என் வாசலில் சில மின்னல்கள் - 3

காலையில் எழுந்தவுடன் இன்று வாக்கிங் போக வில்லை .எப்போதும் வாக்கிங் போன அன்று ஒரு உற்சாகம் பற்றிக் கொள்ளும் .அது என்னோடு நாள் முழுதும் இருக்கும் .இருப்பினும் என்னை இன்று உற்சாகம் பற்றிக் கொண்டது .

அதன் காரணம் ..படித்த ஒரு கட்டுரை . நாம் தினமும் காணும் , பயன் படுத்தும் , இன்புறும் ஒரு விஷயத்தை பற்றி பா ராகவன் எழுதி இருக்கிறார் .
அப்படி என்ன பொல்லாத இன்புறும் விஷயம் ? நம்ம கவிதையை விட ? என்று நானும் தான் நினைத்தேன் .
ஆனால் அது தமிழர்களின் வர பிராசதம் . காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் கூட அது பிரசாதமாய் கிடைக்கும் . அவ்வளவு உன்னதமானது . பிரசித்தமானது .

ஆம் .அது ..நம் இட்லி தவிர வேறில்லை .

அவர் சொல்கிறார் " கன்னடர்களுக்கு எதையும் எண்ணெயில் பொறித்தால்தான் திருப்தி . ஆந்திரர்களுக்கு காரம் இருந்தால்தான் திருப்தி . கேரளர்களுக்கு கொஞ்சம் இனிப்பு இருக்க வேண்டும் . எனவே மிச்சமிருந்த தமிழன் இட்லியை தன் அடையாளம் ஆக்கிக் கொண்டான் "

ஆம் இட்லி தமிழர்களின் அடையாளம் . ஒரு நாளைக்கு 4 இட்லி சாப்பிடுகிறோம் என்றால் ஒரு வருஷத்துக்கு குறைந்த பட்சம் அந்த வர பிரசாதத்தை 300 நாள் சாப்பிட்ட கணக்கும் சேர்த்தால்
வருடத்துக்கு 1200 இட்லிகளை ஆனந்தமாய் அருந்தி தமிழன் அதை குஷ்புவோடும் , முருகனோடும் கொண்டு போய் சேர்த்து விட்டான் என்பது மிகைதான் என்றாலும் நமது இட்லிக்காக அதை ஏற்றுக் கொள்ளலாம் .

ஒரு வடநாட்டுக் காரன் உங்கள் வீட்டுக்கு வந்து போன பிறகு உங்கள் புகழை உலகெல்லாம் பரப்பி கொண்டிருப்பான் அவன் தின்று போன நான்கு இட்டிலிக்காக .நீங்கள் அவனுக்கு புரியாத தமிழில் பிறகு திட்டிக் கொண்டிருந்தாலும் சரி . நிச்சயம் அவன் உங்களை மறக்க மாட்டான் .

" இவா கல்யாணத்துல போட்ட இட்லி உங்க மூஞ்சி மாதியே இருக்கு .அதனால அம்பது ரூபா வச்சா போதும் " என்று மனைவி சொல்ல பல கணவன்மார்கள் தன் உயிர் சொந்தங்களுக்கு , நண்பர்களுக்கு கூட ஐம்பது ரூபாயை கவரில் திணித்து கையில் கொடுத்து விட்டு அதை வைத்துக் கொண்டு விஷ் யு மேரிட் லைப் வாழ வாழ்த்தி இருக்கிறார்கள் .

எல்லாம் சரி . அப்படிப்பட்ட இந்திர லோகத்து இட்லியை இட்டாலியன் பிசா எங்ஙனம் அழிக்கிறது ?

ஏன் இளைஞர்கள் ஆயிரம் ஆண்டு தேவ இட்லியை விட்டு விட்டு நூறு ஆண்டு ராட்சச பிசா மேல் மோகம் கொண்டனர் ?

ஒரே ஒரு பதில் . காரணம் ...? பிரசென்டேஷன் .( நான் இந்த பிரசென்டேஷன் வார்த்தையை தான் உபயோகப் படுத்த போகிறேன் . மன்னிக்கவும் )

ஒரு பிசாவை அமெரிக்கன் பிரசென்டேஷன் செய்த அளவுக்கு, பத்தில் ஒரு பங்கு கூட நம் மக்கள் இட்லியை பிரசென்டேஷன் செய்ய வில்லை .அதில்தான் இட்லி அடி வாங்கியது . இப்போது சில நல்ல உணவகங்கள் , நவீன நள மகராசன்கள் , ராணிகள் அதை கொஞ்சம் முன்னுக்கு கொண்டு வந்து இருப்பினும் இன்னும் அதன் முழு தகுதியை நாம் இன்னும் பரப்ப வில்லை .

பிசா காரன் நீங்கள் சாப்பிடும் பிசா என்ன அளவு இருக்க வேண்டும் என கேட்கிறான் . அதன் அடி எப்படி இருக்க வேண்டும் , நுனி எப்படி இருக்க வேண்டும் , என்ன நிறம் வேண்டும் , என்ன மணம் வேண்டும் எல்லாம் கேட்கிறான் .என்னை போன்ற ஸ்பூன் பிடிக்கத் தெரியாத செங்கல்பட்டு காரனுக்கு அட்டை பெட்டியில் அழகாக மடித்துக் கொடுத்து தலை வணங்கி நன்றி சொல்கிறான் .

அங்கேயே தின்று தொலைத்தால் " ஹொவ் வாஸ் யுவர் மீல் சார் . ஹோப் இட் வாஸ் குட் " என்று எனக்கு கை கொடுத்து ..நான் சொல்லும் ' யா' என்ற தெரிந்த ஒரே வார்த்தையை புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறான்.

இன்னும் உணவிலும் , பரிமாறலிலும் புதுமைகள் செய்து கொண்டே போகிறான் . பிசா கொடியை உலகெங்கும் நிலை நாட்டிக் கொள்கிறான் .

இது மட்டும் அல்ல . இன்னும் நிறைய விஷயங்களில் பிரசென்டேஷன் பற்றி நாம் கவலை படுவதில்லை .அதனால் நம் அடையாளங்களை , அழகுகளை , ஆற்றல்களை நாம் பின்னுக்கு தள்ளி கொண்டே இருக்கிறோம் .
உங்கள் படைப்பும் அது போலவே .அது எவ்வளவு சிறப்பானது எனினும் நீங்கள் பார்வைக்கு வைத்த பின் அது பிரசெண்டஷன் சரியாக இருந்தால் நிச்சயம் அது பலரை அடையும் .
நான் இதை எழுத்து தளத்தை வைத்து சொல்ல வில்லை . மொத்த தமிழ் ஊடகங்களை மனதில் வைத்து சொல்கிறேன் .

உங்கள் படைப்பின் தலைப்பும் , முதல் இரண்டு வரிகளும் மிக முக்கியமானவை . வேறு வழி இல்லை .என்னதான் சிறப்பாக எழுதி இருந்தாலும் வாசகனை உள்ளே இழுக்க அந்த இரண்டு விஷயங்களில் நாம் கவனம் செலுத்தித்தான் ஆக வேண்டும் .

அடுத்து நீங்கள் பயன் படுத்தும் வார்த்தைகள் , வாக்கியங்கள் .நீங்கள் இலக்கு வைக்கும் வாசகர்கள் யார்.?

அவர்கள் புரிதலுக்கு ஏற்றவாறு நிச்சயம் நம் எழுத்துக்கள் இருக்க வேண்டும் .உதரணத்துக்கு ஆனந்த விகடனில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் குமுதத்தில் எழுத முடியாது . இந்தியன் எக்ஸ்பரசும் , இந்துவும் நடையில் இரு வேறு துருவங்கள் . ரீடர்ஸ் டைஜஸ்ட் , இல்லஸ்ட்ரேடட் வீக்லி கூட அப்படித்தான் .

அடுத்து நீளம் , பத்தி அளவு இரண்டும் கவிதையை காக்க வேண்டும் .நம்மில் பல பேர் 30 வரிகளை ஒரு சின்ன இடைவெளி இல்லமால் தொடர்ந்து எழுதுகிறோம் .அப்படி பதியும் போது முதலில் நம்மால் அதை படிக்க முடிகிறதா என்பதை சோதித்துக் கொள்ளலாம் .இல்லை எனில் காட்டாயம் ஒரு சின்ன ஸ்பேஸ் தேவை . பத்தி பிரித்து விடுங்கள் .

அடுத்து நடை முறை வார்த்தைகளை முடிந்த அளவு பயன் படுத்துங்கள் . நடை முறை செய்திகளையும் .
பாரதி அப்படித்தான் எழுதினான் . நகுலன் அப்படித்தான் எழுதினர் . சுஜாதா முதல் இன்றுள்ள மனுஷ்ய புத்திரன் வரை அப்படியே .

கடைசியாக யாரும் இதுவரை சொல்லாததை , சொல்ல முடியாததை கற்பனை செய்து எழுதுங்கள் .நிஜம் இன்னும் சுவை .ஜெயகாந்தனை , புதுமை பித்தனை , எஸ் ராமகிருஷ்ணனை , பா ராகவனை படித்தவர்குக்கு தெரியும் . அவர்கள் ஒரு ஊற்று . நம் எண்ணங்கள் , கற்பனைகள் ஊற்றாக சுரக்க வேண்டும் .ஊற்று நீர் மிக ருசியானது . சுத்தமானது .நல்லது .

காதலை பற்றி இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகள் கழித்து ஒருவன் எழுதுவது கூட சுவையாக இருக்கும் அவன் அப்போதும் அதில் புதிதாக ஒரு விஷயம் சொல்லி இருப்பின் .

சமீபத்தில் புலமி சொன்னது போல் "சமகாலத்திய படைப்புகள் தலைமுறைக் கடத்தலுக்கு வழிவிடும் கதவுகள்."

- மின்னும் இன்னும்

எழுதியவர் : ராம் வசந்த் (5-Apr-15, 11:03 am)
பார்வை : 164

சிறந்த கட்டுரைகள்

மேலே