத் தான்...எனில் அவன் அவனிடத்தே முரண்பட்டு , சுவற்றில் இறுகிக் கிடக்கும் மர நிழல்களில் மலை முகடுகளாகின்றான்...தனக்குள் அனாதையாய் நாறும் பிணத்திற்கு கொள்ளி தேடுகின்றான்..வார்த்தைகளில் நங்கூரமிட்டு நரம்புகள் நாராய்க் கிழியும் வரை அவலட்சணத் தார்ச் சாலையில் இழுத்துச் செல்கின்றான்..அவன் காண்பதில் பெரும்பங்கு தேறாத குழிகள்...அவற்றில் வெறுப்புகளை நிரப்பிப் பார்க்கின்றான்.அஃதானது கண்சிமிட்டுகின்றது...பிறகொரு நரகத்தில் அவனுக்கென வீடும் இடையே வைதரணி நதியும் ஓடிக்கொண்டிருந்தது....இப்படிக் கனன்றுகொண்டிருக்கும் மனத்தில் , அவன் ஒழிக்க நினைப்பது சீர்கேடுகளை மட்டுமே....சாட்டை சுழலும் விதத்தில் சுழல வேண்டும் அப்பொழுது தான் அடியும் சரியாகச் சிவக்கும் ....அப்படியொருவன் ,

"இரண்டு அக்னி குழிகள்
எனது கண்கள் ..
ஒருவேளை
கந்தகக் கவிதைக்குள் குடியேறிய கவிஞனா
நான் ...?"-ருத்ராநாகன்

பிறிதொரு கவிதையில் இப்படிச் சாடுகின்றான் ...இவனது கவிதைகளில் வள்ளுவன் மாறுவேடம் பூண்டு வருவதுண்டு.....இவன் வாழ்வியலை வள்ளுவனைக்கொண்டே மீண்டும் புரட்டுகின்றான் ...அங்கு இருவரிகளுக்குள் அடங்கும் தவறுகளும் , குற்றங்களும் அதற்கான விளக்க உரைகளென குற்றவாளிகள் மற்றும் கோழைகளின் வாக்கு மூலங்களை காண்கின்றான்....இவனுக்கான குரல் இவனது ஒவ்வொரு சாடல்களிலும் குற்றவாளிக் கூண்டுகள் நிரம்பி வழிந்தபடி இருக்கின்றது...

"தாடியில்லாத
வள்ளுவனைத்தேடி
வந்து,
மூடியில்லாத
திண்ணையில்
தூங்கும்
முகமூடிகளா நீங்கள்.....
முகமூடி கலைத்தும்
முகமில்லாத
முட்டைகளா
நீங்கள்...

பிட்டுக்குமண்சுமந்து
ஒரு வாய்
பிண்டத்துக்கு,
மறுவாயிலும்
மண்சுமக்கும்
வெறுவாய் ஜீவிகளா
நீங்கள்....
ஒரு வாயில்
மண்ணும்-அதே
மறுவாயில் பொன்னும்
புதைத்து வைத்த
வருவாய் ஜீவிகளா
நீங்கள்...."-ருத்ரா நாகன்

நாளைய மானுடத்தின் தீர்மானம் எதுவென யாவரும் அறியாதொரு பயணத்தில் ஓடிக்கொண்டே இருக்கின்றோம் .அஸ்ஸாமியக் கவிஞர் ஒருவர் ,

"அவலட்சணமான புழுவாக இருந்து , மிகுந்த பிரயாசை , சிரமங்கள் பட்டு அழகான பட்டுப் பூச்சியாக மாறும் ஜீவன் , தன்னிலிருந்து ஒரு பட்டுப் பூச்சியைத் தோற்றுவிக்காமல் ,மீண்டும் புழுவை ஜனிக்க வைப்பது போன்றது சமுதாயம் என்கிறார்..."

இதையே ,

"குரங்கின் பரிணாமம்
மனிதனை ஈன்றதெனில்
மனிதனின் பரிணாமம் எதனை ஈனும் ?"

எனக் கவிப்பேரரசு வைரமுத்து கருந்துளையைக் காட்டிலுமொரு அரியவகை இருண்மைச் சிந்தனைக்குக் கவர்ந்திழுக்கின்றார் ...........

சமூகச் சீரழிவுகள் குறித்து எழும் இலக்கியங்களானது ,"சமுதாயம் தன் சீர்கேடுகளை உணர்ந்து சீர்படுத்திக் கொள்ள விழையும் விழிப்புணர்வை உண்டாக்கும் வீரியம் கொண்டதாக இருப்பது அவசியம் "என்கிறார் வங்கத்தின் மூத்த கவிஞர் சுபாஷ் அவர்கள்...........

தொடரும் ....

நாள் : 19-Mar-15, 1:25 pm

மேலே