யுகங்கள் தாண்டும் சிறகுகள் -14 =0= குமரேசன் கிருஷ்ணன் =0=

''என்றும் வானம்
நீலமாக இருக்குமென்றோ
வாழ்க்கைப் பாதை நிறைய
பூக்கள் பூத்திருக்கும் என்றோ
கடவுள் வாக்களிக்கவில்லை
மழையில்லாத வெயிலோ
கவலையில்லா மகிழ்ச்சியோ
வேதனையற்ற சமாதானமோ
உண்டாகும் என்றும்
கடவுள் வாக்களிக்கவில்லை ''

அக்கினிச் சிறகுகள் வாசிக்கையில் அப்துல் கலாம் அய்யா தந்திருந்த இந்த வார்த்தைகள் வாழ்வியலை என்றும் எனக்கு உணர்த்திக்கொண்டிருக்கும் . நல்ல புத்தகங்களே நல்ல நண்பனைபோன்று ஒவ்வொருவரையும் செதுக்கும் , அவ்வாறெனில் கவி படைக்கும் நாமும் படைப்பாளிகளாய் எதை தேடி , எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் , நம் மறைவிற்கு பின்னரும் நம் எழுத்துக்கள் நம்மை பயணிக்க வைக்குமா ? , முதலில் யுகம் என்றால் என்ன , எங்கிருந்து நாம் முன்னோர்கள் பயணிக்க தொடங்கினர் என்ற தேடல்கள் எழும் போது ,யுகத்தினை தேடி கொஞ்சம் பின்னோக்கி பயணிக்க வேண்டியதாகிறது , எத்தனை யுகங்கள் இருந்தன , கலியுகத்தில் இருக்கும் நாம் சற்று பின்னோக்கி பயணித்தால் ,
நம் முன்னோர்களில் கூற்றுப்படி யுகங்கள் நான்கு(4) என அறியப்பட்டுள்ளது

1,கிருதயுகம் : எலும்புகள் உள்ளவரை ஒருவருக்கு ஆயுள் இருக்கும் , தியான , யோக , தெய்வ சக்திகளை மிகுதியாக கொண்டிருந்த அவர்களுக்கு ''அஸ்தி கத பிராணர்'' எனப்பெயர் .

2. திரோதயுகம் : மாமிசம் அழுகிப்போகும் வரை உயிர் இருந்தது இவர்களுக்கு , '' மாமிச கத பிராணர் '' களான இவர்கள் யாக , யக்ஞங்களைச் செய்வதில் வல்லவர்கள் .

3. த்வாபரயுகம் : ரத்தம் வற்றும் வரை உயிரோடு இருந்தவர்கள் '' ருத்ர கத பிராணர் '' களான இவர்கள் பூஜை செய்வதில் வல்லவர்கள் .

4. கலியுகம் : ''அன்ன கத பிராணர் '' என்றழைக்கப்படும் இவர்களுக்கு சோறு சாப்பிடும் வரைதான் உயிர் இருக்கும் , தியானம் , யாகம் ,சிரத்தையுடன் பூசை செய்யும் யோக்கிதை இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது .

கலியுகத்தின் விளக்கம் குறித்து நண்பர் ராம் வசந்த் இவ்வாறு குறிப்பிட்டுளார் , தனது யுகம் தாண்டும் சிறகில் '' இப்போதுள்ள கலியுகம் " 4,32,000 வருடம் என்பதாக புராண கதைகள் சொல்கிறது . அது ஏறத்தாழ 5000 ஆண்டுகள் முடிந்திருக்கிறது . எனவே இன்னும் 4,27000 வருடங்கள் தாண்டும் சிறகுகளை தேட வேண்டும் . கடினமான வேலைதான் .! ''

இந்த கலியுக கதையை கணக்கிட்டுக்கொண்டே கொஞ்சம் யுகம் முன்னோக்கி பயணித்தால் நம்மை
வியக்க வைக்கும் மனிதர்களாய் சித்தர்கள் நடமாடுகிறார்கள் சக மனிதனில் இருந்து முக்தி பெற்றவராய் இவர்களால் எப்படி மாற முடிந்தது முக்காலமும் எப்படி இவர்களுக்கு கைகூடியது , அட்டமா சித்திகளை எவ்வாறு பெற்றனர் , எவ்வாறு நிகழ்ந்தது இது இந்த சூட்சுமம் ஏன் யுகங்களை தாண்டி பயணிக்கவில்லை , ஒருசிலருக்கு மட்டுமே எப்படி இன்றும் இது சாத்தியமாகிறது , இந்த தேடல் என்னுள் நீள்கிறது உங்களைபோலே சக மனிதனாய் , சங்கரன்கோவில் என்ற எங்கள் ஊரில் சாமாதி ஆனதாய் சொல்லப்படும் ஒரு சித்தர் பாடல் இதோ ,

'' ஓங்காரக் கம்பத்தின் உச்சிமேலே
உள்ளும் புறமையும் அறியவேண்டும்
ஆங்காரக் கோபத்தை அறுத்து விட்டே
ஆனந்த வெள்ளத்தைத் தேக்கிக் கொண்டே
தூங்காமல் தூங்கியே சுகம் அடைந்து
தொந்தோம் தொந்தோம் என்று ஆடுபாம்பே ''

--பாம்பாட்டிச் சித்தர் --

யாரிந்த சித்தர்கள் , எங்கிருந்து வந்தார்கள் , எவ்வாறு இந்த மனிதர்களால் ஆதி , அந்தத்தை அறிய முடிந்தது , நம் சக மனிதனே சித்து நிலை பெற்றானெனில் நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் , நம் எழுதுகோலின் முனைகள் நாளைய சமூகத்திற்கு எதை மிச்சம் வைத்து செல்லப் போகிறது .

நம் தளத்தில் சில கவிஞர்களின் கவிகளை வாசிக்கையில் சிலநேரம் மனம் அதனுள் லயித்து அதில் மூழ்கி எழும் நிலை தானே தோன்றிவிடுகிறது . அவ்வாறு உள்ளத்தை தாக்கும் கவிகள் நாளை யுகங்களை தாண்டி நிற்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை , அதில் புது வரவாய் வந்ததில் நிறையவே கவனம் ஈர்க்கிறார் திருப்பூரை சேர்ந்த இளைய கவிஞர் " சுஜய் ரகு '', அவரைப்பற்றி அவரின் கவிகளுடன் கொஞ்சம் பயணிப்போம் .

கோடுகள் என்றொரு கவியில் இவ்வாறு பேசுகிறார்

'' விழிகள் மூடி சிறிது
ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்
என்னை ...

பிறகு தொடங்கிய அந்தக்கோடு
எதிர்பார்த்திராதவாறு
மிக நேர்த்தியாக அமைந்தது

முதலில் உன்னை
உன் வசப்படுத்து பிறகு
எல்லாமே உன் வசப்படும் '' ( கவி எண்;235336)

இவ்வரிகள் தன்னுள் தன்னை தேடும் ஒரு சக மனிதனை அறிமுகப்படுத்தியது என்னுள் , எந்த கருப்பொருளையும் , வித்தியாசமான பார்வையில் பாடும் சிந்தனைக்கு சொந்தக்காரர் ,

இவரின் கண்ணீர்அஞ்சலி கவி (234875) சொல்லும் பொருள் உள்மனம் வரை ஊடுருவி அசைத்து பார்க்கிறது ஒவ்வொரு செல்லையும் , மூட நம்பிக்கைகளுக்கு ஒரு சவுக்கடி கொடுக்கிறது வரிக்கு வரி இதோ நெருப்புக் கவியின் வரிகள் ...

திருஷ்டிக்காக
உடைத்த பூசணி
காவுவாங்கியிருந்தது
ஈருயிர்களை

அன்றிலிருந்தே
தேங்காய்ச் சிதறல்களுக்கும்
எதிரியாகியிருந்தது
அந்தத் தெருநாய்

வெறிபிடித்ததைப் போலவே
விரட்டிக் குறைக்குமது
யாரையும் கடித்ததில்லையாம்

பூனை குறுக்கே வந்ததெனத்
திரும்பியவனையும்
எரிநட்சத்திரம்
பார்த்தாலாகாதென
கண்மூடியவனையும்

அருகில்வந்து குரைத்து
அலறவைத்தது
ஒரு ராத்திரியில்

அலகு குத்தி
ரதமிழுப்போரையும்
பாதயாத்திரைப்
பக்தர்களையும்
பயமுருத்துமது

பிச்சைக்காரர்களிடமும்
பைத்தியங்களிடமும்
சிநேகமாயிருப்பது
மிரண்டவர் கண்டுவியந்த புதிர்

சாலைகடக்கும்போதொருநாள்
அடிபட்டுச் செத்துப்போக

கண்ணீர்அஞ்சலி பதாகை
கேட்டுப்போனவளை
கடை ஊழியர்கள்
விரட்டிவிட்டனர்

நரபலியை
நேரில் பார்த்துப்
பைத்தியமானவளாய்க் கூட
இருக்கலாமவள் !

இதேபோல் இவரின் இன்னொரு கவியான பேயும் பிசாசுகளும் என்ற கவியில் இளம் விதவையின் வலிகளை தருகிறார் வரிகளாய் இவ்வாறு ( கவி எண் 238769)

பேய் பிடித்ததென
செருப்புகள் வெளக்குமார் சகிதம்
அடித்துத் துவைத்தனர்
இளம் விதவையை

காமப் பிசாசுகள்
தெருக்கோடியில்
புள்ளியாய் மறைந்தபோது
பூசாரியை நோக்கி
கைகூப்பியிருந்தாலவள்

இருவர் விழிகளிலும்
வாழ்வியலின் மகத்துவ மேவிய
அன்பு பரிமாற்றம்
அலைகளெனத் ததும்பியிருந்தது

தும்பை தேடல் என்றொரு கவியில் இதயத்தை மயிலிறகால் வருடுகிறார் மெல்ல , (கவி எண் 234462)

ஒரு சொட்டிலும்
மிகக் குறைவான தேனை
பகிர்ந்துகொள்வோம் நானும்
பாட்டாம் பூச்சியும்!

மொட்டை வெயில்
துரத்துகிற தருணத்தில்
ஒற்றை மரத்தில்
ஒழுகும் நிழலில்
தஞ்சம் புகுவேன்

எந்த நம்பிக்கையில்
என் மடியில் கிடத்திப்போகுமோ
குட்டிகளைத் தாயாடுகள் !

நீ மட்டுமே நகல் என்றொரு கவியில் (கவி எண் 238525 ) ஒரு வித்தியாசமான பார்வையை தருகிறது ஒவ்வொரு வரிகளும் ,

ஜன்னல் காற்றில்
அவிழ்ந்து வந்த
கவிதைக்கும் ஒருநாள்
உன்னைப் பரப்பி
விளக்கு வெளிச்சங்கள்
மறைத்த இரவு
நிழலாடுகிறது இன்னும்
நினைவுள்

என் கொலுசுச் சத்தங்கள்
அடங்குகிற நிசப்தத்தில்
அரங்கேறும் கனவுகளுக்குள்
பரவும் நிழல்
என்றும் உனதானது

தன்னம்பிக்கை பற்றிய இவரின் கவி ( 239730) , ஒரு விதையின் உயிர்ப்பை இவ்வாறு உரைக்கிறது புதிய யுக்தியில் ,

முற்றிலுமாக விழுங்கப்பட்டபோது
சற்றே வியர்த்துப் போனது விதைக்கு

கழிசடையாய்த் தழுவிய மண்ணின் நெடி வியாபிக்க
வாய் பொத்திக்கொண்டது
வாந்திக்கு முன்னதான பாவனையில்

சற்றொப்பக் கடந்துபோகும் ஒரு
புன்னையின் வேரில் சீழ் வடிந்திருக்க
அதன் புண்களைக் கரையான்கள் அரிக்கக் கண்டு
வாழ்வா? சாவா? மயங்கிற்று விதை

குறுகிக்கிடந்த விதையை
குரூரமாய்ப் பார்த்துப் பல்லிளித்தது
பரவிக்கிடந்தப் பாலித்தீன்

காலப்போக்கில் வெக்கையின் பசிக்குத்
தன் சதைகளைக் கொடுத்த விதை
குருட்டுப் பார்வையில் மரண விளிம்பில்
மழை கேட்டு யாசித்தது

அகோரப் பசியும் அதீத நம்பிக்கையும்
கையகப்படுத்திய வாழ்நாளின் நட்சத்திரப் பொழுதொன்றில் தான்
பரிச்சயப்பட்டது அந்த பலத்த மழை

விதையின் கைகள் உயிர்த்து
இறுகப்பற்றிக் கொண்டன ஜனனத்தின் வேர்களை

பின்னிரவில் அணையாத பீடியொன்று
தன் அருகாமையில் வந்து விழுந்தும் சற்றும்
அதிர்ந்திராத விதை துளிரத் தொடங்கிற்று !

ஒரு துளி நம்பிக்கை கவியின் வாயிலாக (238082) இவ்வாறு உரைக்கிறார் தன்னைப்பற்றி

வேட்டையாடும் விலங்குகளின்
கண்களுள் ஊடுருவி
அக்கிரமங்களுக்கு எதிரான
கர்ஜனையை வாங்கிக்கொள்ளத்
துணிந்திருப்பதும் எனதான
அசாத்திய சாமர்த்தியம்

அத்துமீறல்கள் அவலங்கள்
நடந்தேகும் நிலையில்
உறை களைந்த வாளாய்
பளபளக்கிறேன் நான்

இவரின் இன்னொரு கவி இவ்வாறு பாடுகிறது வாழ்வியலை

வந்தது வந்தாய்
வாழ்க்கையை மிச்சம்
வைத்துப் போ

கனவானது
வேயப்படுவதல்ல
விதைக்கப்படுவது


இந்த இளம் கவிஞரின் கவிகளை வாசிக்கையில் மனம் உள்நோக்கி தேடலை தொடங்கி என்னுள் பலநேரம் தொலைந்து போகிறேன் நான் , இவரின் கவி வரிகள் பலரின் கண்களால் இன்னும் கவனிக்கப்படாமலே கிடக்கிறது , ஆனாலும் இருளைக் கிழித்துக்கொண்டு வெளிப்படும் சூரியக் கதிர்களைப் போலே ஓர்நாள் இவரின் எழுத்துக்கள் இவ்வுலகத்தைக் கிழித்துக்கொண்டு உச்சத்தில் நிற்கும் அன்று வானம் மட்டுமல்ல, உலகத்தின் உள்ளங்களும் பூச்சொரியும் இவர் எழுத்துக்களின் மேல் ,சக கவிங்கனாய் , ரகுவின் ரசிகனாய் இந்த வாய்ப்பின் மூலம் அவரைப்பற்றி பேசுவதற்கு வித்திட்ட தோழர் கவித்த சபாபதியை கரம் குவித்து வணங்குகிறேன் .

வாழ்வை அதன் போக்கிலே ரசிக்க கற்றுக்கொள்வதே வாழ்வின் சூட்சுமம் என்பதை உணர்த்தும்
அய்யா அப்துல் கலாமின் இக்கவிகள் ,
என்றும் என்னை தேடல் கொள்ள தூண்டிக் கொண்டேயிருக்கும் .

''உனது எல்லா நாள்களிலும்
தயாராக இரு
எவரையும் சமவுணர்வோடு சந்தி
நீ பட்டறைக் கல்லானால்
அடி தாங்கு
நீ சுத்தியலானால்
அடி !''

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளை
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே !

அய்யாவின் இவ்வரிகளே என்னை மரணம் மறந்த மனிதா என்ற எனது கவியில் இவ்வாறு என்னை எழுத தூண்டியது (கவி எண் 218063 )

உடலை களைந்து
எங்கு செல்வாய்
உயிரை கொண்டு
உதவி செய்வாய் ...

உன்னுள் உண்டு
சிவனுமென்றால்
சக மனிதனுள்ளும்
கடவுள் உண்டு

கருத்தில் கொண்டு
கடமை செய்வாய்
கனவில்கூட
நன்மை செய்வாய் ..

மண்ணில் போகும்
மனிதஉடலே
"மரணம் ஒன்றே
மரணம் இன்றி "
வாழும் இங்கு
நீ ஏன் வாடிநின்று ?

மாற்றம் ஒன்றே
உலகின் நியதி
மரித்துப்போதல்
இறைவன் நீதி ..

புரிதல் கொண்டு
புதுமை கண்டு
புவியின்மீது
பதித்துச்செல்-உன்
"பாதம் ரெண்டு ''


எழுத்துக்கள் எப்போதும் சாகாது பயணிக்கும் , சரித்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் ,யுகங்களை தாண்டும் அற்புதம் கொண்டவை எனவே நம்மிடம் கிடைத்துள்ள எழுதுகோலின் முனைகளை கூர்தீட்டி நம் தாய் தமிழின் வீரிய வார்த்தைகளால் வீசிடுவோம் அவலத்தின் அத்தனை திசைகளின் மீதும் , வாழ்த்துக்கள் தோழர்களே , சிறகுகள் பயணிக்கட்டும் பல திசை நோக்கி வாய்ப்பு தந்த தோழர் கவித்த சபாபதிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யுகங்கள் தாண்டும் சிறகுகள் தொடர்ந்து பயணிக்கட்டும் , வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன்

அநேக அன்புகளுடன்
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (5-Apr-15, 2:57 pm)
பார்வை : 549

மேலே