வங்கதேசத்தில் நடந்து வரும் 20-20 உலக கோப்பை போட்டியில்,...
வங்கதேசத்தில் நடந்து வரும் 20-20 உலக கோப்பை போட்டியில், முதல் முறையாக ஒளிரும் ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்டம்பிலும், அதன் மீது வைக்கப்பட்டிருக்கும் இரண்டு பெய்ல்சிலும் குறைந்த மின்அழுத்தம் கொண்ட பேட்டரிகளுடன், எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
பந்து தாக்கி பெய்ல்ஸ் கீழே விழுந்ததும் சில வினாடிகள் அது ஜொலிக்கிறது. பெய்ல்ஸ்சில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ சிக்னல் மூலம் ஸ்டம்பும் சிவப்பு நிறத்தில் மின்னுகிறது.
ஒளிரும் ஸ்டம்பு தொழில் நுட்பம் சர்ச்சைக்குரிய அவுட்டுகளுக்கு தீர்வு காண வசதியாக இருப்பதோடு, ரசிகர்களுக்கும் இது புது அனுபவமாக அமைந்துள்ளது. பொதுவாக பெரிய போட்டிகளில் வெற்றி வாகை சூடினால், உடனடியாக ஸ்டம்பை ஆக்ரோஷமாக பிடுங்கிக் கொண்டு வீரர்கள் ஆர்ப்பரிப்பது வழக்கம். ஆனால் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்டம்புகள் மற்றும் பெய்ல்ஸ்களின் விலை ரூ.25 லட்சமாம். இதனால் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்டம்புகளை பிடுங்குவதற்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.