மனிதனை மனிதன் தொட்டால்

மனிதனை மனிதன் தொட்டால், அவன்
நிழல் பட்டால், குரல் கேட்டால்
தீட்டாம்! பிறப்பால்
அடிமையாய் பிறந்திங்கே
அடிமையாய் வாழ்ந்தே
அடிமையாய் மடியவேண்டும்!
என்ன கொடுமையிது!
ஏனிந்த மடமையிங்கே?
ஊருக்கு அப்பாலே
ஓலைக்குடிசையிலே - ஒரு
குலமக்களிங்கே விலங்கினுக்கு ஒப்பாக!
ஒதுக்கியே வைக்கப்பட்டார்.

இருள் சூழ்ந்த குடிசையிலே
இடையில் ஓர் கோவணமும்
தாழ்ந்த இழித் தொழிலாம்
வெட்டியான் கொத்தடிமை
சாக்கடைத் தெரு கூட்ட
செத்த மாட்டத் தோலுரிக்க
மனித மலம் வார
எவன் போட்ட கட்டளை

அவன் பிறந்தாலும் தீட்டு
வாழ்ந்தாலும் தீட்டு
எள்முனை இரக்கமின்றி
இழிகுலம் எனக்கூறி
ஆண்டு பலகாலமாய்
ஆரிய சாத்திரம்
அடக்கின அடிமையாய்?

மனு என்ற மடைமையனால்,
படைப்புக் கடவுள் என்ற
பிரம்மாவின் முகத்தில்
பிறந்தவன் பார்ப்பனன்
தோளில் தோன்றியவன் சத்ரியன்
அவன் தொடையில் பிறந்தவன் வைசியன்
பாதத்தில் பிறந்தவன் சூத்திரன்

ஆணுறுப்புக் கொண்ட
இந்து கடவுளுக்கு
முகமும் தோளும்
தொடையும் பாதமும்
பிரசவ பெண்ணுறுப்பாம்!

இடைநோக! தொடைநோக!
ஈன்றெடுத்த ஆதிமக்கள்
இந்நாட்டு இழிகுலத்தோர்
என்ன! மடமையிங்கே
மானிடத்தின் பரிணாமம்

பகுத்தறிவுக்கே பொருந்தாத
அடிப்படை தத்துவத்தால்
காற்கோடி மக்களிங்கே
தான் பிறந்த தாய் நாட்டில்
தரித்திரப் புத்திரனாய்
தரம் கெட்ட சாத்திரத்தால்
அடக்கி ஒடுக்கப்பட்ட
தார்மீக பொறுப்புக்கு
யார்? இங்கே காரணம்?

ஈராயிரம் ஆண்டுகால
இந்திய வரலாற்று
பன்னெடு காலமாய்
ஊரில் உரிமையற்று
அநீதியின் கால்கீழ்போட்டு, எமை
நசுக்கி மிதித்திட்ட
நாள் குலத்தார்
மேல் குலத்தார் இன்னும்
எத்தனை காலம் தான்
இக்கொடுமை நீடிக்கும்.

எழுதியவர் : தங்கமுரசு (17-Jan-13, 5:23 pm)
சேர்த்தது : ValentineVetri
பார்வை : 831

மேலே