வாழ்க்கை ஒரு மிதிவண்டி ( K .G .மாஸ்டர் கட்டுரை )

நமது வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கின்றது. கணப்பொழுதில் ஆரம்பித்த நமது வாழ்க்கை நிமிடங்களாகி, மணித் தியாலங்களாகி, நாட்களாகி, மாதங்களாகி, வருடங்களாகி, தசாப்தங்களாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வளவு தூரம் நாம் எமது வாழ்க்கையை எவ்வாறு நகர்த்திக் கொண்டிருக் கின்றோம், அந்த நகர்வின் அடிப்படையாக அமைவது எது என்பதை இனங்காணுவதே இக்கடுரையின் நோக்கமாகும்.

முதலில், ஒரு மிதி வண்டியின் தன்மையைப் பார்ப்போம். இரண்டு சக்கரங்களைக் கொண்டது தான் அது. இந்தச் சக்கரங்கள் ஒன்றில் ஒன்று சார்ந்து உள்ளன. குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் இரும்புக் கம்பிகள் சக்கரங்களின் சார்புத் தன்மையை உறுதிப்படுத்துகின்றன. நமது வாழ்க்கையும் அவ்வாறே. ஏனெனில் நமது வாழ்க்கையும் இரண்டு சக்கரங்களைக் கொண்ட ஒரு மிதி வண்டிதான். ஒரு சக்கரம் சந்தேகம். இது முன் சக்கரம். மறு சக்கரம் நம்பிக்கை. இது பின் சக்கரம். குறுக்கும் நெடுக்குமாக அந்தச் சக்கரங்களைப் பிணைத்து நிற்கும் இரும்புக் கம்பிகள் தான் நமது பற்றுக்களும், பந்த பாசங்களும், உறவுகளும், நட்புக்களும்.

ஒருமிதி வண்டியின் இயக்கத்திற்கு அடிப்படைத் தேவை ஒரு பயன்பாட்டாளர். இவரை நாம் ஓட்டுனர் என்போம். மிதி வண்டி அதன் தன்மையில் எந்தப் பயனையும் தருவதில்லை. அதைப் பயன்படுத்துபவருக்குத்தான் அதன் பயனைக் கொடுக்கின்றது. வாழ்க்கையும் அதன் தன்மையில் எந்தப் பயனும் அற்றது. அதைப் பயன் படுத்துபவருக்குத்தான் அதுவும் தன் பயனைக் கொடுக்கின்றது. எனவே வாழ்க்கைக்குத் தேவை ஒரு ஓட்டுனர். அவரை வாழ்பவர் என்போம்.

மிதிவண்டியை ஓட்டுவதற்குத் தேவை சமநிலை. பிறர் உதவி இல்லாமல் நாமாகவே முயற்சி செய்து இந்தச் சமநிலையைப் பெறலாம். ஆனால் எதிர்பாராத எதிர்மறை விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம். காலமும் மிக நீண்ட அளவு தேவைப்படும். சொந்த முயற்சியால் சமநிலையைப் பெறும்போது எமது உடம்பு தள்ளாடத் தொடங்கிவிட்டால் முயற்சி பயனற்றதாகிவிடும். கைகள் நடுங்கும் போது மிதிவண்டியால் என்ன பயன்? எனவே, ஏற்கனவே அனுபவமுள்ள ஒருவரின் உதவியப் பெறுவது மிகவும் பாதுகாப்பானதும் புத்திசாலித் தனமானதுமாகும். சமநிலையைக் கற்ற பின்னர் நாமாகவே மிதிவண்டியை ஓட்டமுடியும். வாழ்க்கையும் அவ்வாறே. அதற்கும் சமநிலை தேவை. சமநிலையில் தான் வாழ்க்கையை சுமுகமாக நகர்த்தத் முடியும்.

மிதி வண்டியின் நகர்வுக்குத் தேவை முயற்சி. காலால் இயக்கினால் பின்னே உள்ள சக்கரம் முன்னே உள்ள சக்கரத்தை தள்ளிச் செல்லும். கையால் உருட்டிச் சென்றால் முன்னே உள்ள சக்கரம் பின்னே உள்ள சக்கரத்தை இழுத்துச் செல்லும். இந்த இரண்டு செயற்பாடிற்கும் முயற்சி தேவை. ஆனாலும் மிதி வண்டியின் அமைப்பு காலால் இயக்குவதற்குத் தான். காலால் இயக்கும் போது அதன் வேகமும் அதிகமாகின்றது. அடைய வேண்டிய இலக்கை விரைவாக அடையவும் முடிகின்றது. கையால் தள்ளிச் செல்லும் போது மிதி வண்டியின் நோக்கத்திற்கு மாறாக நாம் செயற்படுவது மட்டுமல்ல மிதிவண்டியே எமக்குச் சுமையாகி விடுகின்றது. அதாவது எம்மைச் சுமக்க வேண்டிய மிதி வண்டி எமக்குச் சுமையாகி விடுகின்றது. வாழ்க்கை எனும் மிதிவண்டியும் அவ்வாறே. எமது முயற்சியால் எமது நோக்கத்தை அடைவதற்கு பயன்படுத்தபடுவதுதான் தான் வாழ்க்கை. அந்த முயற்சியானது மிதிவண்டியைக் காலால் இயக்குவது போல் இருந்தால் அது நம்பிக்கை எனும் சக்கரத்தை இயக்குவதன் மூலம் எங்களையும் சுமப்பதோடு அடைய வேண்டிய இலக்கையும் வேகமாக அடையச் செய்யும். மாறாக உருட்டிச் சென்றால் அதாவது சந்தேகம் எனும் சக்கரத்தை இயக்கினால் மிதிவண்டி சுமையாகி விடுவது போல் வாழ்க்கையும் சுமையாகிவிடும்.

மிதி வண்டியின் நோக்கம் ஓட்டுனரின் முயற்சிக்கும் நோக்கத்திற்கும் முற்று முழுதான ஒத்துழைப்பைக் கொடுப்பது தான். தனது சுமை தாங்கும் இயலுமையைப் பொறுத்து தன் மீது சுமத்தப்படும் சுமைகளையும் ஏற்றுக்கொள்ளும். ஆனால் அந்தச் சுமைகளை ஏற்றுக்கொண்டாலும் அதை நகர்த்தும் முயற்சியை முற்று முழுதாக ஓட்டுனரிடம் ஒப்படைத்துவிடுகிறது. நமது வாழ்க்கையும் அப்படித்தான். சுமைகளை அது அதன் இயலுமைக்கு ஏற்றவாறு ஏற்றுக்கொள்ளும். ஆனால் அந்தச் சுமையோடு நகர்த்த வேண்டிய பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்து விடுகிறது. அதுமட்டுமல்ல, சுமையின் அளவு எவ்வளவுக்கு குறைவாக இருக்கின்றதோ அவ்வளவுக்கு வாழ்க்கையை நகர்த்துவது சுலபமானது என்று அது அறிவுறுத்துகிறது.

மிதிவண்டியில் நாம் செல்லும்போது எமது பார்வை பாதுகாப்பான அளவு தூரத்துக்கு பரந்து பட்டதாக இருக்கவேண்டும். அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கு செல்லவேண்டிய பாதையை இது தெளிவுபடுத்திக் கொண்டிருக்கும். மாறாக மிதிவண்டியின் முன் சக்கரத்தை மட்டுமே பார்த்தபடி பயணம் செய்வோமாயின் விபத்து நிச்சயம். இவ்வாறே, வாழ்க்கை எனும் மிதிவண்டியில் நாம் செல்லும் போது தெளிவான பார்வையுடன் செல்வோமாயின் அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கான பாதையை அது தெளிவுபடுத்திக் கொண்டிருக்கும் . மாறாக சந்தேகம் எனும் முன் சக்கரத்தில் மட்டும் கவனம் செலுத்துவோமாயின் இழப்புக்கள் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இப்போது மிதிவண்டி எமக்குத் தரும் வாழ்க்கைத் தத்துவம் என்ன என்பதைப் பார்ப்போம். வாழ்க்கை என்பது பற்றுக்கள், பந்தபாசங்கள், உறவுகள், நட்புகள் என்ற இரும்புக்கம்பிகளால் சந்தேகம் என்ற முன் சக்கரமும், நம்பிக்கை என்ற பின் சக்கரமும் உறுதியாக இணைக்கப்பட்டுள்ள பயன்பாடுக்கு உரிய ஒரு கருவி. இந்தக் கருவியின் உச்ச பயன்பாடு என்பது மிகக் குறைவான சுமைகளுடன் சமநிலை தளம்பாமல், உறுதியான முயற்சியால், நம்பிக்கை எனும் சக்கரத்தை இயக்கி அந்த இயக்கத்தால் ஏற்படும் உந்து சக்தி மூலம் சந்தேகம் எனும் முன் சக்கரத்தின் மீதான கவனத்தை முற்று முழுதாக விலக்கி, அடையவேண்டிய இலக்கை தெளிவான பார்வையுடன், தெளிவான பாதைகளூடாக அடைவது தான்.

எழுதியவர் : கவிஞர் இனியவன் (10-Jan-13, 5:57 am)
பார்வை : 265

மேலே