வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
இன்றும் நினைவிலிருக்கிறது
அந்த இனிய நாள்!
மூன்றாம் வகுப்பை
முழு ஆண்டுத் தேர்வு எழுதி
முடித்து வைத்தபின்
முழுதாய்க் கிடைத்த
ஒரு மாத விடுமுறைக் காலமது!
நாங்கள் விளையாடிக் கிளப்பிய
புழுதி நெடியில்,
விட்டால் போதுமென்று
விடுமுறை நாட்களே
விரைந்தோடிய காலமது!
அது ஒரு ஞாயிற்றுக்
கிழமையென்றே ஞாபகம்!
காலைவெயில் எங்கள்
கதவிடுக்கில் நுழைந்து என்
கால்மாட்டில் விழுந்து காத்திருந்தது
நான் கண்விழிப்பதற்காக!
உரக்கக் கரைந்த காகம் ஒன்று
என் உறக்கம் களைத்த திருப்தியில்
சன்னல்விட்டு சந்தோசமாய்ப்
பறந்து சென்றது!
விளையாட்டு ஆர்வத்தில்
விழிகள் திறந்துகொள்ள
விருட்டென எழுந்தமர்கிறேன்!
என்ன அது? வடமேற்கு
மூலையில் வழவழப்பாய்?
கனசதுரப் பெட்டியொன்று
கம்பீரமாய் அமர்ந்திருந்தது
அந்த கனத்த மேசை மீது!
சந்தேகமேயில்லை! இது
தொலைக்காட்சிப் பெட்டிதான்!
அடுப்படியிலிருந்த அம்மாவிடம்
ஓடுகிறேன்! "என்னம்மா அது?"
"கலர் டி.வி டா"
அம்மா சொன்ன வார்த்தை
ஆனந்தமாய் ஒலித்தது!
இரவு என் கண்களில் படாதது,
இப்போதெப்படி வந்ததென்றேன்!
அம்மா சொன்ன கதை கேட்டு
அதிசயித்துப் போனேன்!
மூன்று வயது குட்டித் தம்பி
சொப்பனம் கண்டு
ஏதோ சொல்லியழ,
உற்றுக் கேட்ட அப்பா காதில்
டி.வி என்ற ஒற்றைச் சொல் விழ,
அடுத்த பேருந்தில் மதுரை சென்று
கடைசிப் பேருந்தில்
கலர் டி.வியுடன் திரும்ப,
புரண்டு படுக்கும் நேரத்திற்குள்
புருவம் உயர்த்தும்படி ஒரு புதுவரவு!
திடீரென்று தம்பி விழித்தால்
டி.வியில்தான் விழிக்கவேண்டுமாம்!
கேட்கக் கேட்க சிலிர்த்தது!
கேசரியாய் இனித்தது!
நேற்றுவரை நான் ரசித்த வானொலி
லேசாய் எங்களை முறைத்தது!
மூன்று தெருக்களுக்கும் சேர்த்து
முதல் தொலைக்காட்சிப் பெட்டி
இதுவென்பதால், என்
முன்நெற்றிவரை முட்டி நின்றது கர்வம்!
தெருவெங்கும் இச்செய்தி பரப்பாவிடில்,
தெறித்து விழுந்துவிடும் தலை!
ஒளிபரப்பக் காத்திருக்கும்
எங்கள் தொலைகாட்சி பற்றி
ஒலிபரப்பியபடி விரைகிறேன்
ஒவ்வொரு வீட்டின்முன்பும்!
சண்டியராய்த் திரிந்த, மற்றும்
நான் சண்டையிட்டுப் பிரிந்த
சகல நண்பர்களிடமும்
சத்தமாய் சொல்லிமுடித்தேன்
அந்த சர்க்கரைச் செய்தியை!
அடுத்த அரை மணி நேரத்தில்
அரைகுறையாய் கழுவிய முகங்களுடன்
அத்தனை நண்பர்களும்
ஆராவாரமாய் அமர்ந்திருந்தனர்
அனைத்து வைக்கப்பட்டிருந்த
அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிமுன்பு!
படம் தெரியும் நிமிடத்திற்காய்
படபடப்பாய்க் காத்திருக்கிறோம்!
அப்பா வந்து இயக்கினால்
அழகாய்த் தெரியும் நிகழ்ச்சிகள் என
அனைவருக்கும் சொல்லிவைக்க,
அப்பா வந்து வீசினார்
அந்த அணுகுண்டை!
ஆண்ட்டனா என்ற ஒன்று
அவசியம் வேண்டுமாம்!
அடுத்தவாரம் அது வந்தபின்தான்
அனைத்து நிகழ்ச்சியும் தெரியுமாம்!
அப்புறமென்ன...?
அத்தனை மகிழ்ச்சியும்
அசடு வழிய ஒத்திப்போடப்பட்டது
அடுத்த வாரத்திற்கு!