புறநானூறு பாடல் 37 - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

(சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அறிமுகம் காண்க)

இப்பாடலைப் பாடிய மாறோக்கத்து நப்பசலை யாரின் இயற்பெயர் நப்பசலையார் ஆகும். இவரது ஊர் மாறோக்கம் என்றும், மாறோகம் என்றும் வழங்கும். இது பாண்டிய நாட்டின் கொற்கையைச் சூழ்ந்த பகுதியாகும். பெண்கள் அடையும் பசலை நோயைப்பற்றி நயமுறப் பாடியதால் இவர் நப்பசலையார் என அழைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.

நப்பசலையார் இப்பாட்டில், ‘புறாவுக்கு நேர்ந்த துன்பத்தைத் தீர்த்த ஒளி பொருந்திய வேலுடன் சினங்கொண்ட படையினை உடைய செம்பியன் வழித்தோன்றலே! பெருந்தகையே!

பசுமையான கொடிகளையுடைய பெரிய மலையின் பிளவுகளுள்ள பகுதிகளில் நஞ்சுடைய வெண்மையான பற்களையும், ஐந்து தலைகளையும் கொண்ட மிக சீற்றமும் சினமும் உடைய நாகப்பாம்பு புகுந்தது. வானம் தீப்பிடித்து வேகமாகப் பரவி இடி விழுந்து அங்கே தாக்கி அந்த நாகத்தை அழித்தது.

அதுபோல், முதலைகளில் ஒருவகையான கராம் என்ற ஆண் முதலைகள் நிறைய உள்ள, கோட்டை யைச் சுற்றி அமைக்கப்பட்ட ஆழமான நீர் நிறைந்த அகண்ட பள்ளங்களின் (அகழி) இருண்ட மடுக்களில் அவைகள் ஒன்று சேரத் திரண்டோடி நடுச்சாமங்களில் ஊர்க்காவல் செல்வோரின் நிழலைக் கண்டு கவ்வுகின்றன.

அத்தகைய முரட்டு முதலைகளையுடைய மிக நீளமான நீர்நிலைகளும், செம்பு மிகுதியாக உபயோகித்து அமைக்கப்பட்ட மதிலும் உடைய மிகச் சிறப்புடைய பழைய ஊரினுள்ளே முகபடாம் அணிந்த யானைகளுடைய அரசன் உள்ளே இருப்பதை எல்லாம் நல்லவை என்றுகூடக் கருதாது போரில் அவற்றை அழிப்பதில் வல்லவனாய் நீ இருந்தாய்’ என்று கிள்ளி வளவனின் மறம் வியந்து, அவனது வாகைநலத் தைப் பாராட்டுகின்றார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

நஞ்சுடை வாலெயிற் றைந்தலை சுமந்த
வேக வெந்திற னாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பப் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத் துருமெறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற் 5

சினங்கெழு தானைச் செம்பியன் மருக
கராஅங் கலித்த குண்டுகண் ணகழி
இடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி
யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச் 10

செம்புறழ் புரிகைச் செம்மல் மூதூர்
வம்பணி யானை வேந்தகத் துண்மையின்
நல்ல வென்னாது சிதைத்தல்
வல்லையா னெடுந்தகை செருவத் தானே.

பதவுரை:

நஞ்சுடை வாலெயிற்று ஐந்தலை சுமந்த வேக வெந்திறல் நாகம் புக்கென - நஞ்சுடைய வெண்மை யான பற்களையும், ஐந்து தலைகளையும் கொண்ட மிக சீற்றமும் சினமும் உடைய நாகப்பாம்பு புகுந்தது போல

விசும்பு தீப்பிறப்பப் திருகி – வானம் தீப்பிடித்து வேகமாகப் பரவி

பசுங்கொடிப் பெருமலை விடரகத்து – பசுமையான கொடிகளையுடைய பெரிய மலையின் பிளவு களுள்ள பகுதிகளில்

உரும் எறிந் தாங்கு – இடி விழுந்து அங்கே தாக்கியது

புள்ளுறு புன்கண் தீர்த்த – புறாவுக்கு நேர்ந்த துன்பத் தைத் தீர்த்த

வெள்வேல் சினங்கெழு தானைச் செம்பியன் மருக - ஒளி பொருந்திய வேலுடன் சினங்கொண்ட படை யினை உடைய செம்பியன் வழித்தோன்றலே!

கராஅம் கலித்த குண்டு கண் அகழி – முதலைகளில் ஒருவகையான கராம் என்ற ஆண் முதலைகள் நிறைய உள்ள, கோட்டையைச் சுற்றி அமைக்கப் பட்ட ஆழமான நீர் நிறைந்த பள்ளங்களின்

இடங் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி – இருண்ட மடுக்களில் அவைகள் ஒன்று சேரத் திரண்டோடி

யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் – நடுச்சாமங் களில் ஊர்க்காவல் செல்வோரின் நிழலைக் கண்டு கவ்வும்

கடு முரண் முதலைய நெடுநீர் இலஞ்சி - மிக முரட்டு முதலைகளையுடைய மிக நீளமான நீர்நிலைகளும்

செம்பு உறழ் புரிசை - செம்பு மிகுதியாக உபயோ கித்து அமைக்கப்பட்ட மதிலையும் உடைய

செம்மல் மூதூர் – மிகச் சிறப்புடைய பழைய ஊரில்

வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் – முகபடாம் அணிந்த யானைகளுடைய அரசன் உள்ளே இருப்பதையும்

நல்ல என்னாது – அவற்றை எல்லாம் நல்லவை என்றுகூடக் கருதாது

செருவத்தான் சிதைத்தல் வல்லை – போரில் அவற்றை அழிப்பதில் வல்லவனாய் இருந்தாய்

நெடுந்தகை – பெருந்தகையே!

திணை – வாகை. போர்க்களத்து மிக்கோர் செரு வென்றது வாகைத் திணை ஆகும். வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றி இப்பாடல் கூறுவதால் இப்பாடல் வாகைத்திணை ஆகும்.

துறை: அரசவாகை. 1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும்.

2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது.

3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகை நாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.

’செம்மல் மூதூர் வம்பணி யானை வேந்து அகத்து உண்மையின் நல்ல வென்னாது உருமெறிந் தாங்குச் சிதைத்தல் வல்லையா னெடுந்தகை’ என்று கிள்ளிவளவனின் இயல்பின் மிகுதியையும், வீரத்தையும், வெற்றியையும் எடுத்துரைப்பதால் இப்பாடல் அரசவாகைத் துறையாகும்.

’புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல் சினங்கெழு தானைச் செம்பியன் மருக’ என்று கிள்ளி வளவனின் முன்னோர்களில் ஒருவனாகிய செம்பியனின் சிறப்பைக் கூறுவதால், இப்பாடல் ”முதல் வஞ்சி” என்ற துறையும் ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Sep-13, 9:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 322

சிறந்த கட்டுரைகள்

மேலே