காலத்தின் மீதான கடிகாரத்தின் காதலாக...!
![](https://eluthu.com/images/loading.gif)
அதுவொரு
அரைமணிநேர காத்திருப்பு ,
அங்கும் இங்குமாய் நடக்கையில்
அலைந்து திரியுதென் மன ஓட்டங்கள் !
பிசைகின்ற
பிஞ்சுவிரல்களுக்குள்
பிறழாத எதிர்பார்ப்புகளில் ,
பிரியங்கள் கூட்டுகின்ற நிமிடங்கள் !
மணியோ
மண்ணில் வீழ்ந்த
மழைத்துளிகளாய் மறைய ,
மனமோ வறண்டு கொண்டிருக்கிறது !
நொடிகளில்
நொறுங்கிப் போனபடி
காத்திருப்பின் உறுதிகளோ ,
கவலையுற்றபடி உடைகிறது !
நீண்டு
நீர்வடிக்கும் குழலை
நீவியபடி நகரும் நேரங்களில்
நீ வரும் பாதையைப் பார்த்திருக்க ,
என் காதினில்
எனக்காய் மட்டுமே ,
இடைவிடாத நகர்வுகளோடு
இலகுவாக கேட்கும் ஓசை தேடி ,
சுற்றும்
சுழலவிட்ட கவனத்திற்கு ,
சிறிதும் பலனின்றிப் போனபின்
சிடுசிடுத்து கைக்கடிகாரம் பார்க்க ,
அப்போது
அருகிலே நெருங்கியபடி
அந்த ஏமாற்றிய ஓசையோ
அபரிமிதமாய் தொடர்ந்து வர ,
உற்றுநோக்கி
உணர்ந்துகொண்டேன் ,
உலகம் மறந்த கடிகார முட்கள்
உள்ளே இரு இதயங்களாக துடிக்கிறது !
கனவுகளை விட்டு
கற்பனை செய்து பார்க்கிறேன் ,
காதலனவனின் என்மீதான காதலை
காலத்தின் மீதான கடிகாரத்தின் காதலாக..!
************************************************************************
நண்பர் வினோத் கொடுத்த தலைப்பான "காலத்தின் மீதான கடிகாரத்தின் காதல் " என்பதற்கிணங்க படைக்கப்பட்டது