காலச்சுவடுகள் 17- ஈழக்கவிஞர் வஐச ஜெயபாலன்

காலமகள் மணலெடுத்து
கோலமிட்ட கடற்புறத்தில்
ஏழை மகள் ஒருத்தி,
முன்னே கடல் விரியும்
முது கடலின் பின்னாடி
விண்ணோ தொடரும்
விண்ணுக்கும் அப்பாலே
விழி தொடர நிற்கின்றாள்

தாழை மரவேலி,
தள்ளி ஒரு குடிசை;
சிறு குடிசைக்குள்ளே
தூங்கும் ஒருகுழந்தை

ஆழக் கடலில்
ஆடுகின்ற தோணியிலே
தாழம்பூ வாசம்
தரைக்காற்று சுமந்துவரும்

காற்றுப் பெருங்காற்று
காற்றோடு கும்மிருட்டு
கும்மிருட்டே குலைநடுங்க
கோஷமிட்ட கடற்பெருக்கு.

கல்லு வைத்த கோவிலெல்லாம்
கைகூப்பி வரம் இரந்த
அந்த இரவு
அதற்குள் மறக்காது

திரைக்கடலை வென்று வந்தும்
திரவியங்கள் கொண்டு வந்தும்
இந்தச் சிறு குடிசை,
இரண்டு பிடி சோறு,
தோணி உடையான்
தரும் பிச்சை என்கின்ற
கோணல் நினைப்பு,
பெருமூச்சு.

தானாய் விடிவெள்ளி
தோன்றுகின்ற சங்கதிகள்
வானத்தில் மட்டும்தான்
வாழ்வில் இருள் தொடரும்

எழுதியவர் : ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் (31-May-16, 11:01 pm)
பார்வை : 105

மேலே