எழுத்து பொங்கல் போட்டி 2016 -----எண்ணம் 04 ----தலைப்பு...
எழுத்து பொங்கல் போட்டி 2016 -----எண்ணம் 04 ----தலைப்பு --- பொங்கல் கொண்டாட்டத்துக்கு இயற்கை விவசாயத்தின் பங்கு.
பொங்கல் மக்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை என்றாலும், முக்கியமாக இது விவசாயிகளின் வெற்றிக்காக கொண்டாடும் பண்டிகை; ஆம்; விவசாயிகள் விளைச்சல் நன்றாக அமைந்ததற்காக ஆதவன்,இந்திரன்,கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுவது. விளைச்சல் நிறைந்து இருந்தால்தானே, அவர்களுக்கு வருமானம் நன்கு கிடைக்கும்?
நெடுங்காலமாக பயன்படுத்திய இயற்கை உரங்களை நடுவில் கைவிட்டு ரசாயன உரங்களையும் பூச்சிகொல்லி மருந்துகளையும் பயன்படுத்தியதால், செலவுகள் அதிகம் ஆகி, பொருட்கள் தர உயர்வின்றியே விலைகள் கூடி அவர்களின் வருவாய் மிகவும் குறைந்தது.
மக்கள் ரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தி விளையும் பொருட்களால் ஆரோக்கியத்துக்கு கெடுதல்கள் ஏற்படுகின்றன என உணர்ந்ததால் இயற்கை முறை விவசாயத்தை மீண்டும் வரவேற்க ஆரம்பித்தனர். விவசாயிகளிடம் மீண்டும் இயற்கை விவசாய முறையும் அதற்கான பயிற்சிகளும் அதிகரித்ததால், விளைபொருட்களின் தரம் உயர்ந்தது; அவற்றிற்கு மக்களின் வரவேற்பு அதிகமானது. அதனால் விவசாயிகள் விளைபொருட்களுக்கு நல்ல விலையையும் பெரும் லாபத்தையும் பெற்றனர். பழங்கள், காய்கறிகள்,காபி,தேயிலை, உணவு தானியங்கள் ஆக எல்லாவற்றையுமே இயற்கை விவசாய முறையில் விளைவிக்க முடிந்தது.அவை எல்லாம் தரமாகவும் விளைந்தன.விவசாயிகளுக்கு வருமானம் கூடி வாழ்க்கை தரமும் உயர்ந்தது. அதனால் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இன்னும் எல்லா விவசாயிகளின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து விட்டதாக சொல்லி விட முடியாது. இன்னும் போதிய அளவு இயற்கை விவசாயம் பரவவில்லை. நெடுக பரவ வேண்டும் .அப்போதுதான் தரமான உணவுப் பொருட்களை மக்களும் உண்டு, விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு நல்ல விலையும் தர, வருமானம் கூடி, அவர்களின் வாழ்க்கை தரமும் உயரும் . விவசாயிகள் பொங்கலை முழு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
விவசாயம்தான் பாரதத்தின் முதுகெலும்பு என்பதால் விவசாயிகளின் மகிழ்ச்சியில்தான் பாரத மக்களின் வாழ்வு அடங்கி உள்ளது. .