பேனா முனையில் பெண்மையின் துளிகள்-துளி-07

பேனா முனையில் பெண்மையின் துளிகள்....

துளி...07....

வெள்ளைப் புறா ஒன்று அறியாது
வீழ்ந்தது வலையில்...
விடுபட வழியிருந்தும் சமூக கோட்பாடுகள்
தடுக்குது அவளை...
கண்கள் இருந்தும் கறுப்புத்துணி மறைக்குது
அவள் வாழ்வை...

குனிந்த தலை நிமிராது வளர்ந்தவள்
மணமேடை வரையில் தொடர்ந்தாள்...
கால்பூட்டு ஏறியது அவள் கழுத்தில்
முற்றுப்புள்ளியின்றி கண்ணீரும்
தொடர்ந்தது...
கரம் பிடித்தவன் அன்பெனும் விலங்கினை மறந்து..
அடிமைச்சங்கிலியால் சிறைப்பிடித்தான் அவளை...

ஆண்மை என்ற கர்வம் ஆட்டுவிக்குது
அவளை...
மென்மையான பூ இவளை உதிரம் சிந்த வைக்குது தினமும்...
இனிய பந்தம் என்ற பெயரில் இரவுகளில் விலை போகிறது இவள் பெண்மை...
தினம் விடிந்தும் முடியாது நீள்கிறது
நரகத்தின் வாசல்...

வழிந்திடும் விழிநீர் மட்டுமே கன்னத்தோடு
உறைந்து உறங்குது அவளுக்கு துணையாய்...
வருடங்கள் இருபது கடந்தும் இடைவெளியின்றி தொடர்கிறது...
நான்கு சுவர் நடுவில் ஆணவத்தின் பிம்பம்
உயிரிழந்த அவள் பிணத்தோடு நடத்துகிறது
யுத்தம்...

பிறந்த நொடியிலிருந்து துயரங்கள் மட்டுமே
அவளுக்கு தாலாட்டாய்...
முட் பாதைகள் மட்டுமே அவள் உறங்கிடும் பஞ்சணையாய்...
இனியாவது இன்பமழை தூறிடுமா அவள் வாழ்வில்...
கலங்கிய விழிகள் மலர்ந்திடுமா..?
கசங்கிய பெண்மை தான் இனி மீள் வருமா..?

துரத்திடும் கேள்விகள் நடுவில்
இருளை உடைத்திடும் விடை கரத்தில் இருந்தும்...
விதிமுறைகளுக்கு பயந்து விடைபெறும் நேரத்திற்காய் காத்திருக்கிறாள்...
இல்லம் எனும் சிறைக்குள் அவளும்...

இதை நான் கவிதையாக எழுதவில்லை.என் மனதின் உணர்வுகளை,கேள்விகளை
உண்மை நிகழ்வுகளை அப்படியே கூறியுள்ளேன்.

துளிகள் தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (9-Dec-16, 7:15 pm)
பார்வை : 881

மேலே