இழந்தக் காலங்கள்

பட்டாம் பூச்சியின் சிறகைப் பிடிப்பதும்
தட்டாம் பூச்சிகளை விரட்டி அலைவதும்
சிட்டுக் குருவியின் அழகை இரசிப்பதும்
சிந்தையில் அமர்ந்து விந்தைகள் செய்கிறதே......
ஆலமர விழுதில் ஊஞ்சல் ஆடியதும்
ஆலய மணியை அடித்து விளையாடியதும்
ஆளில்லா தோப்பில் வேலிகள் தாண்டுவதும்
ஆனந்த வெள்ளத்தால் மனதைக் கரைக்கிறதே......
மலரைப் பறித்து தேனைக் குடித்ததும்
மழையின் நீரில் கப்பல்கள் விட்டதும்
ஒருகுடைக்குள் ஆறு கால்கள் நடந்ததும்
கருவிழியில் நிழல்களாய் கதைகள் சொல்கிறதே......
தூண்டில் போட்டு மீன்களை இழுத்ததும்
தூங்காது விழித்து நிலவினைப் பார்த்ததும்
புளியங் கொட்டையில் தாயத்தை வேண்டுவதும்
புத்திக்குள் நுழைந்து யுத்தம் நடத்துதே......
சிவகாமியின் சபதத்தை வானொலியில் கேட்டதும்
சின்ன ஆளொன்று உள்ளிருப்பதாக சொல்லியதும்
இலங்கை வானொலியில் இதயத்தை இழந்ததும்
இளமயில் இறகாய் நெஞ்சைத் தீண்டுதே......