திகைத்து நிற்கிறேன் நண்பனே !

நிறையக் கனவுகள்
அதில் புதிய புதிய பரிமாணங்கள்
உன்னை சந்திக்க வருகின்ற எனக்குள்

என்னைப் பற்றியும்
என் இருப்பிடம் பற்றியும்
ஒரு நிமிடம்கூட நினைத்தறியாத
உன்னைப்பற்றியே நினைத்திருக்கும்
எனக்குள் எப்போதும்
உன் உலகம் சுழன்றபடியே இருக்கும்

பால்ய காலத்தில் எனக்குள்
நட்பை விதைத்துச் சென்ற உன்னை
தாலாட்டி மகிழ
விழுதுகளை வளர்த்து காத்திருந்து
தவித்துப் போனது உண்டு

உன் பாராமுகத்தால்
ஏமாற்றங்களை தாங்காமல்
வாடிப் போனது உண்டு

எல்லா நாட்களும்
இலையுதிர் காலத்தை
சந்தித்தது உண்டு

வாழ்க்கை வலையில் சிக்குண்டு
நட்புப் பறவைகளை
அனுப்பத் தவறி விட்டாயோ என
உன்மேல் கோபப் பட்டதும் உண்டு.

கால ஓட்டத்தின் வேகத்தில்
நட்பின் தாகத்தைத் தாங்காத நான்
உன்னுடன் நினைவுகளைப் பகிர்ந்திட
ஒரு நாள் சந்தித்து விடுவதென்று
புறப்பட்டு வருகிறேன்

எதிர்பாராமல் வந்து நின்ற
என்னைப் பார்த்து விக்கித்து நின்ற நீ
சுதாரித்துக் கொண்டு கேட்ட கேள்வி
என் எண்ணத்தை ஓங்கி அறைகிறது...
அது திரும்பத் திரும்ப ஒலிக்கிறது...

“ஏண்டா இன்னிக்குத்தான்
நியாபகம் வந்ததா?”

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (12-Feb-13, 12:04 pm)
சேர்த்தது : Rathinamoorthi kavithaikal
பார்வை : 101

மேலே