ஹைதராபாத் குண்டுவெடிப்பு - வலி

யாதுமறியாத
ஜனத்தினை கொல்லும்
ஜந்துக்கள் எல்லாம்
ஜனித்த இடம்
தாயின் கருவறையா...?
இல்லை தெருவோர சாக்கடையா?

எங்கேயோ எவனோ போட்ட
முரண் முடிச்சு
குண்டுகளாய் சீறிப்பாய்ந்ததில்
கருகிப் போன உயிர்கள்
எல்லாம் எப்படி
இவனின் கோர வெறிக்கு
காரணமாகிப்போனார்கள்?

எங்கோ எவனோ
உனக்கிழைத்த தீங்கினை
எங்கோ எவனுக்கோ
செய்து விட்டால்
இரண்டு கொம்புகள் முளைக்குமா
உனது தலையில்
அல்லது....
திருப்தியின் உச்சத்தில்
உன் ஆன்ம வெளிச்சம்
உன்னைக் கடவுளாக்கி
இழந்ததை எல்லாம்
மீட்டெடுத்துக் கொடுக்குமா?

தீவிரவாதமென்பது
தீப்பொறி வார்த்தைதான்
வஞ்சம் தீர்க்கும் வழிமுறைதான்
கணக்கு வழக்கில்லாமல்
உயிர் குடிக்கும் யுத்திதான்
ஆனால்...
அடித்தவனை விட்டு விட்டு
அகப்பட்டவனை அடிக்கும்
கேவல வழியென்று
பிறப்பில் கோளாறு இருக்கும்
கோழைகள் என்றும்
அறிவதில்லை..!

என் தேசத்தில் மட்டும்
எப்போதும்....
அரசியல்வாதி வாழ்வான்
ரெளடியும், குண்டர்களும்
அதிகாரமாய் வலம்வருவர்
தீயது எல்லாம் கம்பீர
ஊர்வலங்கள் வரும்...

ஆனால்..

அப்பாவி மட்டும்
குண்டு வெடிப்பிலும்
துப்பாக்கிச் சூட்டிலும்
காரணங்களின்றி
களைந்தெறியப்படுவான்....!!!!!

எழுதியவர் : Dheva.S (22-Feb-13, 9:16 am)
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே