பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா !!
அப்பா..
எழுத முடியாத பல கடிதங்கள் எழுதியும் அனுப்பப்படாமலே கிடந்துப்போகும்,
எழுதப்பட்ட என் கடிதமாய்.
சொல்லப்படாத அன்பையும் ஏக்கங்களையும் மை தீர எழுத
எத்தனிக்கும் என் பேணா எழுதாமலே தலை சாய்க்கிறது.
நான் சேமித்தக் கண்ணீராய் மையையும் சேமிப்பது போல்..
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என சொல்லிக்கொடுத்த தமிழ்
அப்பா எனும் மந்திரச்சொல்லையும் தெரியவைத்தது.
எங்களுக்காக நான் பிறந்ததும் மனதையும் உயிரையும்
எங்களிடமே கொடுத்துவிட்டு வெறும் உடலோடு பறந்தீர்கள்
ஒரு பறவையாய் பாலைவனக் காட்டிற்கு.
இன்னும் பறந்துகொண்டு தான் இருக்கிறது உங்கள் வாழ்க்கை
மடங்காத ரெக்கைகளோடு..
சில ஆண்டுகளுக்குப் பிறகு
வளர்ந்த என்னைக்காண ஆவலாக வந்த உங்களைக் கண்டு
யாரெனத் தெரியாமல் விலகிசென்றேனாம்.
அம்மாவைத்தவிர குழந்தைகளுக்கு அனைவரும் பூச்சாண்டிகள் தானே.
ஏமாற்றத்தை அம்மாவிடம் பகிர்ந்து வருந்தியதைப் பின்னாளில் தெரிந்துகொண்டேன்.
இன்றளவும் எண்ணிக்கரைவதுண்டு.
இன்றைய குழந்தைகள் அறிந்திடாத கடிதமுறையை
"அப்பா .. எப்படி இருக்கீங்க.. எனக்கு steadler பென்சில் வேணும்"
என ஒரு வரியில் எழுதக் கற்றுக்கொடுத்தது
நடுத்தர குடும்பங்களில் தொலைபேசியில்லா அந்த நாட்கள்.
ஞாயிற்றுக்கிழமைக்காக ஏங்கும் குழந்தைகளுக்கு மத்தியில்
வெள்ளிக்கிழமையை நோக்கும் குழந்தையாக இருந்துபோனேன்.
அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை தான் விடுமுறை என்று அறிந்த
பொது அறிவுள்ள மாணவன் நானென ஆகிப்போனேன்.
பள்ளியில் கடைசி மணிக்காக காத்துக்கிடக்கும் குழந்தையைப் போல்
தங்கள் அழைப்புக்காக பக்கத்துவீட்டின் தொலைபேசி மணியை
காதுகொடுத்து காத்துகிடப்போம் நானும் அம்மாவும்
ஒவ்வொரு வெள்ளிழமைகளிலும்.
ஆசிரியை என்னைப் பாராட்டிய மகிழ்ச்சியையும்
சேட்டைகளுக்காக அதட்டிய அம்மா மீது புகார்களையும்
ஒரு வாரக்கதையாக மனப்பாடம் செய்து ஒலிபரப்புவேன்
உங்களுடன் உரையாடும் சில மணித்துளிகளில்
புண்ணியவான் கிராஹம்பெல்லின் ஆசியில்..
பின்னாட்களில்
தங்கையும் சேர்ந்துப்போனாள் இந்தக் காத்திருப்போர் பட்டியலில்.
இம்முறை தொலைபேசி மணி நம் வீட்டிலிருந்து.
பிறந்தநாள், பண்டிகைகள் என அனைத்திற்கும் தவறாமல் வரும்
தங்களின் வாழ்ததட்டையின் சேகரிப்பு உண்டியலின் கவனத்தையும்
சற்றே தாண்டி நிற்கும்.
வருடத்தின் 335 நாட்கள் எதிர்பார்ப்புடன் தான் கழியும்
நீங்கள் ஊருக்கு வரும் அந்த முப்பது நாட்களுக்காக.
உங்களுக்கும் அதே எதிர்பார்ப்பு இருப்பதை அறியாத குழந்தையாக
இல்லாமல் சற்று வளர்ந்த குழந்தையாகி இருந்தேன்.
உங்களை அழைக்க வரும் மகிழ்ச்சியுடனும்
விமானத்தைக் காணும் மகிழ்ச்சியும் தொற்றிக்கொள்ள
நாட்களை எண்ணத் தொடங்குவேன் உங்கள் பயணத் திகதிக்காக.
நண்பர்கள் மத்தியில் ஒரு துபாய் ஷேக்காகவே மாறிப்போவேன்
அந்த முப்பது நாட்களும்..
விடுமுறை கழிந்து பெட்டிக்கட்டும் சமயத்தில்
கட்டிப்பிடித்து அழுத கண்ணீர் சொட்டுகள்
அடுத்த ஒரு வருடம் உங்களை வடுவாய்
உறுத்திக்கொண்டிருக்கும்
என அறிந்திருக்கவில்லை நான்.
நாட்கள் நம்மைக் கடக்கத் தொடங்கின.
நாமும் எதிர்பார்த்துக்கொண்டேக் காத்திருக்கிறோம்.
என்று நாமனைவரும் ஒருசேர நாட்களைக்
கடக்கப்போகிறோமென்று.
உங்களின் இந்த பிறந்தநாளுக்கு செய்வதறியாது எழுதிமுடித்தேன்
இக்கடிதத்தை.
வழக்கமான கடிதமாய்.
இனிவரும் பிறந்த நாட்களும் ஆளுக்கொரு திசையில்லாமல்
அன்பின் திசையில் அகமகிழ்வோம் என்ற அதே நம்பிக்கையில்
இம்முறையும் வாழ்த்துகிறேன்..
பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா !!