நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red)

உறைகின்ற நின் முழுமதியில் மயங்கி, சரிந்து
மறைகின்ற என் திருவுருவம் அதிர்வடைய, வந்து
நிறைகின்ற வெண் பால் நிலவே, நெஞ்சத்து
அறைகின்ற கண்மலர் பூவே, என் சிறு கொடியே..!!
கொடியே சூழும் இளந்தளிரே பெண்ணே, பாடும்
படியே என்னை சுருக்கிவிரிக்கும் சுடரே, அன்புப்
பிடியே அர்த்தம் ஆயிரமுள்ள காதலே, உன்னை
அடியேன் தொழ காத்திருக்கிறேன்,என் ஆசையே..!!
ஆசைப் பட்ட அடி நெஞ்சம் ஆருயிர் தேட, உன்
பாசச் சிறையில் என்னுயிர் வேர் அகல, கூந்தல்
வாசம் பட்டு உடல் சிலிர்த்து தெறிக்க, மெல்ல
நேசக் கரம் நீட்டி காதல் தந்தாய், என் பூத்தவளே..!!
பூத்தவளே புது வெக்கம் கொண்டவளே, என்னை
காத்தவளே கருவாக்கியவளே, அத்தனைக்கும்
மூத்தவளே ஒப்பிலா காதலியே, ஒப்பனையில்லா
மாத்தவளே காதல் கொண்டேன்,என் பேரழகே..!!
அழகே அச்சம் மடம் மறைய, களிப்பில் காதல்
பழகி தேசம் சுற்றக் கண்டோம், மிரட்சியின்றி
உழவு நிலமாய் இன்புறவே, எங்கேனும்
இழவு கொடியதாய் காணலையே, என் விழிக்கே..!!
விழிக்கே வினையொன்று வந்து, காதல் வெறுத்த
வழிக்கே காதல் சாகுமாயின், இப்படியொரு
பழிக்கே காதல் கல்லறை ஏற, தேள் நரகக்
குழிக்கே என எண்ணாதே, என் முத்துமாலையே.!!
மாலை சூட நான் வருவேன், காக்கை கரையும்
காலையில் உன்னை மீட்டு, அச்சம் துறந்து
வேலை ஏந்தி கானகம் சேர்ந்து, மிச்ச உயிருடன்
பாலையும் உனக்களிப்பேன், என் சிறந்தவளே..!!
சிறக்கும் காதலில் பூமி சுழல, அந்த நிலவெல்லாம்
பறக்கும் நம் இதயம் கண்டு பசிகொள்ள, நீயோ
உறக்கம் ஏற கண் அமர்ந்தால் போதும், சுய அறிவு
மறக்கும் நிலையிலும் எந்நிலை மாறாது காதலே.!