யுகங்கள் தாண்டும் சிறகுகள் 13-புலமி

இன்று மழை.....சூரிய உதயத்தின் மூடு மந்திரம் கலையாத காலை வேளையின் இமைகளை வருடிக் கொண்டிருந்தது...திறந்து கிடந்த பின்வாசல் உறக்கம் உதிர்த்துக் குளிர்ந்த திரிலோகச் சுகந்தம் சின்னச் சின்ன செடி கொடிகளில் வெள்ளை, நீலம் , இளஞ்சிவப்பென மையல் கொண்டிருந்த பூக்களின் தொப்பல் விடியலில்.....நெடிந்துயர்ந்த வாழை இலைகளின் கிழிசல்கள் வரைந்து ஒழுகல் கொடுத்திருந்தது மழையின் நுணுக்கங்களில் பிடிகொண்ட தூறல் முனைகள்.......ஒரு முறை இதே பின்வாசல் நுழைந்த காற்றில் இப்படியொரு கவிதை வான மூடிகளில் தோய்க்கப்பட்ட கரு மேகங்களின் மெல்லிய சுவாசத்தில் பொருந்திய சல்லடைத் துவாரத்தின் வழியோடியது துளியாய்....

“மழையருந்திக் கொண்டிருந்தது
பின்வாசல் - இரு
கண்களால் நனைந்து....!”-புலமி

காதலை வெளுக்கும் வானமுமாய் வாடுகின்றது மனமும் தொலைதூரம் நீண்டிருக்கும் மழையாலான சாலையோரக் கூச்சல்களைப் பிழிந்து ....

இதுவரை மனதிற்குள் ரகசியமாய் தேடப்படும் எந்த காதலுக்கும் எந்தவொரு கவிதையும் தனக்குள் வெளிச்சத்தை கொண்டுவருவதை முழுமையாய் அனுமதிப்பதில்லை.....கனவுகளுக்குள் யுத்தமாகும் தேடலின் வரிகளைப் படிக்க அவ்வளவு எளிதில் எந்த விழிகளுக்கும் மொழியாவதில்லை.... .காதல் அரிதான உணர்வா ? பெரிதானா உணர்வா ?அது கடக்கக்கூடிய நிலையில் எதுவாக இருப்போம் ?காதல் பற்றிய தற்போதைய ஆராய்ச்சியில் உள்ளனர் அறிவியல் ரீதியாக.இருப்பினும் எந்த அளவில் அது தன்வழி உணரவிடும் உளவியல் அடிப்படையில் என்று அதன் முடிவிற்கே விடப்படுகின்றது.

"உனது நினைவின் படிமம்
உன் முகத்தினை
பெயர்தெரியாத ஒரு பறவையின்
சிறகைப் போல
எப்போதும் என்னுள்
பட படத்துக் கொண்டேயிருக்க-
மனதில் எழுதிய கவிதைகளோ
இக்கணம் வரை
எந்த சொற்களுமற்று
காகிதத்தில் வராது
கரைந்து கொண்டேயிருக்கிறது ...."-கவிஞர் பாலா (லம்பாடி)

கரைந்து கொண்டேயிருக்கிறது காதல் ஆனால் தீர்வதேயில்லை..இது ஒன்றும் அட்சயப் பாத்திரம் அல்ல.காதலின் உச்சம் அது தொடவே முடியாத தொடுபுள்ளியில் மொத்த நினைவுகளையும் மெத்த அமர்த்தியுள்ளது.அந்தப் புள்ளியானது தொடுவதற்கு அரியதாயுள்ளது.இருளின் பிம்பத்தை இருளில் காண்பதைப் போல யோகமுடையது.ஆத்மாவென ஒன்றை அதன் மரணமாயுள்ள உடலைக் கொண்டு வரையறுப்பதைப் போல அமைந்துவிடுகின்றது காதலுக்கும் மனதிற்குமான நிர்பந்தம்.கொடியது வலி என்பதையும் உலுக்கிவிடுகிறது.வீழ்ந்துவிடும் கனவுகள் எல்லாமும் கறைபடிந்தே தீரும்.தீர்ந்த பின்னும் அவற்றின் வடுக்களை சுமக்கும் வலிய காலமும்....கவிஞர் பாலாவின் காதல் கவிதைகள் எந்த வார்த்தை ஜாலங்களுக்கும் கட்டுப்படுவதாயில்லை. உள்ளக வீதியில் திருப்புமுனைகளில் அகவயத்தில் லயித்திருக்கிறார்.....

"எனக்கான உயிலில்
உனக்காய் நானெழுதிய
'ஜென்மயாசகம் ,'
உன் கண்ணீர் மடியில்
காயத்தோடு வந்து விழக்கூடும்..."-ருத்ரா நாகன்

இவ்விருவருக்குமான காதல் உடன்பாட்டில் ருத்ரா காதலை ஜென்ம யாசகமாய் உயில் எழுதிக் கொண்டுள்ளான்...ஆயினும் காதலின் அடர் க் காடுகளில் தனித்திருக்கும் அரவமற்ற மிருகத்தின் பிடியில் சிக்கிக் கொண்டதுவாய் கதறுகின்றது வலி.....

".........விழி வைத்துள்ள
மங்காத கனவுகள்போல் என்னுள்ளத்துள்
மயக்க நீச்சல் செய்கின்ற எண்ணங்கள் போல்
எங்கே நான் சென்றாலும் நினைவிற்குள் நீ
இருக்கின்றாய்" - நா.காமராசன்.

காதலின் உள்ளுணர்வுக் கவித்துளிர்களில் அக வீழ்ச்சியில் சிதறும் சில துளிகள் போல் சிதறுகின்றது போகும் திசையெல்லாம் பிரம்மைகளை மைல் கற்களாய் நட்டுவைத்துக் கொண்டே...நீ இல்லாமலும் இருக்க முடிவதெனில் கூட காதலற்று இருக்க முடிவதில்லை எனில் இல்லாமலே என்னை தனக்குள் விழுந்து கொண்டே நீளும் இந்த ஒன்றை எப்படிப் புலம்புதல் தகும்?!கவிதையாவது வெளியில் எம்மை இழுத்து விடும் சாக்கில் பலம் கொண்ட புறவயங்களைப் புகுத்துகின்றேன்...என்னிலும் அது தோற்றுவிட்டு மீண்டுமான முயற்சிக்கு வித்திடுவதேயில்லை "மயக்க நீச்சலில்"......
எப்படிக் கடவுளொரு கிடைக்கப்பெறாத பராபரமாய் தனது கைகளை விரித்து திவ்ய ரூபமாகின்றதோ அதுவானது துன்பத்தின் பாதையில் உருளும் சிறு கல்லைப் போல் விலக்கித் தூரத் தள்ளப்படுகின்றது.அதுபோலவே சோகம் ஒருமித்த பிரிவின் அதிரூபச் சூழலும் கடக்கப்படுவதாகின்றது....

"காதலின் பரிசோ சூனியம் தான் !
ஆனால் காதலோ
அறிவின் அறிவாக வளர்கிறது!
காதலைத் தவிர ஒரு இன்பமும் இல்லை ,
ஆனால் சோகம்
காதலின் முறிவினில் தான் பிறக்கிறது
காதல் தெய்வீகமானதாகவே
இருக்கட்டும் !
அது காலத்தையும்
உலகப் பெருவெளிகளையும் வெற்றி கொள்ளட்டுமே "
-நா.காமராசன்

உலகம் எப்படிச் சிறியதெனில் அது அவரவர் உள்ளே தனித்துச் சுழலும் தன்மையினை அடைந்திருக்கும் போது மட்டுமே....

தாமரையின் கவிதைகள் காதலுக்கென்று புதியதாய்ப் பல சிறகுகளை கொடுத்து சிலிர்க்க வைத்திருக்கும் என்றால் அது மறுப்பதற்கேயில்லை....சோகம் , பிரிவு கூட புழுதி போல் மெல்ல எழுகின்ற நுண்ணிய மனோதிட்பங்களாகி அணைந்து விடுகின்றது......முதல் பார்வை , முதல் சந்திப்பில் யார் அவன் /அவள் என்று வெகு காலம் இருளைக் கொப்பளித்து உமிழ்ந்து கொண்டிருக்கும் தனிமையின் தாழ் விலக்கிப் பிரபஞ்ச வெளியில் அன்று மட்டும் வியப்பிற்குரியவராய் மாற்றிப் போகின்றது ஒரு கேள்வி....

"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை" - தாமரை

உன்னைச் சந்திக்கும் முதல் அந்த நொடியில் என் வானிலை மாறும்...அங்கு பெருங்காற்றும் தென்றலாய்த் தழுவும்...மௌனங்கள் குடையாகும் விழிகளுக்குள் சட்டென மோடமிட்ட காதலுக்கு ....எத்தனையோ காலங்கள் வெறும் யுகங்களாய் மட்டுமே கழிந்திருக்கும்....புதிதாக்குவதும் நீயாவாய்...என்னில் புலப்படும் அகக்கண்ணும் நீயாவாய்....உன் பார்வை நானாகும் தவித்தலில் கண்டுணர்வோம் .......

ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் , முதல் பார்வையிலேயே பல ஜென்மக் காதலை ஒரு காட்சியில் உருவகித்துவிடும்படி அமைந்திருக்கும்...ஆங்கிலத்தில் எளிமையாக இப்படிச் சொல்லலாம் "லவ் அட் பஸ்ட் சைட் ".....காதலைப் பொருத்து இவரது கோணம் இப்படித் தான் கருத்தாகின்றது...காதல் எல்லாமும் மாற்றும் அது அழகானது அறிவானதும் கூட மேலும் பணிவானது பண்பானதும் கூட என்பதை காட்சிக்கூறுகளாய் புடம்போடுவார்......அவரது கனவு தேசத்து தேவதை வெறுமனே தேவதையாக இருந்திருக்க மாட்டாள் ...காதலியாக இருந்திருப்பாள்....அவரின் மனதிற்குள் காதலே மங்கையாகிவிட்டதும் புதினமாக இருக்கும்.....

"O mistress mine, where are you roaming?
O stay and hear! your true-love's coming
That can sing both high and low;
Trip no further, pretty sweeting,
Journey's end in lovers' meeting-
..................................................."-shakespeare

உன் மனம் ஒரு காற்றைப் போல் எங்கும் சுற்றித் திரியலாம்...எதனை த் தேடுகின்றாயோ அதுவே உன் காதலாகி இங்கேயே இருக்கும்படி கூறுகின்றது இதயம்...அதுவே உன்னை ஏற்ற இறக்கங்களில் தாலாட்டக் கூடியதாக இருக்கும்...ஓர் இனிய நிகழ்வாக இந்தப் பயணத்தின் முடிவாகவே நமக்கான தூரங்கள் நீளும்.....

உன்னை நினைப்பதும் இல்லை எதிர்பார்ப்பதும் இல்லை...உனக்கென ஒரு வேண்டுதலும் இல்லை...எப்படித்தான் வருகின்றாயோ எந்தன் உயிரும் அறியாத ரகசியத்தில்...இப்படிக்கு நீ காதலே தான்...உன்னால் பரவசமும் சுமையாகின்றது......

நவீனத்துவத்தில் இத்தகைய காதலின் மலிவை ,

"அத்தனை மலிவாய்
அள்ளிக் கொள்ள
கத்திரிக்காய் என்ன , காதலா "

என்று நயம்படுகிறார் கவிஞர் மீரா.வெண்ணிலாக்களை உடைத்துக் கடலை தேடும் கூட்டங்களில் காதல் என்பது மென்று செரிக்கும் உணர்வாகவே இருந்துவிட்டுப் போகின்றது....
எப்படியும் தனது உன்னதத்தை காலங்கள் தோறும் திக்பிரமையில் வைத்துக்கொண்டே காத்திருக்கின்றது அதன் ஒற்றை புன்னகைக்காய் ...

இயற்கையோடு இயைந்த ஒன்றனைத் தான் பிரித்துப் பார்க்க இயலாவண்ணம் தாமும் அதில் இரண்டறக் கலந்துவிட்ட உணர்வினிலே...

"வானமழை நீ எனக்கு , வண்ணமயில் நானுனக்கு "

எனப் பாரதியார் வெற்றிடம் நிரப்புகின்றார்...அதிலே துயில் கொள்ள கற்பனைக்கும் இடமளிக்கின்றார்....
சில கற்பனைகளில் இப்படியும் விழிக்கின்றது கூட்டுவிழிகள்.....

"எந்தன் காதல் சொல்ல
என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி"- வைரமுத்து

வைரமுத்துவிற்கு நிகர் வைரமுத்துவே ,காதல் அணுக்களைத் துளைத்தெடுக்கும் வரிகளுக்கும் வர்ணனைகளுக்கும் ....

காதலைத் தன்னிலிருந்து தனித்துப் பார்க்கும் திறனும் இல்லாத கவின்மிகு கோபமும் அதற்கே உண்டு.............

வோர்ட்ஸ் வொர்த் தனது காதலை இயற்கையின் மீது கொட்டிக் கரைந்தாரெனில் , பாரதி "கண்ணன் பாட்டாகிய "தெய்வீகப் படிமத்தில் திளைக்கிறார்........

"I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,"-வோர்ட்ஸ்வொர்த்

இளமையில் மட்டுமா இந்தக் காதல் தேனூறும் ...முதுமையிலும் அமிர்தமாய் நந்தவனப் பூக்களுக்கு வயதாகும் கதையினில் பொன்னூஞ்சலில் காதல் பறவைகளின் ஆலாபனை முழுவதும் வசந்தங்களின் மெல்லிய வருடங்களின் வருடல்..........

"கால நதியில் - நாம்
கடலருகே மிதக்கின்றோம்
கடலருகே மிதந்தாலும்
காலத்தை ரசிக்கின்றோம்

இதோ ...உன்
நெற்றியில் விழுந்திருக்கும்
விதியின் சுருக்கங்கள்
கவிதை வரிகளைக்
காட்டுகின்றன.

அதில் நான்
காதலை வாசிக்கிறேன்

அது-
யாராலும் எழுதப்படாத காதல் "-கவித்தாசபாபதி

-தொடரும்

எழுதியவர் : புலமி (4-Apr-15, 5:42 pm)
பார்வை : 242

சிறந்த கட்டுரைகள்

மேலே