திரும்பிப் பார்க்கிறோம்.(ரோஷான் ஏ.ஜிப்ரி)

இது கனவோ,கற்பனையோ அல்ல
வாழ்ந்த கணங்களின் முகங்களை வருடி
திரும்பிப் பார்த்து
உள்ளம் அடையும்
உவகை பற்றிய சிறு குறிப்பு !

பாதுகாப்பானதாய்,
மிக நம்பிக்கைக்குரியதாயான நாட்களில்
யாரும் பார்க்காத வானம்
எங்கள் காலடியில்....,
அண்டம் முழுக்க
எமக்கென்றே படைக்கப்பட்ட
இறை பரிசாய்
மனம் லயித்து சிலிர்த்தது தினம்
வானம் வெள்ளிகளால் பூத்து
நிறைந்து கிடந்ததது
எங்கள் தட்டுகளில்....,
சோளப் பொரியாய் அள்ளி
நட்சத்திரங்களை கொறித்த படி
நிலவை கடலில் இறக்கி
நீராட்டி மகிழ்ந்திருக்கிறோம்
ஒவ்வொரு பௌர்ணமிகளிலும்

அலைகளை கூப்பிட்டு எங்கள்
கால்களை கழுவச்சொன்ன காலமது
நண்டுகள் பிடிக்க முண்டியடித்ததும்
சிப்பிகள் சேர்த்து சிலைகள் வடித்ததும்
ஞாபகங்களில் நுரைத்து மிதக்கின்றன
மணல் வெளிகளில்

பழையபடி.......,.
இப்பவும் எல்லாம் இருக்கின்றன தான்
ஆனால்;
எங்கள் தட்டுகள் வெறுமையாக
சந்தோஷங்களைத்தான்-காலம்
போர்,சுனாமியென
இரண்டு முறை ஏலமிட்டு
மொத்தமாய் காவுகொண்டு
கவலை களிப்பில் குளிப்பாட்டி
கண்ணீரில் நீராட்டி விட்டது

இனியென்ன.... இப்போது
இறந்த காலத்துக்கான
இரங்கல்களாகும்
அஞ்சலிகளால் அவ்வப்போது கொஞ்சம்
ஆசுவாசம் அடைகின்றோம்.
அவ்வளவுதான்!


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (13-Feb-13, 2:37 am)
பார்வை : 168

மேலே