என்னைச் சிந்திக்கத் தூண்டிய வசனம்:- " அன்பற்ற கணவன்,...
என்னைச் சிந்திக்கத் தூண்டிய வசனம்:-
" அன்பற்ற கணவன், அன்பற்ற மனைவி, அறிவற்ற தந்தை, அறிவற்ற தாய், திக்கற்ற பையன், திக்கற்ற பெண், பொறுப்பற்ற குடும்பம்,
பொறுப்பற்ற சமுதாயம் என்னும் இந்தக்கொடுமைகள் இல்லாத நல்ல நாளை
எதிர்பார்த்துத் தொண்டு
செய்கிறவனே வீரன்.
அதற்கு ஏற்றபடி எண்ணக் கற்றுக் கொள்கிறவனே அறிஞன்.
அந்த நாள் வர நெடுங்காலம் செல்லலாம்.
ஆனால், எண்ணுவதற்கு நெடுங்காலம் வேண்டியதில்லை.
இன்றே எண்ண முடியும் அல்லவா?
இப்போதே எண்ண வேண்டும் அல்லவா?
எண்ணுவதற்கு ஒரு
துணிவு - வீரம் - வேண்டும்.
அந்தத் துணிவு உடைய வீரன் தான் ஞானி.
அவன் என்ன எண்ண வேண்டும்?
அன்பற்ற, அறிவற்ற, திக்கற்ற, பொறுப்பற்ற
நிலைகளுக்கெல்லாம் காரணம் அன்பற்ற சமுதாயத்தில் உள்ள பொருள் வேட்டை தான் என்று எண்ண வேண்டும்.
அங்கங்கே காண்கின்ற குறைகளுக்கெல்லாம் அவரவர்களின் மேல் குறை இல்லை என்று
எண்ணவேண்டும்.
குறையுடைய சமூக அரசியல் அமைப்பே
காரணம் என்று எண்ண வேண்டும்.
பொருள் வேட்டையற்ற
சமுதாயத்தை அமைப்பதே கடமை
என்று எண்ண வேண்டும்.
முரடர்களைக் கண்டாலும், ஒழுக்கம்
கெட்டவர்களைக் கண்டாலும், அன்பற்றவர்களைக் கண்டாலும், அறிவற்றவர்களைக் கண்டாலும், திக்கற்றவர்களைக் கண்டாலும் எவன் இப்படி எண்ணுகிறானோ, அவன் தான்
மெய்யுணர்வு பெற்றவன். அவன்
தான் உண்மை உணர்ந்த ஞானி.
மற்றவர்கள் எல்லோரும் திண்ணை வேதாந்தம் பேசுகிறவர்களே ".
(டாக்டர் மு.வரதராசனார் எழுதிய, " எதையோ பேசினார் ", என்ற சிறுகதையிலிருந்து.)