மனதிற்கு பிடித்தவனின் மரணம் !

என்னை மட்டுமே உயிராய் நினைத்தவனே !
உயிராகிய நான் உயிரோடு இருக்கும்போது
என்னை விட்டு பிரிந்து தனியே எங்கே சென்றாய் ?.
எப்படி உனக்கு மனம் வந்தது ?
என்னை விட்டு பிரிந்து செல்ல ?.....

நீ மட்டும் போதும் இவ்வுலகில் எனக்கென
எதுவும் வேண்டாம் என்று சொன்னவனே !-ஏன்
என்னை மட்டும் பிரிந்து சென்றாய் ?..
எப்படி தாங்கிகொள்ளும் என் மனம் உன் பிரிவை !

நீ இந்த உலகைவிட்டு பிரியும் அந்த நாளில் என்னை ஒரு நிமிடமேனும் நினைத்தாயா?
அப்படி நினைத்திருந்தால்
அந்த காலனே உன்னை விட்டு
விலகி சென்றிருப்பானே !

உன்னை பிரியும் அந்த மனோதிடம்
இல்லையென்றா என்னிடம்
சொல்லாமல் சென்றாய் ?

எப்படி மறப்பேன் நம் வாழ்வின்
வசந்தகாலங்களை ! - நீ என்னை
விட்டு பிரியும் நாள் உனக்கு முன்பே
தெரிந்து விட்டதா ? அதனால்தான்
என்னிடம் பேசாமல் இருந்தாயா ?

நான் உன்னை விட்டு விலகியிருந்தாலும்
எங்கேயோ நீ நலமுடன் இருக்கிறாய் என
நம்பினேனே !அந்த நம்பிக்கை பொய்யாய் போனதே ! என் மனதிற்கு இப்படியொரு
இடிவிழும் என நினைக்கவில்லையே !

அந்த அம்மனுக்கு கூடவா
மனம் கல்லாய் போனது ! - அவளாவது
உன்னை என்னிடம் பத்திரமாய் சேர்த்திருக்கலாமே !

இவ்வளவு நாள் கடந்து இவ்வுலகில்
நீ இல்லையென்ற செய்தியை கேட்கவா
நான் ஆசை பட்டேன் ? ஐயோ ! - என்
செவிகள் கூட செவிடாய் போயிருக்கலாமே !

மதி என்ற பெயரில் மனைவி அமைய
வேண்டுமென தேடினாயே ? - அவள்
அழகை பற்றியோ அறிவை பற்றியோ
படிப்பை பற்றியோ பண்பை பற்றியோ
கவலை படாமல் உன் பெயர் மட்டும்
இருந்தால் போதும் என்றாயே !
அப்படிதானே அமைத்து கொண்டாய் !
பிறகு ஏன் பிரிந்து சென்றாய் ?

என் பெயரை உன் பிள்ளைக்கு வைத்து
அன்போடு அரவணைத்து
முத்தமிட்டேன் என்றாயே ! - உன்
அன்பு குழந்தையாய் கேட்கிறேன் - மீண்டும்
அணைத்து செல்லமாய் முத்தமிட்டு செல்லடா!

ஒரு நாள் உன்னோடு வாழ்ந்தால் போதும்
இந்த உலகே வேண்டாம் என்று சொன்னாயே !
என் ஆயுள் முழுவதையும் உனக்காய்
அர்ப்பணிக்கிறேன் ! எழுந்து வாடா
என்னுடன் வாழ ! - உன் செல்ல
கருவாச்சி தான் முழு மனதோடு அழைக்கிறேன் !
எழுந்து வா !

நீ சொன்ன அதே வார்த்தைதான் - எனக்கு
இந்த உலகில் எதுவும் வேண்டாம்
நீ மட்டும் போதும் எழுந்து வா !

என்னைமட்டும் ஏன் ? தனியாக
விட்டு சென்றாய் ? உன் நினைவுகளுடன்
ஒவ்வொரு நொடியும் மரணத்தை
அனுபவிக்கவா ?

நான் என்ன பாவம் செய்தேன் ? - நீ
எனக்கு இப்படியொரு தண்டனையை கொடுக்க !
உன்னை வேண்டாம் என்று சொன்னதினாலா?

என்னை கட்டியணைத்து ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்து செல் அதை நினைத்தே
வாழ்ந்துவிடுவேன் என் ஆயுள்முழுதும்
என்று சொன்னாயே ! - என் ஆயுள் முழுதும்
உன்னை முத்தமிட காத்திருக்கிறேன்
எழுந்துவா என்னுடன் !

நான் பேருந்தில் இருந்து இறங்கிவரும்
அந்த நிமிடம் என் தேவதையின் பாதங்கள்
இந்த பூமியில் பட்டதென துள்ளி குதிப்பாயே !

ஐஸ்கிரீம் எனக்கு பிடிக்குமென
அதிகமாய் வாங்கி கொடுத்து நான்
சாப்பிடும் அழகை ரசிப்பாயே !

என் ஒவ்வொரு விரல்களுக்கும் சொடுக்கெடுத்து
என் ஒவ்வொரு அசைவிலும்
என் ஆழ்மனதை படிப்பாயே !

நாள் முழுதும் உன் அழகு முகத்தை
பார்த்து கொண்டே இருக்கவேண்டும்
என்பாயே ! நான் என் குடும்பத்துடன்
சந்தோசமாய் வாழ வேண்டுமென
எவ்வளவோ நேர்த்திகடன் செய்தாயே!

நல்ல காதலனாய் உன் மனதில்
இடம் பிடிக்காவிட்டாலும் - உன் மனதிற்கு
பிடித்த நல்ல நண்பனாய் இருப்பேன் என
வாழ்ந்தவனே ! எங்கே சென்றாய் எனைபிரிந்து ?

உன் காதலையும் நான் ஏற்க்கவில்லை ! - உன்
நட்பையும் நான் புரிந்து கொள்ளவில்லை !
எனக்காய் நீ எவ்வளவோ செய்தாய் !
உனக்கென நான் எதுவுமே செய்யவில்லையே !

கடைசிவரை உன்னை புரிந்துகொள்ளாமலே
இருந்துவிட்டேனே ! என்ன செய்வேன் நான் ?
இறுதியில் என் கண்ணீர்கூட உன்மேல்
விழவில்லையே !
இதைத்தானே நீ எதிர்பார்த்தாய் !- உனக்கு மட்டும்
என் பிரிவை தாங்கிகொள்ளும்
தைரியம் இல்லையென்றாய் ! - நான் மட்டும்
எப்படி எதிர்கொள்வேன் உன் பிரிவை !

நீ சொன்னதுபோலவே நடந்துவிட்டதே !
உன் பிரிவை மட்டும் நான் எதிர்கொள்ள !
என் கண்ணீர்துளிகள் கூட உன்
இறுதி ஊர்வலத்தில் இல்லாமல் போய்விட்டதே !

பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வார்களே
அப்படித்தான் என் புத்தியும் ஆகிவிட்டது !
நீ இருக்கும்போது உன் அன்பு புரியவில்லை !
நீ இல்லை என்றானபோது மனம் துடியாய் துடிக்கிறது ! ஐயோ ! நான் என்ன செய்வேன் !

எனக்கென கஷ்டம் வரும்போதெல்லாம்
எனக்கு ஆறுதல் கூறி என் மனதைதேற்றி
என் குடும்பத்தோடு சந்தோசமாய் வாழ
கற்றுதந்தவனே !

உன்னை இழந்து நிற்க்கும் எனக்கு
ஆறுதல் சொல்ல யார் வருவார் !
அப்படி யார்தான் ஆறுதல் சொன்னாலும்
நீ திரும்ப வருவாயா ? மாட்டாயே !

ஏனடா என்னை இந்த நிலைமைக்கு
ஆளாகி விட்டாய் ?

எழுதியவர் : Valarmathiraj (8-Jan-13, 4:41 pm)
பார்வை : 364

மேலே