பெண்ணெனும் பேராண்மை

அன்பின் பாத்திரத்தில் நிறைந்த நீரிவள்...
மென்மையின் இலக்கணம் சமைத்த மலரிவள்...
அன்னச் சிறகை உள்ளங்கையாய்ப் படைத்தவள்...
தென்றலின் தீண்டலை விரல்களில் கொண்டவள்......


தாயின் மடியில் தலைச் சாய்ந்தவள்... தாளாத சோகத்தை அறியாது இருந்தவள்...
பருவம் அடைந்து பட்டாம்பூச்சியாய்ப் பறந்தவள்...
பட்டுச்சேலையில் பதியென்று ஒருவனை ஏற்றவள்......


பள்ளி சென்று பாடம் பயின்றவள்... பள்ளியறையில் புதுவிதப் பாடங்களைக் கற்றவள்...
பத்துத் திங்கள் கருவினைச் சுமந்தவள்...
பதியின் கடமைகளைத் தனதென்றும் கொண்டவள்......


குடும்பத்தை வில்லாய் வளைக்கா திருந்தவள்...
குடும்பத்திற்காக தன்னை வில்லாய் வளைத்தவள்...
குடும்பப் பெருமையைப் பேணிக் காப்பவள்...
குலத் தெய்வமாய் அவளே நின்றவள்......


நோயால் கணவன் சுருண்டுப் படுத்தாலும்
வெயிலில் உழைத்தும் வேதனைக் காட்டாதவள்...
துன்பத்தின் மழையில் நனைந்தாலும் மூழ்காது
இன்பத்தின் பாதையை நீந்திக் கடப்பவள்......


உலையின் நீராய் உள்ளம் கொதிப்பவள்...
அலையாய் தவழ்ந்திடும் புன்னகைச் செய்பவள்...
உள்ளத்தின் ஆசைகளைப் பூட்டி வைத்து
உற்றவர்களின் நலனுக்காகவே உயிரும் வாழ்பவள்......

எழுதியவர் : இதயம் விஜய் (9-Dec-16, 9:42 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 995

மேலே