நலன் தரும் நல்ல விளக்குகள்

108 திரிவிளக்கு: திருவிளக்கு பூஜை பல மகத்தான பலன்களைத் தரக்கூடியது. இப்போது பெரும்பாலான கோயில்களில் இப்பூஜை அதிக அளவில் நடத்தப்படுகிறது. இப்பூஜையின்போது பெண்கள் திருவிளக்கின் முன் அமர்ந்து கொண்டு அம்பிகையின் 108 திருநாம போற்றி சொல்வர். இவர்கள் மனநிறைவுடன் போற்றி சொல்ல 108 திரிவிளக்கு உள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் 108 திரிகளை ஏற்றி அம்பாளை வழிபட்டால் குறைவில்லாத வாழ்க்கையை அம்பாள் அருள்வார் என்பது நம்பிக்கை.

ஐஸ்வரிய லட்சுமி விளக்கு: புதுமையான இந்த விளக்கின் அமைப்பு வித்தியாசமானது. ஒரு தாமரை மலரின் மீது மகாலட்சுமி அமர்ந்திருக்க, அவருக்கு இருபுறமும் 2 யானைகள் இருக்கின்றன. லட்சுமிக்கு கீழே பீடத்தைச் சுற்றிலும் 7 சிறிய விளக்குகளும், யானைகளின் மீது 2 விளக்குகளும் இருக்கின்றன. மொத்தத்தில் ஒரே விளக்கில் 9 விளக்குகள் காணப்படுகின்றன. இவ் வகையான விளக்குகள் நவராத்திரி நாயகிகளின் அம்சமாகவே கருத்தப்படுகிறது. தொழில் விருத்தி, கடன் நிவர்த்திக்காக இந்த விளக்கை ஏற்றலாம்.

சங்கு, சக்கர தீபம்: பெருமாளின் ஆயுதங்களில் முதனஅமை பெற்றதாகவும், அவரது கரங்களை அலங்கரிப்பதாகவும் இருப்பது சங்கும் சக்கரமும். இவ் விரண்டையும் சேர்த்து செய்யப்பட்ட தீபம் சங்கு சக்கர தீபம். கீழ் வட்ட வடிவமான சக்கரமும், அதன் மேலே சங்கும் வைக்கப்பட்ட அமைப்பில் இந்த விளக்கு இருக்கிறது. இவ் விரண்டும் இருக்கும் இடங்களில் மகா விஷ்ணு வாசம் செய்வதாக ஐதீகம்.

பாவை விளக்கு: ஒரு பெண் தன் கரத்தில் விளக்கு ஏந்தியபடி இருப்பதை பாவை விளக்கு என்பர். இவ் விளக்கு மிகவும் தொன்மையானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த விளக்கு வழிபாட்டில் இடம்பெற்றுள்ளது. பழம்பெரும் கோயில்களில் சிற்பங்களாகவே இவை வடிக்கப்பட்டிருக்கிறது. வீட்டிலோ அல்லது கோயிலிலோ அம்பாள் சிலையின் இருபுறமும் இந்த விளக்கை வைத்துக் கொள்ளலாம்.

பிரணவ விளக்கு: ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது ஓம் விளக்கு. இந்த விளக்கின் மையத்தில் எண்ணெய் ஊற்றும் அகலில் லிங்க வடிவம் இருக்கிறது. எண்ணெய் ஊற்றியதும் ஓம் எனும் வடிவம் மட்டுமே தெரியும். லிங்க வடிவம் தெரியாது. எரிய ஆரம்பித்தபின் லிங்க வடிவம் தெரியும்.

விநாயகர் விளக்கு: கையில் விளக்கு ஏந்தி, அதில் தும்பிக்கையை வைத்தபடி விநாயகர் இருக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த விளக்கை விநாயகர் விளக்கு என்கின்றனர். ஜீவராசிகள் அனைத்தும் விநாயகருக்குள் அடக்கம் என்பதால் பெரிய வயிறு அவருக்கு இருக்கிறது. இதை உணர்த்தும் வகையில் இந்த விளக்கு சற்று அகலமாகவே செய்யப்பட்டிருக்கிறது. இவ் விளக்கில் அதிக எண்ணெய் பிடிக்கும் என்பதால் நீண்ட நேரம் எரியும்.

லிங்க விளக்கு: சிவபெருமானின் அரூப வடிவமான லிங்கத்தின் வடிவில் செய்யப்பட்ட விளக்கு லிங்க விளக்கு. சிவன் அக்னி வடிவமானவர் என்பதால் அவரது கோமுகத்தில் நெய்விட்டு விளக்கு ஏற்றலாம். இதிலேயே நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் ஐந்து திரிகள் போடும் விளக்குகளும் உள்ளன.

தேங்காய் தீபம்: தேங்காயானது சிவபெருமானை போலவே 3 கண்களுடன் இருக்கிறது. எனவே, இதை சிவ அம்சமாகவே கருதி வழிபடுவர். இதனை வலியுறுத்தும் வகையில் தேங்காய் வடிவத்தில் தீபங்கள் வந்துள்ளன. இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் மனதிலுள்ள தீய குணங்கள் மறையும் என்பது நம்பிக்கை.

திருமலை தீபம்: தினம்... தினம்.. திருப்பதிக்கு சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது என்றால் சாதாரண விஷயமா? அவரை தினமும் வீட்டிலேயே எளிதில் தரிசனம் செய்வதற்கு வசதியாக வந்துள்ளது திருமலை தீபம். இதன் உச்சியில் வெங்கடாசலபதியின் வடிவம் இருக்கிறது.
arunkumsr

எழுதியவர் : (23-Feb-13, 11:05 pm)
சேர்த்தது : S.RAVINDRAN
பார்வை : 186

மேலே