பக்குவம் அடையா பருவங்கள்
காதல் காதல் என்று காலைமாலை
காளைகளும் குமரிகளும் சுற்றிடும்
காட்சிகள் எங்கும் என்றும் நடந்திடும்
காணொளி நிகழ்வாய் காண்கிறோம் !
பள்ளிச் சீருடையில் பால்ய பருவத்தில்
வெள்ளித் திரையின் பாத்திரங்களாய்
துள்ளி விளையாடும் சின்னஞ் சிறாரும்
எள்ளி நகையாடும் விதமாய் திரிகின்றனர் !
சீருடனே நடந்து சிறந்து விளங்காமல்
சிந்தையின் சிதைவால் சீரழிந்து சிதறி
தவறான பாதையில் பயணம் செய்யும்
தளிர்களின் நிலை துளிரிலே கருகுகிறது !
தடுமாறிய உள்ளங்கள் தடமாறிப் போவதால்
தழைத்திடும் வாழ்வின் தடயமும் அழிகிறது !
திசைமாறும் பறவைகள் திருந்திட வேண்டும்
திறனை வளர்த்திட அறிவை கூட்ட வேண்டும் !
பருவத்திற்கு தகுந்த பாதையில் சென்றால்
உருவத்திற்கு ஏற்ற உள்ளத்தைப் பெறலாம் !
வயதும் வந்திடும் வாலிபம் அடைந்திட்டால்
விருப்பமுடன் வாழ வழியும் தோன்றலாம் !
( இது பள்ளி மாணவர் இருவரைப் பார்த்த தாக்கம் )
பழனி குமார்