தைமகளே வருக! (பொங்கல் கவிதைப் போட்டி)
வானம் பொய்த்தது! காவிரி கை விரித்தது!
வாரிகொடுத்த மண்மகள் வறண்டுநிற்கும் கொடுமை!
வாழவைத்த நிலமகள் வெடித்துக்கிடக்கும் நிலைமை!
வாடிய பயிர்களினால் உழவர்களிடை வறுமை!
கழனியில் கால்வைத்து உழைத்தவர்க்குப் பலனில்லை!
வழியில்வந்த இடைத்தரகரோ அடிக்கிறார் கொள்ளை!
வாழ்வாதாரமான நீர்நிலைகளில் சேருகின்ற மாசுக்கள்!
வாழ்விடங்களாக மாறிவரும் வளமையான விளைநிலங்கள்!
உழவுத்தொழில் செய்பவர் மனம்சலிக்கும் நிகழ்வுகள்!
உழவர்மனங்களிலே ஆறாத துன்பத்தின் பதிவுகள்!
மாறிவரும் உலகிற்கேற்ப உழவுத்தொழில் சிறக்கவே
மாட்சிமிகு திட்டங்களுடன் தைமகளே வருகவே!
போதைப் பொருளானாரோ பேதைகாள் பெண்கள்!
பாலியல் வன்முறைக்கு காரணம் மதுவும்,தீயபடமும்!
மதுகுடித்து மதிகெட்டு மிருகமாகும் ஆடவர்
மயக்கும் தீயக்காட்சிகளால் மேலும் கீழோரானார்!
அறநெறியை வளர்க்கவும், பண்பாடு காக்கவும்,
அச்சமின்றி பெண்ணினம் அகிலத்தினில் வாழவும்,
பிறழ்ந்துவரும் கலாச்சாரம் தூக்கி நிலைநிறுத்தவும்,
பிழைநீக்கி மனிதர்திருத்த தைமகளே வருகவே!
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஊறுஇந்தஊழலே!
நாட்டுநலத்திட்டங்கள் கிடப்பில் கிடக்கவைப்பதும்
ஏழைமேலும் ஏழையாகச் செய்வதுமிந்த ஊழலே!
ஊழல்ஒழித்து நாடுசெழிக்க தைமகளே வருகவே!!