நோட்டம்விட்டே கூட்டை மெலிக்காதீர்

பிறரது
பகையுணர்வுகளைப்
பருகியே என் அவமானங்கள்
பல்லக்கில் பலமுறை பவனி வருகிறது !

தலை
தரைநோக்கும் தருவாயில்
தகிக்கிறது என் நம்பிக்கைகள்
தவிடுபொடியாக்கும் எதிரிகளால் !

உண்மையாய்
உள்ளம் வாழ நினைக்க
உலுக்கிப் பார்க்கும் திட்டமுடன்
உலகம் புரிந்த வஞ்சக நெஞ்சங்கள் !

ஏமாறவே
ஏகமனதுடன் விருப்பம்
ஏனெனில் எனது மூளையை
ஏர்பூட்டி உழும் தந்திரங்களினால் ,

என்னுள்
எட்டிப் பார்க்கின்ற
புதிய மாற்றங்கள் பலவும்
புதைந்துள்ள ஞானத்தை விளைவிக்கும் !

எதிரிகளே உம்
எண்ண மேடையில்
எனக்கென்று ஓர் தனி இடம்
என்ற மேன்மை உண்டெனக் கண்டீரோ..?

கண்டறியாது
கள்ளச் சிந்தனைகளில்
மூழ்கி மூச்சடைத்து முத்தெடுக்க
முழுவதும் தன்னை அர்ப்பணிக்கிறீர் !

மென்மையாய்
மௌனமாய் ஆளும்
உயிருக்குள் நீங்கள் செருகும்
உருக்கும் வீரிய சுடுஞ்சொற்கள் எதுவோ......?

நெருப்பாக்கி
நெகிழ்த்தன்மையை
நெருக்கடிக்குள் சமாதியாக்கி
நெருடலாய் மரண வலிகளைத் தருகிறது !

வீணாகி
வீழ்வது காலம் மட்டும்
எழும் எந்தன் துணிவிற்கோ
எந்நாளும் வெற்றிகள் கிட்டும் !

நோக்கமாய்
நோகடித்து மகிழும்
நோயினைப் பெற்றவர்களே
நோட்டம்விட்டே கூட்டை மெலிக்காதீர் !

எழுதியவர் : புலமி (24-Jan-13, 9:17 pm)
பார்வை : 282

மேலே