தேனை விற்பனை செய்யும் பூக்களாக

ஆதவன் அஸ்தமிக்க
சமந்தி மஞ்சளில் கடற்கரை

அலைகளுக்குள் போட்டி
கரையை முதலில் தொடுபவர் யார்?

நுரையோடு கரை வந்து
வலைகளை தேடும் நண்டுகள்

பரந்த மணலில்
பதிக்கப்பட்ட புதிய கவிதைகள்
குழந்தைகளின் பாத சுவடுகள்

கவிதை தியானத்தை
கலைப்பதாய் ஓர் குரல்

சுண்டல் சுண்டல்
சூடான சுண்டல்
மங்கை தேங்காய்
பட்டாணி சுண்டல்

மக்கள் மத்தியில்
கெஞ்சலாய் வணிகம் செய்யும்
பிஞ்சுகளின் குரல்கள்

கிறுக்கியே தேய்ந்து போன
எழுதுகூளின் மூக்காய்
அவனின் பாதங்கள்

வற்றிய குளத்தில் சிக்கிய
சேற்று மீன்களாய்
அவனின் கண்கள்

பிரம்மனின் கஞ்சத்தனமோ
சுண்டல் குரலுக்கு
சொந்தமான குழந்தையின்
ஒட்டிய வயிறு

மெலிந்த மேனியின்
மானத்தைகாக்கும்
கிழிந்த ஆடைகள்

அவனுக்காய் சிந்திய
என்கண்ணீர் கரையை
கடக்கும் முன்

சுண்டல் சுமையுடன்
சுறு சுறுப்பாய்
அவனின் ஓட்டம்

சற்றே துரத்தில் மாபெரும்
அரசியல் கூட்டம்

குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடாம்

அக்கூடத்திலும் அதே குரல்
சுண்டல் சுண்டல்
சூடான சுண்டல்
மங்கை தேங்காய்
பட்டாணி சுண்டல்

சுண்டலோடு சேர்த்து
எதிர்காலத்தையும்
விற்றுவிடும் குழந்தைகள்

தேனை விற்பனை செய்யும்
பூக்களாக

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (1-Feb-13, 12:06 pm)
பார்வை : 116

மேலே