எழுத்தும் பலகையும் நியாயம் கேட்கிறது ....
எத்தனை பரிணாமங்கள்.........!
எத்தனை
பரிமாறல்கள்.........!
எழுத்தாணியாய் சிதைத்தேன்....
குருத்தோலையாய் துடித்தாய் .....
மை கொண்டு அணைத்தேன்
வண்ணமுதிர்த்து
நெளிந்தாய்.......
உளித் தொடுதல்களாய்
சில்மிஷிக்கிறேன் ......
சிற்பங்களாய் சிலிர்த்துப்
பூக்கிறாய்....
தட்டச்சுகளாய் முத்தமிடுகிறேன் ....
காணொளித் திரைகளில்
முறுவலிக்கிறாய் .....
வார்த்தைகளும் வடிவங்களுமாய்
உருவங்களும் ஓவியங்களுமாய்
எத்தனையோ
இழைத்திட்டோம்...
கனவுக் குவியங்களின்
சுமைதூக்கிப் பொதியங்களாகவே
இன்றுவரையில் நாம்...
என்று பயணிக்கத்
தொடங்குவோம் நமக்கான
சுமைகளுடன் .....?