புதுடில்லி: இந்தியாவுடனான நட்புறவை மேம்படுத்துவோம் என்று கூறிய சீனா...
புதுடில்லி: இந்தியாவுடனான நட்புறவை மேம்படுத்துவோம் என்று கூறிய சீனா மறுபுறம் தனது வழக்கமான அத்துமீறலை தொடர்ந்து கொண்டே உள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற நிலையில் தங்கள் நாட்டிற்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்த நாடுகளில் ஒன்று சீனா. இதனை தொடர்ந்து சீன அதிபரின் சார்பில் அவரின் பிரதிநிதியாக சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளிடையே எல்லைப்பிரச்னைகள் குறித்து விரிவாக பேசப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீன ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் உத்தரகண்ட் மாநிலத்தின் வான் பகுதிக்குள் சுமார் 30கி.மீ தூரம் வரை ஊடுருவி பறந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தோ-திபெத் எல்லை பகுதியிலும் பறந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் ஜோஷிமத் என்ற இடம்வரையில் சீன ஹெலிகாப்டர் ஊடுருவி இருப்பது இந்திய ராணுவத்தினரின் மத்தியி்ல் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதியன்று இதே போன்ற சம்பவத்தில் சீனா ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீன கப்பல் படை அதிகாரிகள் வருகை: சீனாவின் அத்துமீறல் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் சீன கப்பல் படை அதிகாரியான ரியல் அட்மிரல் ஹான் ஷியாகு மற்றும் தளபதி லி ஜியான்ஜூன் உட்பட அதிகாரிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள கிழக்கு பகுதி கப்பல்படை தலைமையகத்தில் இருநாட்டு ராணுவத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினர். சந்திப்பின் விவரம் குறித்து பேசிய கிழக்கு பகுதி கமாண்டர் துணை அட்மிரல் அணில் சோப்ரா கூறுகையில் நல்லெண்ணத்தின் அடிப்படையி்ல் சந்திப்பு நிகழந்ததாக குறிப்பிட்டார்.