தை மகளே வருக (பொங்கல் கவிதை போட்டி)
யாருக்குமே இதில் உடன்பாடில்லை
பாருக்குள்ளே நல்ல நாடாம்
ஊருக்குள்ளே வந்து பாருங்கள்
உண்மையா பொய்யா சொல்லுங்கள்
பதினோரு லட்சம் ஏக்கர் பரப்பில்
பரவியே கிடக்குது பயங்கர வறட்சி
விதியது யாரை இங்கு விட்டது
சதிசெய்வது மழை மட்டும்தானா?
நீதி என்பது இருக்குது நூலில்
நிறை வாழ்வோ ஏர்ப்படைக் காலில்
காலே படாத களங்கள் இன்று
உவர் நீர் களமாய் உப்பு கட்டுது
படி அரசியும் பால்சர்க்கரையும்.
விடியச் செய்யுமா எங்கள் வாழ்வை
மடியில் படுத்து அழும் குழவிக்கு
குடிக்க நீரும் கொடுக்க இல்லை.
இந்த நேரத்தில் வந்து நிற்கிறாய்
நிந்தனை செய்திட மனம் இல்லை;
சொந்த ஊர் விட்டு திரும்பிச் செல்ல
வைத்த தை மகளே போய் வருக.