தை மகளே வா வா

ஊருக்கு சோறளிக்க
கூடி நின்னு போறடிக்க
குவிஞ்சிருக்கும் நெல்லு -
அதை ஆழாக்குல அள்ளு.

ஏரோட்டி ... நீருட்டி
வளர்த்து விட்ட பயிரு-அந்த
கதிரறுத்து குவிக்கிறப்போ
நெறஞ்சிருக்கும் வயிறு
.
ஊழி மறஞ்சிருக்கும்
தாழி நெறஞ்சிருக்கும்
நாழி அளக்கையிலே
நம் மனசு குளுந்திருக்கும்
.
களைக்காம உழைச்சி நாம
நெறைச்சி வச்ச நெல் எடுத்து
சொளவெடுத்து படைக்கையிலே
உழவடித்த பறையோலிக்கும்

ஐப்பசியில் நெறஞ்ச உமல்
அடிவயிறு காட்டுறப்போ –நம்
வயத்தில் பால்வார்க்க
தலை நிமிர்ந்த கதிரறுத்து
புது அரிசி பொங்கலிட்டு
பூமிக்கு படியளப்போம்.

உலகத்து உலையில் எல்லாம்
உன்பேரே ஒலித்து நிக்க
தரணிக்கு விருந்தளிக்க
தை மகளே வா வா ..வா

கார்த்திகையில் காத்திருந்த
கன்னி மவ ஆசையெல்லாம்
கை கூடி கரையடைய
தை மகளே வா ..வா..வா .
தரணிக்கு பூச்சூட
தை மகளே ..வா ..வா வா ..........

(தளத்தில் உள்ள அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் )

எழுதியவர் : sindha (13-Jan-13, 11:28 pm)
பார்வை : 129

மேலே