காதலிக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை....!!!(Mano Red)

அர்த்தராத்திரி ,
அதீத நிலவொளி,
கண்ணை விரட்டும் தூக்கம்,
இரவுக்கு அடங்காத கனவு,
அமளி துமளி ஏதுமின்றி
அனிச்சையாய் கனவில் வந்தாள்..!!

அனிச்சையாய் கனவில் வந்து
இயல்பிருப்பு நிலை மாற்றி,
அங்கிட்டு இங்கிட்டு என
என் கனவை இழுத்து
திசை மாற்றி விட்டாள்..!!

திசை மாற்றி விட்டு
இரக்கமின்றி அவள் ஓட
வழிமாறிய துறவி போல்
வழிதேடி விழி பிதுங்கி,
கனவில் கரை தேட வைத்தாள்..!!

கனவில் கரை தேட வைத்து
நான் நொந்து பெற்ற
ஈடேறாத வலியின் மேல்
ஈயம் பூசி மறைத்து
உவகை கொள்ள விளைகிறாள்..!!

உவகை கொள்ள விளைந்து
அதிர்ஷ்டம் இல்லாத என்னை
அக்குவேறு ஆணிவேறாக பிய்த்து
ஆள்கொல்லி நோயை புகுத்தி
அளவளாவி வேடிக்கை பார்க்கிறாள்..!!

அளவளாவி வேடிக்கை பார்த்த
அவளிடம் நான் கேட்டேன்,
ஒன்றுமறியா என்னை
கனவிலும் துரத்தி வந்து
காதல் களை நட்ட பார்க்கிறாயா..??

நிஜ உலகிலே காதலின் சூது
என்னை கவ்வ முடியவில்லை,
பொல்லாத கனவில் நீ வந்து
காதல் எகத்தாளம் செய்தால்
மயங்கி விட நான் ஒன்றும்
முட்டாள் இல்லை..!!

கனவு தேவதையே
உன்னை எண்ணி சிரிப்பு வருகிறது,
சுத்தி ஏதும் வளைக்காமல்
ஒரே மூச்சில் பதில் சொல்கிறேன்,
உன் காதல் நோய்க்கு
நான் மருந்தாக மாட்டேன்
வேறு ஆளை பார்த்து கொள்..!!

ஏனெனில்,
பருவ வயதில் வருவது காதலல்ல,
பக்குவப்பட்ட வயதில் வருவதே காதல்..!!

எழுதியவர் : மனோ ரெட் (17-Aug-13, 1:21 pm)
பார்வை : 239

மேலே